கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மிளிர்ந்து வருவது பாராட்டுக்குரிய ஒன்று.
நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தான் மேற்கொண்ட துறையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் இடைவிடாது பயணித்து, வெற்றியை அடையும் பெண்களை ‘சாதனைப் பெண்கள்’ என்று கொண்டாடுகின்றோம்.
வயது, வறுமை என பல தடைக் கற்களைத் தகர்த்தெறிந்து, ‘சிகரம் தொட்ட பெண்கள்’ ஒரு சிலரைப் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
சரஸ்வதி: இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான இவரை, அவரின் கணவர் இளமையிலேயே விட்டுவிட்டுச் செல்ல, செய்வதறியாது கலங்கி நின்றார் சரஸ்வதி.
பெரிய குடும்பப் பின்னணியோ, கல்வியறிவோ இல்லாத நிலையில், வெளி உலகச் சூழலையே அறியாதவர் இவர்.
இத்தகைய சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தவருக்கு ஆதரவு கரம் நீட்டினார் அவரது அண்ணன்.
சினிமாவில் டெய்லராக பணிபுரிந்து கொண்டிருந்த அவர், தனக்கு உதவியாளராகப் பணி புரியும் படியும் அதன்மூலம் வறுமையிலிருந்து மீள முடியும் என்றும் அறிவுரை வழங்கினார்.
வேறு வழி எதுவும் தெரியாததால், சரி என ஒப்புக்கொண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் சரஸ்வதி.
தெரியாத துறை என்றாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தவரின் தனித்திறனைக் கண்டறிந்தார், அந்த திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர்.
நன்றாகப் புடவைக் கட்டுகிறாய் எனக் கூறிய அவர், சரஸ்வதிக்கு saree draper என்ற அந்தஸ்தைக் கொடுத்து விளம்பரத் துறைக்கு அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, திரைத் துறையிலும் தனது தனித்திறனை வெளிப்படுத்த ஆரம்பித்தார் சரஸ்வதி.
முதன் முதலில் தனியாக பணிபுரிய தொடங்கியபோது கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு பயந்து நடுங்கியபடி அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் ஒருவாராக மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல மெல்ல அந்தச் சூழலில் தன்னை இணைத்துக் கொண்டார் சரஸ்வதி.
தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் பெண்களின் அழகை, நாம் வியந்து பார்க்கும் பொழுது அதன் பின்னே இருப்பது சரஸ்வதி போன்ற கலைஞர்களின் கை நேர்த்தி தான்.
நடிகைகளின் தேதியை விட சரஸ்வதியின் தேதி கிடைப்பது கடினமாக உள்ளது எனும் அளவிற்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளார் அவர்.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, அனைத்து நடிகைகளுடனும் பணிபுரிந்து, தனது பாதையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சரஸ்வதி.
கிட்டம்மாள்: இந்த ஆண்டுக்கான மாநில பளுத் தூக்கும் போட்டிகள் கோவை மாவட்டம், குனியமுத்தூரில் நடைபெற்றது.
இதில் பல்வேறு நிலைகளில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
இதில், open category பிரிவில் பங்கேற்றார் கிட்டம்மாள் என்னும் 82 வயது மூதாட்டி.
பொள்ளாச்சியை சேர்ந்த இவர், அரங்கினுள் நுழைந்தபோது அனைவரின் முகங்களிலும் ஆச்சரியம்.
50 கிலோ எடையை அசாதாரணமாக தூக்கி, ஐந்தாம் இடத்தைப் பிடித்து எல்லோரையும் வியக்க வைத்தார்.
இது அவரது முதல் முயற்சி என்பதும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெண்கள் 17 பேரும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கிட்டம்மாள்.
இவரது பேரன்கள் இருவரும் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களைப் பார்த்து, தனக்கும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டதாகவும், அவர்களின் உதவியுடன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சாதாரணமாகவே தான் 25 கிலோ எடையுள்ள அரிசி பையை தூக்குவதாகவும், 25 குடம் தண்ணீரையும் சுமந்து வருவதாகவும் கூறிய அவர்,
தான் மிகுந்த சுறுசுறுப்பானவர் என்றும் வயதானவர் என்ற எண்ணம் எப்பொழுதும் தோன்றியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சிறு தானியங்களையும் காய்கறிகளையும் விரும்பி உண்ணும் இவர், எதிர்காலத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து அவரது கணவர் கருத்து தெரிவிக்கையில், பெண்கள் சமைத்து தரும் உணவை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என அறிந்து நடப்பது தான் ஒரு கணவரின் கடமை என்றும் தனது மனைவி இன்னும் பல சாதனைகள் படைப்பார் என்றும் தெரிவித்தார்
துளசி கவுடா: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள honaali கிராமத்தை சேர்ந்த பழங்குடி இனத்தவர் தான் துளசி கவுடா. இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலராவார்.
பெண்களுக்குக் கல்வியறிவு வழங்காத சமூகத்தில் பிறந்தததால், துளசி கௌடாவுக்கு பள்ளிக்கூடம் செல்ல வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சிறுவயதிலேயே தந்தை இறந்ததால் காடே அவருக்கு வீடாகி போனது. அதனால் இயற்கையை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் தன் கவனத்தை செலுத்த தொடங்கினார்.
தனது 12 வது வயதில், மரம் நடும் பணியைத் துவக்கிய அவர், ஏறத்தாழ 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
கடந்த 60 வருடங்களில் பல்வேறு இடங்களில் வெறும் காலுடன் பயணம் மேற்கொண்ட இவர், எந்தவித உபகரணங்களும் இன்றி, தன் கைகளாலேயே இப்பெரும் பணியைச் செய்துள்ளார்.
அதோடு, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வனத்துறையின் நாற்றுப் பண்ணைகளைக் கவனித்து வந்தார்.
இயற்கையைப் பேணிப் பாதுகாப்பதில் மகத்தான பங்களிப்பைச் செய்த இந்த பெருமைக்குரியவர் இறுதிவரை பழங்குடியினர் உடையிலேயே வலம் வந்தார்.
வனப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய இவருக்கு பல்வேறு அமைப்புகளும் விருதுகளை வழங்கி கௌரவித்தன.
இந்திய அரசும் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீயை அவருக்கு வழங்கிப் பெருமை சேர்த்தது.
– வாணி.எஸ்