அருமை நிழல்:
கறுப்பு வெள்ளைப் படங்கள் அதிகம் வெளியாகிவந்த அக்காலகட்டத்தில், பெரிய பட நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் முதல் வண்ணப்படத்தை எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க விரும்பின.
அந்த வரிசையில் சத்யா மூவிஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’.
1971-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி வெளியான ரிக் ஷாக்காரன், தமிழ்நாட்டையே கலக்கியது.
அதேசமயம் 1971-ம் ஆண்டுக்கான, தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதுக்கு மத்திய அரசால் எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்கிற சிறப்பை எம்.ஜி.ஆருக்குப் பெற்றுத் தந்த படம் ‘ரிக் ஷாக்காரன்’.
பத்மினி, ஜி. சகுந்தலா, அசோகன், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், சோ, ராமதாஸ், தேங்காய் சீனிவாசன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமும் அவர்களுடைய கதாபாத்திர வார்ப்புகளும் அதில் நடித்திருந்தவர்களின் ஈடுபாடும் படத்துக்கு மெருகூட்டின.
நடிகை மஞ்சுளாவின் முதல் படம் இது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தின் டைட்டில் இசையிலேயே மிரட்டியிருப்பார்.
‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்..’, ‘கடலோரம் வாங்கிய காத்து..’, ‘அழகிய தமிழ் மகள் இவள்..’, ‘பம்பை உடுக்கை கொட்டி’ என எல்லாப் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் ரிக்ஷாக்காரனாக நடிப்பதற்காக எம்.ஜி.ஆர் ஒரு சைக்கிள் ரிக்ஷா வாங்கி ஓட்டிப் பயிற்சி எடுத்தார்.
படத்தின் தொடக்கக் காட்சியில் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ளும் ரிக்ஷா பந்தயம் சென்னை அண்ணாநகர் பகுதியில் படமாக்கப்பட்டபோது, சென்னையில் இருந்த நூற்றுக்கணக்கான ரிக்ஷாக்காரர்கள் அங்கு குவிந்துவிட்டார்கள்.
அந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தின் விளம்பரப் போஸ்டரை பலரும் விரும்பி சேகரித்தனர்.
குறிப்பு: ரிக்ஷாக்காரன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
நன்றி: பிரசாந்த் குமார் முகநூல் பதிவு