பண்புக்கு இன்னொரு பெயர் ஏ.வி.எம். சரவணன்!

மிக மூத்த தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை உருவாக்கியவர் ஏ.வி.மெய்யப்பன் என்றால், அதைத் தொடர்ந்து நிர்வகித்து, அதை பெரும் புகழடையச் செய்த மெய்யப்பனின் புதல்வர்களில் முதன்மையானவர் ஏ.வி.எம். சரவணன்.

ஏ.வி.எம். சரவணன் என்றாலே, எப்போதுமே கையை கட்டியபடி அவர் நிற்கும் தோற்றம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.

பத்திரிகைத் துறையில் நான் பலமுறை சந்தித்த சினிமா பிரபலங்களில், ஏ.வி.எம். சரவணனும் ஒருவர்.

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள அவருக்கான தனி அறையில் பலமுறை சந்தித்தபோது, கேஷுவலாக மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.

குறிப்பாக, காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாவில் அவருடைய ஏ.வி.எம் ஸ்டுடியோ துவங்கப்பட்ட போது, துவங்கப்பட்ட இடத்திற்குச் சென்று அது பற்றி நான் குமுதத்தில் எழுதினேன். அப்போது, வழக்கம்போல ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியவர், ஃபோனிலும் அழைத்து அதே மிருதுவான வார்த்தைகளோடு நன்றி தெரிவித்தார்.

பண்புமிக்க மனிதரான ஏ.வி.எம் சரவணன் அவருக்கு எளிய அஞ்சலி.

கீழே அவர் பாராட்டிய தேவகோட்டை ரஸ்தா ஸ்டுடியோ கட்டுரை.

****

திறமையும் கடும் உழைப்பும் இருந்தால் எங்கும் கனவை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாய்க் கிடக்கிறது அந்த வெறிச்சோடிய இடம்.

காரைக்குடியிலிருந்து தேவகோட்டை போகிற வழியில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் தேவகோட்டை ரஸ்தா.

ரயில்வே கேட்டோரம் இறங்கி கொஞ்சம் நகர்ந்தால் கருப்பு படர்ந்த காம்பவுண்ட். உள்ளே சிதறிக்கிடக்கும் சிமெண்ட் கலவை செட்டிங்குகள். பச்சை மண்டிய நிலம். சுற்றிலும் நடிகர், நடிகையர் வசித்த அந்தக் காலக் கட்டடங்கள்.

சுள்ளென்று வெக்கையடிக்கும் இந்த மண்ணிலா ஒரு சினிமா ஸ்டூடியோ இருந்தது? ஆச்சரியம் ஏறுகிறது கண்களில்.

வாரி வயலார் வீடு.

காரைக்குடியில் அப்போது பிரபலமான இந்த வீட்டுப் பிள்ளை ஏ.வி.மெய்யப்பன்.

கல்லுக்கட்டியில் அவர் வைத்திருந்த ஏ.வி.எம் அண்ட் சன்ஸ் தான் நகரிலேயே முதலில் டியூப்லைட் போட்ட கடை.

சைக்கிள், கார் உதிரி பாகங்கள் விற்றாலும், மெய்யப்பனுக்கு இசைத்தட்டு விற்பனை பிடித்திருந்தது.

சென்னை வந்து ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ துவக்கிய பிறகு படம் எடுக்கும் ஆசை வந்துவிட்டது.

1934-இல் சரஸ்வதி சவுண்ட் புரடக்‌ஷனைத் துவக்கி கல்கத்தாவுக்கு நடிகர்களை அழைத்துப்போய் மூன்று படங்கள் எடுத்தார். மூன்றும் தோல்வி. சிலரைப் பங்குதாரர்களாக்கி பிரகதி ஸ்டூடியோவைத் துவக்கி எடுத்த தெலுங்குப் படம் ‘பூகைலாஷ்’. படம் வெற்றி.

தொடர்ந்து டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த ‘சபாபதி’, டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வள்ளி’ பெரிய ஹிட். ஐந்து மடங்கு லாபம்.

சந்தோஷத்துடன் காஷ்மீர் போய்விட்டு வருவதற்குள் பங்குதாரர்களுக்குள் பிரச்சனை வந்து பிரகதி ஸ்டூடியோ கையை விட்டுப் போயிற்று.

யோசித்தார் ஏ.வி.எம். நாமே ஒரு ஸ்டூடியோ ஆரம்பித்தால் என்ன? அதிலும் நம்முடைய சொந்த ஊரில். உடனே அதற்கான முயற்சியில் இறங்கினார்.

காரைக்குடியில் அப்போது தனியார் தான் மின்சார வினியோகம். கேட்டதும் ஒப்புக்கொண்டார்கள்.

