மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்று வென்ற பிறகு, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நாளை (நவம்பர் – 14) களம் இறங்குகிறது இந்திய அணி.
கேப்டன் சுப்மான் கில்லுக்கும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் இந்தத் தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வலுவான அணியான தென் ஆப்பிரிக்கா, சில மாதங்களுக்கு முன்புதான் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.
அந்த உற்சாகத்துடன் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறது தென் ஆப்பிரிக்க அணி.
கேப்டன் டெம்பா பவுமாவின் தலைமையில் மிகப்பெரிய அளவில் எழுச்சியைக் கண்ட தென் ஆப்பிரிக்க அணி, கடைசி 10 போட்டிகளில் 9-ல் வெற்றியை ருசித்துள்ளது என்பது குறிப்பிட்த்தக்க விஷயம்.
இந்தச் சூழலில்தான் நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரிலேயே 3-0 என தோற்ற இந்திய அணி, அவர்களை எதிர்கொள்கிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்தியா ஏ அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ஏ அணி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது.
அதில் 2-வது டெஸ்ட் போட்டியில் 417 ரன்கள் என்ற இலக்கை துரத்திப் பிடித்து தென் ஆப்பிரிக்க ஏ அணி வெற்றி பெற்றது. இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களின் கவலையை அதிகரித்துள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை அதன் பேட்டிங் வலுவான நிலையில் இருக்கிறது.
கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம்.
காயம் குணமடைந்த பிறகு இந்தியா ஏ அணிக்காக தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து ஆடிய ரிஷப் பந்த், இரண்டாவது டெஸ்ட்டில் அரை சதம் விளாசி இருப்பது அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் பேட்டிங் வரிசையில் 3-வது வீர்ராக களம் இறங்கப் போவது யார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணியின் 3-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய சாய் சுதர்சன் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக ஆடினாலும், அதை நம்பி வலுவான தென் ஆப்பிர்க்க அணிக்கு எதிராக அவரை களம் இறக்கலாமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
சாய் சுதர்சனுக்கு பதில் தேவ்தத் படிக்கல் அல்லது துருவ் ஜூரலுக்கு அந்த இடத்தைத் தரவேண்டும் என்ற குரல்கள் கிரிக்கெட் விமர்ச்சகர்களிடம் அதிகரித்து வருகிறது.
அதனால் முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்படலாம்.
3-வது பேட்ஸ்மேனைப் போலவே அணியின் ஆல்ரவுண்டர் விஷயத்திலும் கேள்விக்குறி நிலவுகிறது.
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிவரும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், இதை எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை பொறுத்தவரை, முதல் 2 நாட்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.
அதனால் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இந்திய அணி அதிகம் சார்ந்திருக்கும்.
அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் அசுர வேக பந்துவீச்சாளரான ரபாடாவிடம் நமது பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
ஒரு பக்கம் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, மறுபக்கம் அனுபவம் இல்லாத இந்தியக் கேப்டன் சுப்மான் கில் என்று அனுபவத்துக்கும், இளமைக்கும் இடையிலான டெஸ்ட் தொடராக இந்தியா – தென் ஆப்பிரிகா தொடர் இருக்கப்போகிறது.
எது ஜெயிக்கும் என்று பார்ப்போம்.
– பி.எம். சுதிர்