1953-ம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள்.
அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின் குடும்பம் படும் அவலங்களை அவரால் காணப் பொறுக்கவில்லை.
நெய்த துணிகள் யாவும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. குடும்பங்கள் பசியால் வாடினர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலை.
இதனால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை ஏற்பட்டது. சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டனர்.
முன்பு தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கதர் மூட்டையை தலையில் சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்றார்.
அதேபோன்று ஒரு எண்ணம் அறிஞர் அண்ணாவின் மனதிலும் உதித்தது.
கழகத் தலைமை (திமுக) ஒன்று கூடி கைத்தறித் துணிகளை விற்று அதனைக் கொண்டு நெசவாளர்களின் துயர் துடைக்க முடிவு செய்தனர்.
விற்பனை செய்வதற்கு முதற்கட்டமாக திருச்சி மாநகரத்தை தேர்ந்தெடுத்தனர்.
“திருச்சியில் யார் துணிகளை விற்பது?” என்ற கேள்வி எழுந்தபோது “திருச்சியில் நானே சென்று விற்கிறேன்” என்று அறிஞர் அண்ணா அறிவிப்பு செய்தார்.
கழகத் தொண்டர்களுக்கிடையே இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும், மிகுந்த எழுச்சியையும் உருவாக்கியது.
கழகத் தொண்டாற்றுவதற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நாகூர் ஹனிபா இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.
அண்ணாவிடம் சென்று “நானும் உங்களோடு இணைந்து பாடிக் கூவி கைத்தறித் துணிகளை விற்கத் தயார்” என்றார்.
கண்களில் பெருமிதம் பொங்க அறிஞர் அண்ணாவும் நாகூர் ஹனிபாவின் முதுகில் செல்லமாகத் தட்டி “சபாஷ்” என்றார்.
“ஹனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்று தந்தை பெரியார் முன்னொரு சமயம் கூறியது அறிஞர் அண்ணாவின் நினைவுக்கு வந்தது.
ஊர் ஊராகச் சென்று கூவி விற்பதற்கு கம்பீர குரல்வளம் படைத்த நாகூர் ஹனிபாவைவிட வேறு பொருத்தமான ஆள் கிடையாது என்ற முடிவுக்கு வந்த அறிஞர் அண்ணா உடனே அவரை அழைத்துக் கொண்டு திருச்சியில் கைத்தறித் துணிகளை வீதி வீதியாக விற்றார்.
குறிப்பு: திருச்சி தெப்பக்குளம் அருகே அறிஞர் அண்ணா, நாகூர் ஹனிபா, அன்பில் தர்மலிங்கம் முதலானோர் வீதியில் நின்று கைத்தறித் துணிகளை கூவிக் கூவி விற்கும் காட்சி.
நன்றி – நாகூர் மண்வாசனை இணையம்.