இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இரு!

நூல் அறிமுகம்:

இரா. கவியரசு அவர்களுக்கு இது மூன்றாவது நூல். ‘நாளை காணாமல் போகிறவர்’ இவருடைய முதல் கவிதை தொகுப்பு. ‘மாய சன்னதம்’ கவிதைகள் குறித்த கட்டுரை தொகுப்பு. ‘நறுமணப் புகையின் தனிமை’ இரண்டாவது கவிதை தொகுப்பு.

வாருங்கள் கவிதைகளைச் சுவாசிப்போம்.

ஒரு புல்லும் ஒரு களை எடுக்கும் அம்மாவும் அழகாய் பேசுகின்றனர். ஒரு பள்ளிக்கூட பிள்ளையின் எதிர்பார்ப்பை, நிராசையை அழகாக சொல்கிறது இந்தக்கவிதை…

இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இரு

சூரியன் முளைக்காத
வான் பார்த்து
நடுங்கிக் கொண்டிருக்கும்
உளுந்து வயலில்
களை பறித்துக் கொண்டிருக்கிறாள் அம்மா.

வீடு திரும்புவதற்காக

நிமிர்பவளை
குனியச் சொல்லி
முத்தமிடுகிறது
குட்டி செடி.

இன்னும் கொஞ்ச நேரம்

இருந்து விட்டுப் போயேன் என்கிறது.

அப்படியெல்லாம் நான்

இங்கேயே வாழ முடியாது
வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்கிறாள்.

புடவையை இழுத்து

உள்ளங்கை பற்றி
இறைஞ்சுகிறது
“தனியாக வளர்வது
பயமாக இருக்கிறது
இன்று ஒரு நாள் மட்டும்
என்னுடன் இரு என்று”
வீட்டில் காத்திருக்கும் வேலைகள்
மிரட்டும் குரல் கேட்கவே
கை உதறி வரப்பேறுகிறாள்.

உச்சியில் இருந்து

சூரியன் எட்டிப் பார்க்க
மணி அடிக்கும்
பள்ளிக்கூடத்தில்
ஆறாவது முறையாக
நுழைவாயில் கதவைப் பார்த்துவிட்டு
மதிய சாப்பாட்டைத்
தனியே
திறக்கிறாள் மகள்.

*****

மகள்களின் குறும்புக்கு அளவே இல்லை. ஆனால் அது ரசனையானது. அந்தக் குறும்பை அழகாக பதிவுசெய்துள்ளார் இந்தக் கவிதையில்…

உதை வாங்கும் கதவு

எத்தனை முறையோ
சொல்லியாயிற்று
கேட்பதாக இல்லை
நினைவில்
வைத்துக் கொள்வதும் இல்லை.
தூங்கும் போதெல்லாம்
படாரென்று தான்
கதவை உதைக்கிறாள்.
பிடிப்பதற்குள்
தாவி ஓடி விடுகிறவளிடம்
அடி வாங்கப் போகிறாயென
மிரட்டும் போது
“காத்துப்பா
காத்தடிக்குது பாருங்க”
ஒளிந்து கொண்டு பாடுகிறாள்.
படபடக்கின்றன
சன்னல்கள்.

*****

கிராமத்தில் இருந்து நகரத்திற்கு புதிதாய் வரும் ஒவ்வொரு மனிதனும் கொஞ்சம் தயங்க வேண்டும். நரகத்திலே இருப்பவரும் முதல்முறை இந்த தயக்கத்தை உணர்ந்து இருப்பார்கள். இந்த நதி கொஞ்சம் புதிது…

உலோக நதி
நீண்டும் மடங்கியும்
உள் சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
வாரிச்சுருட்டி இழுத்து விடுமென
கரையிலேயே நிற்கிறாள் அம்மா

