சக மனிதர்களிடம் காட்டப்படும் அணுகுமுறை!

எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் அனுபவம்
நூலகத்துறை ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்பட விழாவில் பங்கேற்று உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியான, நிறைவு தரும் அனுபவம்.
 
இந்திரா பார்த்தசாரதி மற்றும் சுந்தர ராமசாமி குறித்த ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. பார்வையாளர்களை வசீகரித்து, ரசிக்க வைத்தது சுந்தர ராமசாமி குறித்த ஆவணப்படம். (இ.பா.வின் படம் முடிந்த பின்னரே என்னால் செல்ல முடிந்தது.)
 
எழுத்தாளர்களின் ஆளுமையை அறிந்து கொள்வது, அவர்களின் படைப்பை வாசிப்பதன் இன்னொரு பரிமாணம். சமயங்களில் அவர்களது படைப்பைவிடவும் அவர்களது இயல்பு நம்மை யோசிக்க வைக்கும்.
 
சுந்தர ராமசாமி எழுத்தாளர்களில் கவர்ச்சிகரமான ஒரு ஆளுமை. ஆகிருதிகள் தம்மில் இளையோரிடம் உரையாடுகையில் எப்படி அவர்களை கையாள்கிறார்கள் என்பது முக்கியம்.
 
ஒரு பத்தொன்பது வயதுப் பெண்ணிடம் எழுபத்தி மூன்று வயது சுரா உரையாடுகிறார்.
 
ஒவ்வொரு பேச்சிலும், அசைவிலும், உடல் மொழியிலும் அந்தப் பெண்ணை மிகவும் இலகுவாக உணர வைத்து சமதையாக உரையாடுகிறார்.
 
“எனக்கு ஒரு எண்ணமுண்டு. நான் போற ஃப்ளைட் தான் அப்படியே உடைஞ்சு தரையில விழுந்துடுமுன்னு ஒவ்வொரு முறையும் நினைப்பேன்”.
 
அந்தப் பெண் முகத்தில் சிரிப்பு. பார்வையாளர்களிடமும்தான். “அட, நம்மைப் போலதான் இவரும் யோசிப்பார் போல” என்கிற எண்ணம் அவரிடம் ஒரு இணக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
அடுத்து அவர் ஆழமான விஷயங்களை சொல்லும் போதும் அதே விதமான சவுகர்யத்துடன் உரையாடலை அவரிடம் தொடர முடிகிறது.
 
சக மனிதர்களிடம் காட்டப்படும் இந்த மாதிரியான அணுகுமுறையும், சினேகபாவமும் ரொம்பவும் கவர்ந்தது. இலக்கியம் இதைத்தானே முக்கியமாக சொல்லித் தர வேண்டும்.
 
அந்த ஆவணப்படத்தில் இறந்தபின் செய்யும் சடங்குகளை சுரா நிராகரித்ததைப் பற்றிய ஒரு பகுதி மிக அருமையாக இருந்தது. அதில் அசோகமித்திரனிடம் இதைக் கேட்கிறார்கள்.
 
அவர் சொல்கிறார்:
 
“அது…. நானும் அப்படித்தான் சொல்லி இருக்கேன். அதை… அந்த சவத்தை எதாச்சும் பண்ணியாகணும். எரிச்சுடறது ரொம்ப சவுரியம். அதோட விட்டுரணும்…. ஒருத்தன் இந்த உலகத்தை விட்டுப் போறான்னா சந்தோஷமாப் போகட்டும்… அவனை வருஷா வருஷம் கூப்பிட்டு வச்சு இதெல்லாம் பண்ணி…”
 
அசோகமித்திரனின் படைப்புகளை வாசிக்காத ஒருவருக்குக் கூட அசோகமித்திரனின் பெர்சனாலிட்டியின் ஒரு கீற்றை இது காட்டி விடும்.
 
பார்வையாளர்கள் இரண்டு மணிநேரம் லயித்துப் பார்த்தார்கள். அதன்பின் நடைபெற்ற உரையாடலில் உற்சாகமாகப் பங்கேற்றார்கள். பா.ராகவன், மனுஷ்யபுத்திரன், ஆர்.வி.ரமணி ஆகியோருடன் நானும் உரையாடினேன்.
 
இந்தத் திரையிடல் ஒரு அருமையான, புதுமையான முயற்சி.
Comments (0)
Add Comment