மலையாளம், தெலுங்கு என இரண்டு மொழி சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த கே.வி.ஆனந்த் கனா கண்டேன், அயன், கோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
பூங்கா நகரில் 1966-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி வெங்கடேசன், அனுசுயா தம்பதிக்கு பிறந்த கே.வி.ஆனந்தின் தந்தை வெங்கடேசன் வங்கி மேலாளர்.
சிறுவயதில் இருந்து விவசாயம் மற்றும் புகைப்படக் கலை மீது ஆர்வம் கொண்டிருந்த கே.வி.ஆனந்த், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அங்கு அவருக்கு சீட் கிடைக்காததால், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் இயற்பியல் பயின்றார்.
பின்னர் லயோலா கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்ற கே.வி.ஆனந்த், கிடைக்கும் நேரத்தில் பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்துள்ளார்.
வாழ்க்கையை மாற்றிய ’நாயகன்’ திரைப்படம்
1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ’நாயகன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பலரும் கமல்ஹாசன், நடிப்பையும் மணிரத்னம் இயக்கத்தையும் பாராட்டினார்கள்.
ஆனால், கே.வி.ஆனந்த் நாயகன் திரைப்படத்தில் பி.சி.ஸ்ரீராம் என்கின்ற ஒளிப்பதிவாளரின் வர்ணஜாலங்களை உற்றுநோக்கினார்.
பெரும்பாலும் மின் விளக்குகள் ஏதுமின்றி இயற்கையாக கிடைக்கின்ற வெளிச்சத்தை வைத்து இப்படத்தை திரையில் எப்படி அழகாக எடுத்திருக்கிறார் என்பதை பார்த்து வியந்து போனார் கே.வி.ஆனந்த்.
இப்படிப்பட்ட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளர் ஆக வேண்டுமென்ற குறிக்கோளுடன், அவரை நேரில் சந்தித்து, தான் எடுத்திருக்கக் கூடிய புகைப்படங்களை அவரிடம் காண்பித்து உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தார்.
அந்த வகையில் கோபுர வாசலிலே, அமரன், தேவர்மகன் உள்ளிட்ட படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
ஒளிப்பதிவாளராக முதல் படத்திற்கு தேசிய விருது
மூன்று திரைப்படம் பிசி ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து ஒளிப்பதிவில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.
அவரது திறமையை அறிந்த பி.சி.ஸ்ரீராம் 1991-ம் ஆண்டு ’தென்மாவின் கொம்பத்து’ என்கின்ற திரைப்படத்திற்காக இயக்குநர் பிரியதர்ஷனிடம் பரிந்துரைத்துள்ளார்.
தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.
மேலும் அந்தப் படத்தில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், இன்றளவும் பல பேட்டிகளில் கேவி ஆனந்தினுடைய திறமையை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மலையாளம், தெலுங்கு என இரண்டு மொழி சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த கே.வி.ஆனந்த் அவரது தாய் மொழியான தமிழில் 1996ஆம் ஆண்டு ’காதல் தேசம்’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
முக்கோண காதல் கதையான ’காதல் தேசம்’ படத்தில் கதை நகர்விற்கு ஏற்ப காட்சிகளின் லைட்டிங்கில் வித்தியாசம் காட்டி அசத்தியிருப்பார். பின்னர் 1997-ம் ஆண்டு விஜய், சூர்யா நடித்த ’நேருக்கு நேர்’ திரைப்படமும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் பணியாற்றிய திரைப்படம் தான்.
இதனைத்தொடர்ந்து 1998-ம் ஆண்டு ப்ரியதர்ஷன் இயக்கிய இந்தி படமான ’டெலி டோலி சாஜா கோ ரஹானா’ படத்தில் பணியாற்றினார். காதலுக்கு மரியாதை படத்தில் ரீமேக்கான இப்படம் நடிகை ஜோதிகாவின் கரியரில் முதல் படமாகும்.
கே.வி.ஆனந்த், ஷங்கர் வெற்றிக் கூட்டணி
அந்த சமயத்தில் கே.வி.ஆனந்திற்கு ஜாக்பாட் அடித்தது போல ’முதல்வன்’ பட வாய்ப்பு வந்தது. அப்படத்தின் அரசியல் கதைக்கு ஏற்பவும், ஒவ்வொரு பாடல்களிலும் இருக்கக்கூடிய பிரம்மாண்டங்களுக்கு ஏற்பவும் காட்சிகளும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.
இயக்குநர் ஷங்கரின் எண்ண ஓட்டங்களை கண் முன்னே காட்சிப்படுத்தி இருக்கும் வித்தையை அற்புதமாக செய்திருந்தார்.
முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான ‘நாயக்’ படத்திற்கும் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இதனைத்தொடர்ந்து ஷங்கரின் ‘பாய்ஸ்’, ’சிவாஜி’ ஆகிய படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
சிவாஜி திரைப்படத்தில் ’வாஜி வாஜி’, ’ஒரு கூடை சன்லைட்’ ஆகிய பாடல்கள் இன்றைய ஒளிப்பதிவாளர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.
இந்திய சினிமாவில் ஒளிப்பதிவாளராக வெற்றிநடை போட்ட கே.வி.ஆனந்த், ’கனா கண்டேன்’ திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
இப்படத்தில் ஸ்ரீகாந்த், கோபிகா, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்தனர். நீரின் முக்கியத்துவத்தை கதைக்கருவாக கொண்ட இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையாகவே வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.
படத்தின் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை சீட் நுனியில் அமர வைத்தது. தமிழில் ஒரு ஹாலிவுட் இயக்குநர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் உச்சி முகர்ந்து கொண்டாடினர்.
அதே வேகத்தில் 2010ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் பத்திரிக்கையாளர்களின் வாழ்க்கையினை பிரதிபலிக்கும் வகையில் கற்பனை கதையாக ’கோ’ திரைப்படத்தை உருவாக்கினார். தான் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு, ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான படத்தை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன், மாற்றான், காப்பான் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
காப்பான் திரைப்படத்தை தவிர இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் எழுத்தாளர் சுபா கதை, திரைக்கதையில் பணியாற்றினர்.
மேலும் கே.வி.ஆனந்த் படங்களில் ரசிகர்கள் படத்தில் யூகிக்க முடியாத நேரத்தில் திரைக்கதையில் அன்றைய சமூக பிரச்சனைகளை இணைத்து, திருப்புமுனையை ஏற்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் கோலோச்சிய கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30-ம் தேதி 2021ஆம் கரோனா தொற்று விளைவாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கே.வி.ஆனந்திற்கு சசிகலா என்ற மனைவியும் சினேகா, சாதனா என்கிற மகள்களும் உள்ளனர்.
சினிமாவில் பல்வேறு புதுமைகளை புகுத்தி, பன்முகம் கொண்ட கலைஞராக ஜொலித்த கே.வி.ஆனந்தின் வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடியாது எனக் கூறினால் மிகையாகாது.
– நன்றி: ஈ டிவி பாரத்