தேவகோட்டை ரஸ்தா ஓரமாக ஒரு நாடகக் கொட்டகையைக் கட்டியிருந்தார். அங்கு ஜமீன்தாராக இருந்தவர் சோமநாதன் செட்டியார்.

சுற்றிலும் இருபது கிரவுண்ட் அளவுக்கு பொட்டல். பக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன்.

நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகங்கள் நடந்த அந்த இடம் பிடித்துவிட்டது. அப்போது அதற்கு மாத வாடகை மூவாயிரம் ரூபாய்.

அதிலேயே ஐம்பது கீற்று வேய்ந்த குடிசைகள்; நடிகர், நடிகையர் தங்குமிடம் அதுதான்; அதிலேயே பாத்ரூம், மேக்கப் ரூம், கேண்டீன் எல்லாம் தயார்.

கதை தேடிக்கொண்டிருந்த ஏ.வி.எம். சென்னைக்கு வந்தபோது பார்த்த நாடகம் ‘நாம் இருவர்’.

சமூகப் பிரச்சினை, இடையிடையே பாரதி பாடல்கள். உடனே அதைப் படமாக்க முடிவாயிற்று.

தேவகோட்டை ரஸ்தாவில் எளிமையான ஸ்டூடியோவில் படப்பிடிப்பு துவங்கியது. ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் எதிரே ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

இன்னொருபுறம் ஏ.வி.எம் தனது குடும்பத்துடன். ஆறு மாதங்கள் படப்பிடிப்பு. பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நடக்கும் படப்பிடிப்பு. திறந்தவெளியில் பாடல் ரெக்கார்டிங்.

அப்போது இங்கு வந்து தங்கி, பாரதி பாடலைப் பாடியவர் டி.கே.பட்டம்மாள். முழுக்கப் பாரதி பாடல்கள். சுதர்சனம் இசை.

1947 ஏப்ரலில் படம் முடிந்து ‘தேவகோட்டை ஸ்டூடியோ’வில் தயாரான ‘நாம் இருவர்’ வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்படமானது. பார்த்து பிரமித்து அதை டைரக்ட் செய்த ஏ.வி.எம்முக்கு கடிதம் எழுதினார் கல்கி.

அடுத்து அங்கேயே ‘வேதாள உலகம்’ படம். தேவகோட்டை ரஸ்தாக் குடிசைகளில் தங்கி நடனமாடியவர்கள் லலிதாவும், பத்மினியும்.

இதைத்தொடர்ந்து காந்தி பார்த்து ரசித்த ‘ராம ராஜ்ஜியம்’ என்கிற டப்பிங் படம் எல்லாம் வெற்றி.

“பத்து ஏக்கர் பரப்பளவில் அப்போது ஸ்டூடியோ இருந்தது. எதிரே ஒரு கட்டடத்தில் நாங்கள் குடியிருந்தோம்.

அப்பா வைத்திருந்த ஆஸ்டின் காரையே ட்ராலியாகப் பயன்படுத்துவார்கள்.

இடையில் ஒரு தீ விபத்து நடந்தது. வசதி குறைவான இடத்தில் வெற்றிப் படங்களை எடுத்ததும் ஜமீன்தார் சட்டென்று வாடகையைப் பத்தாயிரமாக உயர்த்தினார். உடனே சென்னைக்கு ஸ்டூடியோவை மாற்ற முடிவு செய்துவிட்டார் அப்பா.

சென்னையில் தோல் பதனிடும் தொழிற்சாலையாக மேடு, பள்ளமாகக் கிடந்த இடத்தை (தற்போது உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ) வாங்கி லாரிகளில் செட்டுகளைப் பிரித்து வந்தோம்.

இப்போதும் நாங்கள் எடுக்கிற முதல் படக்காட்சியை தேவகோட்டையில் இருந்து கொண்டு வந்து போட்ட செட்டில் தான் ஆரம்பிக்கிறோம்.”

– என சொந்த ஊரின் மீதான செண்டிமென்ட்டுடன் மென்மையாகச் சொன்னார் ஏ.வி.எம். சரவணன்.

இரண்டே கால் வருஷத்தில் இரண்டு படங்கள், ஒரு டப்பிங் படம் எடுத்த அந்த ஸ்டூடியோவின் மதில் சுவரில் சினிமா போஸ்டர்கள் நிறைந்திருக்கின்றன.

செம்மண் பரவி வெப்பம் அலையடிக்கிற இடத்தில், ஒரு கனவுத் தொழிற்சாலையை உருவாக்கி வெற்றியடைந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் காலம், இடத்தை மீறி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த வாசகம்;

‘முயற்சி திருவினையாக்கும்.’

அந்த நம்பிக்கை பலித்திருக்கிறது – தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள சாதாரண பொட்டல் காட்டிலும் கூட.

– மணாவின்  ‘தமிழகத் தடங்கள்’ நூலிலிருந்து…

Comments (0)
Add Comment