வெகு நேரமாய்.
“செத்து விடமாட்டாய்
வந்து தொலை!”
கத்துகிறான்
கீழிறங்கி விட்ட மகன்.
விரைகின்றன
சூட்கேஸ் படகுகள்.
முன் வைப்பதும்
பின் வாங்குவதுமாக
நடுங்கிக் கொண்டிருக்கிறது
ஒரேயொரு பாதம்.
கரைகளின்
கருப்பு பட்டையைப்
பிடித்தபடி
நீந்தும் சிறுமி
கடைசிப் படி
பூமிக்குள்
இழுக்கும்போது
ஆனந்த குருவியாகித் தாவுகிறாள்.
தலையை ஆட்டி
புடவையை ஏற்றியபடி
குதிக்கிறாள் அம்மா
எஸ்கலேட்டர் நதியில்.

*****

ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் நிகழ்வில் பிறக்கிறது இந்தக் கவிதை… இந்தக் கவிதையின் தலைப்புதான் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு சூட்டப்பட்டுள்ளது.

நறுமணப் புகையின் தனிமை

நிறைவின்மையில் ததும்பும்
கடலின் பெருமூச்சு
ஆடையைத்
தூக்கிக் கொண்டே இருக்கிறது.
நீள் துயில் களைந்தெழும்
மர்லின் மன்றோ
“இன்னொரு டேக் “என்கிறாள்.
ஸ்பரிசிக்க முடியாத
அவளது ஆடையை துழாவுகிறேன்.
தலைகீழாகப் பூத்திருக்கும் செம்பருத்தி

அலையடித்து நடனமிடுகிறது.
ஷூட்டிங்கிற்காக
சுரங்கப்பாதை மின்விசிறியிலிருந்து
குளிர் காற்றை அனுப்புகிறவன்
கூச்சத்தில் கண்களை
கவிழ விடுகிறான்.
பின் தொடரும் என்னிடம்
“திருப்திகரம்தானே “

எனக் கேட்கிறது
நகர்ந்து செல்லும்
கால்களின் நிழல்.
கடற்கரையில்
வான்நோக்கி உயரும்
பாலித்தீன் பையினுள்
சுடரொன்று அசைகிறது.
உயரப் பறந்து எரியும் தீ!
நறுமணப் புகையின் தனிமை.
“உங்கள் வீடு எங்கிருக்கிறது?”
தலையைக் கோதி
முணுமுணுக்கிறாள்
“உனக்கு வேண்டியதெல்லாம் தொடைகள்தானே
டேக் ஓகே ஆகிவிட்டது!
பார்த்துக்கொண்டே இருக்கலாம்”

*****

காதலமைதல் என்ற இந்தக் கவிதையின் கடைசி வரிகள் எவ்வளவு அழகாக வந்து விழுந்துள்ளது. எவ்வளவு காதலுடன் அமைந்துள்ளது. எவ்வளவு கவிநயத்துடன் அமைந்துள்ளது.

காதலமைதல்

அணுக்கத்தில்
இன்னும்
அணுக்கத்தில்
எழுத வேண்டியதும்
எல்லாமும்
நழுவிக் கொண்டே இருக்கின்றன
பால்வழி திசையேகுதலில்
தொலையும் விண்மீன்களாய்.

அணுக்கத்தை வெறுத்து
வெளியில்
அகத்தனிமையை
ஏற்றும்போதெல்லாம் எழுதுகிறேன்

இன்னும்
எழுதுகிறேன்
கடற்கரை மணற்துகள் ஒவ்வொன்றுக்கும்
செல்லப்பெயர் வைப்பதாய்.

*****

இப்படி நறுமணப் புகையின் தனிமை நம்மை கவருகிறது. கவிதைகளை எழுதிய கவிஞர் கவியரசு அவர்களுக்கும், வெளியிட்ட தேநீர் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றிகளும்.

– பாவேந்தன் சாந்தி சந்திரசேகரன்

******

நூல்: நறுமணப் புகையின் தனிமை
நூலாசிரியர்: இரா.கவியரசு
தேநீர் பதிப்பகம்

பக்கங்கள்: 80
விலை: ரூ.120/-

Comments (0)
Add Comment