நூல் அறிமுகம்:
இந்நூல் ஒரு சாகசக்காரரின் சரிதை. ஓட்டப்பிடாரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என அலைந்து, தன் எட்டுப் பிள்ளைகளுக்கும் தன் செல்வத்தைக் கொடுத்து விட்டு, வேடிக்கை மனிதராக, வீழ்ந்திருக்க வேண்டிய ஓர் இரண்டாம் நிலைப் பிளீடரின் வாழ்வு, சுதேசியத்தால், தணியாத சுதந்திர தாகத்தால், திசைமாறி பயணித்த கதை.
சுதேசியம் எனும் புயலை, இராமகிருஷ்ணானந்தர் அவர் மேல் ஏவி விட, பாரதியும், திலகரும் அவர் மேல் தேசிய உணர்வு எனும் நெருப்பைப் பற்றவைக்க,
சுப்பரமணிய சிவா எனும் உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கித் தேச விடுதலையே தன் வாழ்வாய் எண்ணி, பொருளாதார சுதேசியத்தை முன்னிறுத்தி, அந்நியருக்கு எதிராய், அலைகடலில் இரண்டு சுதேசிக் கப்பல்கள் ஓட்டியவரின் கதை.
பொதுவுடைமைக் கொள்கை இங்கு வேர் ஊன்றும் முன்பாகவே, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களைப் போராட்டக் களத்தில் நிறுத்தித் தலைமையேற்று, அவர்தம் உரிமைகளை வென்றெடுத்த கதை.
மேடைத் தமிழைப் பாமரர்களுக்குக்கும் கொண்டு சேர்த்து, அவர்கள் உள்ளத்தில் சுதந்திரக் கனலை எழுப்பி, ஒருங்கிணைத்தவரின் கதை.
சிறைப்பட்டு, செக்கிழுத்து, சூழ்ந்திருந்த உறவுகளால் கைவிடப்பட்டுச் சென்னை வீதிகளில் மண்ணெண்ணை விற்று, குடும்பம் நடத்திய சோகநாயகரின் கதை.
செல்வம் எல்லாம் இழந்தும் மனம் சிதையாத, நிலை குலையாத, உறுதியுடன் தமிழுக்கும், தன் இனமக்களுக்கும் மெய்யறிவு, மெய்யறம் போதித்தவரின் கதை.
பண்டிதர்கள் போல் திருக்குறளை ஆராயாமல், அதனைக் கேள்விக்குட்படுத்தி, உரை எழுதி ஆராய்ந்தவரின் கதை.
திருக்குறளுக்கு மணக்குடவர் உரையின் சிறப்பை மாநிலம் அறியச் செய்தோனின் கதை.
தன் உரையினும் சிறந்ததாய் எண்ணித் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணரின் உரையினைப் பதிப்பித்த பேருள்ளம் கொண்டோனின் கதை.
இன்னிலைக்கு அரும்பத அகராதியுடன் விருத்தியுரையினை விரித்து உரைத்தோன் கதை.
ஜேம்ஸ் ஆலனின் அறிவுக் களஞ்சியத்தைத் தமிழருக்கு அறிமுகம் செய்தோனின் கதை.
மறைந்த தன் மனைவியின் பெருமை கூறும் நூலிற்கு அரும்பதவுரை எழுதிப் பதிப்பித்தோனின் கதை.
ஈரோட்டுப் பெரியாருடன் இணைந்து, அபிராமணர்களை ஒருங்கிணைத்துப் போரட்ட வடிவத்தை ஒருங்கிணைத்தவரின் கதை.
பெண்ணுரிமை என்றால் பெரிதும் அறியப்படாத சமூகத்தில் அந்நாளிலேயே பெண் உரிமை, பாலின சமத்துவம் பேசியவரின் கதை.
பாரதியின் சொல்லைச் செயலாக வாழ்ந்து காட்டியவரின் கதை.
சைவ சித்தாந்திற்கு சிவஞானபோத உரையால், புத்தொளிப் பாய்ச்சியவரின் கதை.
அவர் கதையைக் கவிதைத் தேனில் தோய்த்துத் தந்துள்ளேன்.
தமிழின் உயர்விற்கும், தமிழின உயர்வுக்குமாய் தன்னையே அளித்த “தமிழர் தலைவரை” தமிழகம் முழுதாய் உணர்ந்து, கொண்டாட,என்னால் ஆன எளிய முயற்சியே இந்நூல்.
இந்நூலில் எழுதாமல் விடுபட்டுப்போன வ.உ.சி. வாழ்வின் சம்பவங்களும்/மனிதர்களும் ஏராளம்.
‘தமிழகத்தார் மன்னன்’ எனப் பாரதியால் புகழப்பட்ட ‘செம்மல் வ.உ.சி’ அவர்கள் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இந்நூல்.
இத்துணை பெருமைகள் கொண்ட பெருமகனாரின் பெயரை ஒரு பல்கலைக் கழகத்திற்கு சூட்ட வேண்டும் என்பதும், அன்னாரின் பெயரால் ‘இருக்கை’ ஒன்று அரசால் அமைக்கப்பட்டு, அவரின் புகழ் மேலும் ஓங்கவேண்டும் என்பதே என் கனவு, கனவு மெய்ப்படும் என நம்புகிறேன்.
நூல் உருவாக்கத்திற்கு உதவிய அனைத்து தோழர்களுக்கும், அற்புதமாக அட்டைப்பட ஓவியம் வரைந்து தந்த கலைமாமணி ஓவியர் ஜீவா அவர்களுக்கும்,
உள்பக்க ஓவியமாக வ.உ.சி-யின் உயிர்ததும்பும் ஓவியம் வரைந்து தந்த ஓவியர் திரு. சுந்தரன் அவர்களுக்கும், அன்புடன் அணிந்துரை வழங்கிய வரலாற்று ஆய்வாளர், பாளையங்கோட்டை திரு.செ.திவான் ஐயா அவர்களுக்கும்,
இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி மேனாள் முதல்வர், வரலாற்று ஆய்வாளர், முதுமுனைவர் திரு.வி. வெங்கட்ராமன் அவர்களுக்கும்,
என் உளமார்ந்த நன்றிகள்.
அழகிய வடிவில் பதிப்பித்து வெளியிட்டுள்ள பவித்ரா பதிப்பக உரிமையாளர், நண்பர் பிரகாஷிற்கும் என் நெஞ்சம் நிறை நன்றி.
இதோ, இனி உங்கள் கையில் தணியாத சுதந்திர தாகத்துடன் வாழ்ந்தோனின் வரலாறு.
****
வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையில், உஸ்மான் அலி எழுதிய ‘தணியாத தாகம்’ (பவித்ரா பதிப்பகம்) நூலின் முன்னுரையில் இருந்து ஒரு பகுதி.
உஸ்மான் அலி
9486101117
kkvusman@gmail.com