பீகார் தேர்தல் முடிவும் தமிழக அரசியலில் அதன் தாக்கமும்!

கவிஞர் கரிகாலன்

பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி எப்படி வெற்றி பெற்றது? என்பதற்கு மற்றவர்கள்போல் S.I.R தான் காரணம் என திருப்திபட்டுக்கொள்ள விரும்பவில்லை.

ஏனென்றால் இது தமிழக அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 65 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை பீகாரில் வாக்களித்திருப்போர் சதவீதம் கூடியிருக்கிறது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

இதற்கு காரணங்கள் உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு மற்றும் முதல்மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ் ரூ.10,000 என பெண்களின் நன்மதிப்பை நிதிஷ் பெற்றிருந்தார்.

ஒரு தசாப்தகாலமாக பீகார் அரசியலில் செல்வாக்கு செலுத்திய நிதிஷின் மீது பீகார் மக்களின் நம்பிக்கை குலையவில்லை. E. B. C எனும் ஆகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் நன்மதிப்பை பழையபடி லாலு குடும்பத்தால் பெற முடியவில்லை.

அதோடு, குர்மிகள், இயல்பாகவே பெண்கள் ஆகியோரின் வாக்குகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக இருந்தன.

லாலுவின் மூத்த மகன் தேர்தல் சமயத்தில் தனிக்கட்சி தொடங்கியதும் தேஜஸ்வி யாதவுக்கு சிறிய வகையில் பின்னடைவாக இருந்தது.

யதார்த்ததில் காங்கிரஸ் இமேஜும் ராகுல் இமேஜும் எதிரெதிர் திசையில் இருக்கின்றன.

இந்திய அளவில் அதிகாரத்தை ருசித்து காங்கிரஸுக்கு நீண்டகாலம் ஆகிவிட்டது. அது உற்சாகமற்ற கட்சியாக பலவீனமடைந்திருப்பதைக் காண முடிகிறது.

இந்தத் தேர்தலில் என்டிஏ வெற்றிபெற முக்கியமான காரணங்களுள் ஒன்று சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி.

2020 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி மீண்டும் என்டிஏவுக்கு திரும்பியது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் வென்றது.

இம்முறையும் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் முன்னேறி வருகிறது. தலித் மற்றும் EBC ஓட்டுகளைக் கவர சிராக் பஸ்வானின் உணர்ச்சிகரமான, துடிப்பான, செயல்பாடுகள் மற்றும் பேச்சும் காரணம்.

சரி, இது எந்த வகையில் தமிழக அரசியலை பாதிக்கும்?

காங்கிரஸின் செல்வாக்கின்மையை பீகார் தேர்தல் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இம்முறை அது எதிர்பார்க்கும் இலக்கத்தில் திமுகவிடம் சீட் வாங்குவதில் பின்னடைவு ஏற்படலாம்.

பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் காங்கிரஸை கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். காங்கிரஸ், விஜய் போன்ற புதிய கூட்டாளிகளை நாடவும் வாய்ப்புண்டு.

இந்தியா முழுவதும் தலித் கட்சிகளை பாஜகவால் வளைக்க முடிகிறது. ஆனால் தமிழகத்தில் முடியவில்லை.

பீகார் வெற்றிக்கு எப்படி எல்ஜேபி கட்சி முக்கிய பங்காற்றியதோ, தமிழகத்தில் வெற்றிபெற விசிகவின் பங்கு அதைவிட அதிகமாக இருக்கும்.

அதன் பேர வலிமை வரும் தேர்தலில் அதிகரிக்கும். திமுக, விசிகவிடம் இறங்கி வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

பீகாரில் லாலுவுக்கும் அவரது மூத்த மகனுக்குமான கசப்பால், கடைசி நேரத்தில் லாலு, மகனை கட்சியில் இருந்து நீக்கினார்.

இங்கு வடதமிழகத்தில் வன்னியர்களிடையே செல்வாக்கான கட்சியாகக் கருதப்படும் பாமகவிலும் அப்பா மகன் பிளவு.

பீகாரில் இதை காங்கிரஸ் அனுபவித்தது. தமிழகத்தில் இதை பாஜக எப்படி எதிர்கொள்ளும்?

தனக்கே உரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, தந்தை மகனை மிரட்டி ஓன்றாக்க முயற்சி செய்யக்கூடும்.

நிதிஷுக்கு இது கடைசி தேர்தலாக இருக்கலாம்! எனும் அனுதாபம் பீகார் மக்களிடம் இருந்தது.

ஸ்டாலினும் இதே மனநிலையில் இருக்கக் கூடும். இப்படி பீகார் நிலவரத்தோடு சில விசயங்கள் தமிழகத்துக்கு ஒத்துப்போகின்றன. சில எதிராக இருக்கின்றன.

எப்படி இருந்தாலும், பீகார் தேர்தல், தமிழக ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்திருப்பது என்னவோ உண்மை.

Comments (0)
Add Comment