நள்ளிரவு சூரியன்: எதார்த்த வாழ்வின் வரைபடங்கள்!

நூல் அறிமுகம்:

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிறந்த டாக்டர் கவிதாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு: நள்ளிரவு சூரியன்.

பரிதி பதிப்பக வெளியீடு. பள்ளி, கல்லூரி நாட்களிலேயே இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களிடம் பதக்கமும் பரிசும் பெற்றவர்.

கால்நடை மருத்துவம் படித்திருந்தாலும், இன்று அவர் மாவட்டப் பதிவாளராகப் பணியைத் தொடர்கிறார். சிறுகதைகள் எழுதுவதில் பேரார்வம் தென்படுகிறது.

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை, சில கற்பனைகளை, உறவுச் சிக்கல்களை, அதிர்ச்சிகளை, சந்தோசங்களை சிறுகதைகளாக எழுதியிருக்கிறார்.

தன்னைச் சுற்றியுள்ள சூழல்களில் இருந்து கதைக்களத்தைத் தேர்வு செய்து எளிமையான சிறுகதைகளைப் படைத்திருப்பதாகப் பாராட்டும் இயக்குநர் ராசி அழகப்பன், எந்த மேம்பட்ட போக்கும் இல்லாமல் உங்களில் ஒருத்தி என்று கதைகளில் அவர் உலாவருவதாகவும் சொல்கிறார்.

சிறுகதைகளின் தலைப்பில் கவித்துவம் தென்படுகிறது.

வெண்ணிலவு சாரல் நீ, மேகத்தின் வாசனை, மழை மரம், கரையெல்லாம் செண்பகப் பூ, பால் நிலா, நள்ளிரவு சூரியன் என கவித்துவமாக தலைப்புகளை வைத்திருக்கிறார்.

அறமாகியது யாதெனில் என்ற கதை கல்லூரியில் படிக்கும் மகனை ஒரு பொருளை வைத்து தவறாக நினைக்கும் தாயைப் பற்றிப் பேசுகிறது.

நூல் வேலி என்ற கதை குடும்பத்தில் பெண் சுதந்தரம் பெற்றிப் பேசுகிறது. ஐந்து அக்கா, தங்கைகள் கொண்ட மணமகனை திருமணம் செய்துகொண்ட பெண்ணின் உறவுகள் பற்றிய புரிதல்களை எடுத்துரைக்கிறது.

மேகத்தின் வாசனை கதையில் காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளின் உறசல்களைச் சுட்டிக்காட்டுகிறது.

“மிக எளிய பிரச்சனைகள் மிகப்பெரிய பிரிவுகளுக்கு அடிப்படையாகி விடுவதை மிக மிக எளிய உரையாடல்களில் சொல்லமுடிவது இவரது தனிச்சிறப்பு” என்று மதிப்பிடுகிறார் பதிப்பாளர் ப. இளம்பரிதி.

எவ்வளவு நீண்ட பயணமும் நம் காலடியில் இருந்ததானே தொடங்குகிறது என்றும் கவிதாவின் முதல் முயற்சியை அவர் வாழ்த்துகிறார்.

யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் மலர்வதி, தன் வாழ்த்துரையில், “நள்ளிரவு சூரியன் தொட்டுத் தொட்டு போகிறது வாழ்க்கையின் நிகழ்வுகளை. சாதாரணம் போல் தெரியும் பல விஷயங்களே எழுத்தாளர் கவிதாவின் மனதில் இலக்கியமாக கூடு சேர்ந்திருக்கின்றன” என்கிறார்.

கவிஞர்கள் பல்கிப் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில் கதாசிரியராக முகம் காட்டும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் சொல்கிறார்.

கவிதாவின் கதைகளில் வளமான உரைநடை இருக்கிறது. ஆனால், கதை சொல்வதில் வேகம் அதிகம். நான்கைந்து பக்கங்களில் சொல்லிமுடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

முதல் தொகுப்பு என்பதால் அவரை மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம். இன்னும் அவர் எழுத்தில் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

****

நள்ளிரவு சூரியன்!
டாக்டர் கவிதா
வெளியீடு: பரிதி பதிப்பகம்

விலை: ரூ. 200/-
தொடர்புக்கு: 72006 93200

Comments (0)
Add Comment