ஸ்மார்ட் போன், இணையதள வசதியில்லாமல் வாழும் புடின்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நிகராக, இன்று உலகில் வலம்வரும் தலைவர் விளாடிமிர் புடின்.

எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவுக்கு போட்டியாக இருக்கும் நாடு ரஷ்யா. துப்பாக்கி முதல் ராக்கெட் வரை, கம்ப்யூட்டர் முதல் அணு உலைகள் வரை எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவோடு போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வருகிறது ரஷ்யா.

ஆனால், அந்நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினிடம் ஒரு ஸ்மார்ட் போன்கூட கிடையாது. ஸ்மார்ட் போன் மட்டுமல்ல ஒரு சாதாரண செல்போனைக்கூட புடின் வைத்துக்கொள்வதில்லை.

அதேபோல் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்திலும் புடின் இல்லை. மொத்தத்தில் இணையதள வசதியே இல்லாமல் இருக்கிறார் விளாடிமிர் புடின்.

இணையதளத்தையோ, ஸ்மார்ட்போனையோ வைத்திருந்தால் அமெரிக்கா தன்னை உளவு பார்த்துவிடும் என்ற பயம்தான் இதற்கு காரணம்.

ஒருவகையில் செல்போன்கள் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் ஏஜெண்டுகள் என்பது அவரது வாதம்.

தான் செல்போன்களைப் பயன்படுத்தாதது மட்டுமின்றி, தனது அதிகாரபூர்வ இல்லமான கிரம்ளின் மாளிகையிலும் செல்போன்களைக் கொண்டுசெல்ல தடை விதித்துள்ளார் விளாடிமிர் புடின்.

அவரது கிரம்ளின் மாளிகையில் சாதாரண தகவல் தொடர்புக்கு லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளை மட்டுமே வைத்திருக்கிறார்.

2018-ம் ஆண்டு மாணவர்களுடன் புடின் உரையாடியபோது அவர் ஸ்மார்ட்போன்களை வைத்துக்கொள்ளாததைப் பற்றி மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு நவீன தொழில்நுட்பம் தனக்கு சௌகரியமாக இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தான் இணையத்தை அரிதாகவே பயன்படுத்துவதாகக் கூறிய அவர், இணையதளம் பாதி ஆபாசமாக இருக்கிறது.

அதோடு, மற்றவர்களைப் பற்றி துப்பறிய ஐஐஏ கண்டுபிடித்திருக்கும் ரகசிய திட்டம் இது என்றும் கூறியிருக்கிறார்.

தன் பாதுகாப்பு விஷயத்தில் மற்ற நாடுகளின் தலைவர்களைப் போல் அல்லாமல் மிகவும் கவனமாக இருக்கிறார் விளாடிமிர் புடின்.

அவரது இந்திய பயணத்தின்போது பாதுகாப்பு விஷயத்தில் காட்டும் கவனம் பற்றி நன்றாக தெரிந்தது.

இந்தியாவுக்கு சாதாரண விமானத்தில் வராமல் அதிக பாதுகாப்பு கொண்ட Il-96-300PU விமானத்தில் வந்தார் விளாடிமிர் புடின்.

பறக்கும் கிரம்ளின் மாளிகை என்று அறியப்படும் இந்த விமானம் அமெரிக்க அதிபரின் ‘ஏர்போர்ஸ் 1’ விமானத்துக்கு இணையானது.

எதிரிகளின் ராடர்களையும், ஏவுகணைகளையும் செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.

அத்துடன் சிறிய நவீன ஜிம், ஆலோசனை நடத்துவதற்கான கான்பிரன்ஸ் ரூம், பார், குளியலறை, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த விமானத்தில் உள்ளன.

புடினின் விமானம் பாதுகாப்புடன் இருந்தாலும், எதிரிகளை குழப்புவதற்காக அவர் வெளிநாடு பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும், அவரது விமானத்துடன் அதே போன்ற வேறு 2 விமானங்களும் விமான நிலையத்தில் இருந்து புறப்படுவது வழக்கம்.

எந்த விமானத்தில் புடின் பயணிக்கிறார் என்று தெரியாமல் எதிரிகளைக் குழம்பவைக்க இந்த தந்திரம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் அவருக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும், தங்களை ‘மஸ்கடீர்ஸ்’ என்று அழைத்துக்கொள்ளும் ஒரு சிறப்பு பாதுகாப்பு படை, புடினுடனேயே ரஷ்யாவில் இருந்து உடன் வந்துள்ளது.

புடினின் பாதுகாப்புப் பணிகளை அவர்களே மேற்கொண்டு வருகிறார்கள். ரஷ்ய அதிபரின் பாதுகாப்புக்கான இந்தப் படை 1996-ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

இந்திய பயணத்தின்போது புடினுக்கான உணவைக்கூட ரஷ்யாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சமையல் கலை நிபுணர்களே சமைத்தார்கள்.

அதற்கான உணவுப் பொருட்களைக்கூட கிரம்ளினில் இருந்து எடுத்து வந்திருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும், இவர்களும் அவருடன் பயணிப்பது வழக்கமாம்.

மொத்த்ததில் பாதுகாப்பு விஷயத்தில் தான் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார் விளாடிமிர் புடின்.

– பி.எம். சுதிர்

Comments (0)
Add Comment