காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல்!

கண்ணதாசனுக்குக் கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்.
காதல் பாடல் என்றாலே அந்தப் பாடலில் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது.
 
ஆனால், கவியரசு கண்ணதாசன் காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அதுதான் அவரை கவியரசு என்று போற்ற வைக்கிறது.
 
’பாவ மன்னிப்பு’ என்ற படத்திற்காக ஒரு காதல் பாடல் வேண்டும் என்று இயக்குநர் பீம்சிங் தெரிவித்திருந்தார்.
 
இந்தப் பாடல் அனைத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த நிலையில், அந்தப் பாடலுக்கு டியூன் போட்ட எம்.எஸ்.விஸ்வநாதன், காதல் என்ற வார்த்தை இல்லாமல் எனக்கு ஒரு காதல் பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கோரிக்கை வைத்தார்.
 
கவியரசு கண்ணதாசன் ஒரு சில வினாடிகள் யோசித்தபோது அவருக்கு உடனே பகவத் கீதையில் உள்ள மாதங்களில் அவள் மார்கழி எழுதிய வரி ஞாபகத்திற்கு வந்தது.
 
உடனே அதை மனதில் வைத்து காதலையும், காதலியையும் உவமைப்படுத்தி ஒரு பாடலை எழுதினார். இதுதான் ’காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல். 
 
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப் புறா
 
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள்
 
பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை
 
– இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள வசந்தம், ஓவியம், மார்கழி, மல்லிகை, மணிப்புறா, தாலாட்டு, மாங்கனி, தென்றல் ஆகியவை காதலையும் காதலியையும் குறிக்கும் என்றாலும் ஒரு வார்த்தை கூட இந்தப் பாடலில் காதல் என்ற சொல் இருக்காது.
 
இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர் அவர்கள் ’உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி கொண்டிருந்தபோது, ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் போலவே எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்றும் நவரசம் சொட்டும் வகையில் காதல் அந்தப் பாடலில் இருக்க வேண்டும். ஆனால், காதல் என்ற வார்த்தை வரக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார்.
 
இதனை அடுத்து எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக எழுதிய பாடல் தான்  ’அவள் ஒரு நவரச நாடகம்’.
 
இந்தப் பாடலிலும் காதல் மற்றும் காதலியை உவமைப்படுத்த கண்ணதாசன் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கமாட்டார்.
 
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
 
மரகத மலர்விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
 
குறுநகை கோலத்தில் தாமரை
கோடை காலத்து வான்மழை
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
 
அருசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னைத் தந்தேன் காணிக்கை
 
மேற்கண்ட இரண்டு பாடல்களுமே கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் விரும்பி கேட்ட பாடலாக இருந்தது.
 
இந்தப் பாடல்களை ஆழ்ந்து கேட்டால், இன்றளவும் இதில் இருக்கும் உவமை ஆச்சரியத்தை வரவழைக்கும்.
 
– சந்திரன் வீராசாமி
Comments (0)
Add Comment