மனசாட்சியைப் படிக்காத மருத்துவர்கள், நீதியைப் படிக்காத வழக்கறிஞர்கள், இன்னும் பல்துறை படித்த அயோக்கியர்கள்.
இன்று ”அறம்” என்பதைக் காட்டிலும் ”கல்வி”தான் உயர்ந்தது என்று பலரும் நினைக்கும் மனோபாவம்.
அன்றாடப் பேச்சு வழக்கில் ”படிச்சவனாய்யா நீ” என்று திட்டுவதைக் கேட்டிருப்பீர்கள்.
இந்த வசையின் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால் படித்தவர்கள் எல்லோரும் தர்மத்தை (அதாவது) அறத்தைப் படித்தவர்கள் என்று சாதாரன மனிதன்கூட நம்புகிறான்.
இங்கே இன்னொரு வசைச் சொல்லும் இருக்கிறது: “படித்த முட்டாள்கள்”. இது அறத்தைப் படிக்காமல் எழுதப் படிக்க மட்டும் படித்தவர்களைச் சுட்டுகிறது.
1727இல் வீரமாமுனிவர் எழுதிய “வேதியர் ஒழுக்கம்” எனும் 20 அதிகாரங்கள் கொண்ட நூலின் இறுதியில் 32 ஞான சூத்திரங்களைக் கொடுத்திருக்கிறார். அதில் ஒன்றுதான் “அறம் இல்லாத கல்வி கத்தி இல்லாத உறை”.
இவ்வாசகத்தில் அறம் என்பதை உட்கிடையாகக் கொண்டிராத கல்வி என்பது உள்ளே கத்தியை வைத்திருக்காத உறை போன்று கேலிக்குறியது என்பதை உணர்த்துகிறார்.
அறம்தான் கத்தி. கத்தி தான் கல்வி. அநியாயம் செய்பவர்களை அது தண்டிக்க வேண்டும்.
– கலை விமர்சகர் இந்திரன்