முத்தமிழிலும் மகத்தான பங்களிப்பாற்றிய குயிலன்!

தமிழ்க் கவிஞரும், எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் கு. இராமலிங்கம் (புனைப்பெயர் குயிலன்) தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
 
முகவை ராஜமாணிக்கம், கவிஞர் தமிழ்ஒளி ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அமைத்தவர்.
 
இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி என்ற சிற்றூரில் குருமூர்த்தி பிள்ளை – வெயில் உவந்தம்மாள் ஆகிய இணையரின் மகனாகப் பிறந்தார்.
 
வாழ்க்கைச் சூழலால் ஆறாம் வகுப்புவரைதான் படிக்க இயன்றது.
 
பிழைப்புக்காக சிலகாலம் பர்மா சென்று மீண்டும் தமிழகம் வந்தார்.
 
துவக்கத்தில் காங்கிரசு கட்சியில் இருந்த இவர் பின் பொதுவுடமையாளராக மாறி, கட்சிப் பணியில் இணைத்துக் கொண்டார்.
 

குயிலனின் ‘காக்கையும் மனிதனும்’ எனும் முதல் கவிதை, அவரது பதினைந்தாவது வயதில், வ.ரா. ஆசிரியராக இருந்த ‘பாரத தேவி’ இதழில் வெளியானது.

தொடர்ந்து ‘சுதேசமித்திரன்’, ‘திருமகள்’, ‘இந்திரா’, ‘மாலதி’, ‘ஹிந்துஸ்தான்’, ‘கல்வி’, ‘ஜனசக்தி’, ‘தொழிலாளர் உலகம்’, ‘முத்தமிழ் மலர்’, ‘தியாகி’, ‘சக்தி’, ‘நவயுவன்’, ‘தென்றல்’, ‘திராவிடநாடு’ உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதினார்.

சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல்வேறு நூல்களை எழுதினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார் குயிலன். மனைவி சீதாலக்ஷ்மியுடன் இணைந்து ‘சீதாலக்ஷ்மி குயிலன்’ என்ற பெயரில் பல படைப்புகளை எழுதினார்.

குயிலன், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, வடமொழியிலிருந்து தமிழுக்கு எனப் பல நூல்களை மொழிபெயர்த்தார். வடமொழி நூலான விவேக சூடாமணியைத் தமிழில் கவிதை நடையில் தந்தார்.

குயிலனின் மொழிபெயர்ப்பில் வெளியான எமிலி ஜோலோவின் ‘தெரசா’ குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பு நூலாக அறியப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் குயிலனின் படைப்புகள் வெளியாகின.

 
1947-ல் ‘செங்குமுதம்’ எனும் குறுங்காப்பியத்தை குயிலன் என்னும் புனைபெயரில் எழுதினார். எமிலி ஜோலோ எழுதிய தெரசா, பி.எஸ்.பெக்சன் எழுதிய ‘தி பேன்ட் மைன்ட்’ ஆகிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
 
வடமொழி நூலான விவேக சூடாமணி என்ற நூலைத் தமிழில் கவிதை நடையில் மொழிபெயர்த்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்களின் வசனங்களைத் தமிழ் மொழி மாற்றாக எழுதியிருக்கிறார்.
 
17 படங்களில் 52 பாடல்களை எழுதியுள்ளார். இவர் மொத்தம் 56 உரைநடை நூல்கள், ஒன்பது புதினங்கள், ஏழு கவிதை நூல்கள், இரண்டு நாடகங்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்புகள் என இவர் எழுதிய நூல்கள் 116 ஆகும்.
 
இதழியல் பணிகள்
 
சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணையில், அதன் வெளியீடாக வெளி வந்த ‘மாலதி’ என்ற வார இதழ், 1946-ல் இலக்கிய மன்றம் இதழ் ஆகியவற்றுக்கு ஆசிரியராக இருந்தார்.
 
பொதுவுடமைக் கட்சியில் இணைந்தபின் 1948-ல் ‘தென்றல்’ என்ற இதழை பொதுவுடமை கொள்கை தாங்கிய இதழாகத் தொடங்கினார்.
 
‘இலக்கிய மன்றம்’ இதழின் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார்.  ‘நூலகம்’ இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
 
பொதுவுடமை கட்சி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில், முன்னணி என்ற அரசியல் வார இதழைத் தொடங்கினார்.
 
இதில் இவர் எழுதிய ‘மஞ்சள் பெட்டியில் மண்ணைப் போடுங்கள்’ என்ற அரசியல் தலையங்கத்தால் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகி வழக்கில் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்கள் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தார்.
 
பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.
 
1961-ல் ‘குயிலன் பதிப்பகம்’ என்ற பதிப்பகம் தொடங்கிப் பல நூல்களை வெளியிட்டார். பல எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.


திரைப்படம்

குயிலன் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான படங்களின் தமிழ் வடிவத்திற்கு வசன ஆசிரியராகப் பணியாற்றினார். ஏ.எல். நாராயணனால் ‘உலகம்’ என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.

மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய தஞ்சை ராமையாதாஸ், கம்பதாசன், புரட்சிதாசனுக்குப் பின் அதிகப் படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியவர் குயிலன்.

அரபு நாட்டு அழகி, அருமைத் தங்கை அபிராமி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆசை மகன் ஆகிய படங்கள் உள்பட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

இலக்கியப் பணி

ஒரு கிராமம் விழித்துக்கொள்கிறது, பெண்களுக்கு உதவி உள்ளிட்ட பல நூல்களையும், பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் உள்ளிட்ட நாவல்களையும் பல கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

குயிலன் எழுதிய திரைப்பாடல்களை, திருப்பூர் அகிலா விஜயகுமார் மற்றும் புதுவை ஜெ. அபுபக்கர் ஹனிபா இருவரும் இணைந்து ‘கவிஞர் குயிலன் திரை இசைப் பாடல்கள்’ என்ற தலைப்பில் தொகுத்தனர். மணிவாசகர் பதிப்பகம், 2015-ல் அதனை நூலாக வெளியிட்டது.

மரபுக் கவிதையில் தேர்ந்தவராக விளங்கிய குயிலன், தமிழின் குறிப்பிடத்தகுந்த திரைப்பாடல்களைத் தந்த பாடலாசிரியராக அறியப்படுகிறார்.

குயிலனின் படைப்புகள் பற்றி நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, “குயிலன் அவர்களின் கவிகளில் நல்ல சொல்லாட்சியும், கற்பனை ஆர்வமும் நிறைந்திருக்கின்றன” என்று மதிப்பிட்டார்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக குயிலன் மதிப்பிடப்படுகிறார்.

Comments (0)
Add Comment