ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இக் கூற்றை கேள்விப்பட்டிருப்போம். இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. அதிகாரமில்லாத என் சிறிய வாழ்வில் நான் நிறைய முறை வயலின் வாசிக்க முயன்றிருக்கிறேன். இன்றும் அப்படிதான்.
பத்திரிகைகளைப் புரட்டினால் கரூர், விஜய், திமுக, என்று அதனதன் விருப்பத்திற்கேற்ப கதையளக்கின்றன.
இவற்றுக்கிடையே நண்பரும் எழுத்தாளருமான பல்லவிகுமார் அவர்கள் திருக்குறள் திருப்பணித் திட்டத்தில் நீங்க பேசவேண்டும் என்றார்.
குறள் பற்றி பேச வள்ளுவரைத்தானே படிக்க வேண்டும். Poor karikalan! இன்ஸ்ட்டாவில் சமந்தா எழுதிய கவிதை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான்.
தனுஷ் வகையறா எழுதும் ‘காக்க கருப்பு பேட்டா செருப்பு’ போல் இல்லாமல் சமந்தா கவிதை சமந்தாவைப்போல அழகாகவே இருந்தது.
சமந்தா 20 ஐ எப்போதோ கடந்துவிட்டார். இப்போது முப்பதுகளையும் இழக்கும் இடத்தில் நிற்கிறார் என நினைக்கிறேன்.
நாம் எந்த தசாப்தத்தில் நிற்கிறோமோ அந்த வயது நமக்கு பிடிப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வயதில் சமந்தாவுக்கு முதிர்ச்சி வந்திருக்கிறது.
I stopped living two lives
the one I showed the world
and the one I lived in silence
And suddenly
the person I was in public
was the same person
என்று எழுதுகிறார். உலகத்துக்கு காட்ட ஒரு வாழ்வு, தனிமையில் பேணும் ஒரு வாழ்வு. இனி இந்த இரட்டை நிலை தேவையில்லை என விரும்புகிறார்.
மார்லின் மன்றோவும் இப்படி கவிதைகள் எழுதிப் பார்த்தவர்தான்.
மரணத்துக்குப் பிறகு அவற்றை நூலாகத் தொகுத்தார்கள். அவருக்கும் சமந்தா போன்ற இருமை நிலை.
I am of both your directions
Existing more with the cold frost
என்று எழுதினார். Life எனும் இக்கவிதையில் அவரது வாழ்வின் இரட்டைத் தன்மையையும் அதன் சிக்கலையும் விவரித்திருப்பார்.
இது சாதாரண மனிதர்களுக்கும் நிகழ்வதுதான். போலித்தனமான சமூக விழுமியங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் மனசை, அதன் தளைகளில் இருந்து அகற்றும் விடுதலை உணர்ச்சிதான் ஒருவரைக் கவிதை எழுதத் தூண்டுகிறது.
ஆம்பர் டாம்ளின், கிறிஸ்டின் ஸ்டூவர்ட், பமீலா ஆண்டர்ஸன், மேரி லூயிஸ் பார்க்கர், இப்படி ஹாலிவுட் நட்சத்திரங்கள்.
மீனா குமாரி, அமிதாப், சுஷ்மிதா செனா, ட்விங்கிள் கன்னா, சுஷாந்த் சிங் ராஜ்புத், ஆயுஷ்மான் குரானா, கல்கி கோச்லின், கிரித்தி சனான், மானவ் கவ்ல் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள்.
தாங்களை மூடியிருக்கும் image என்கிற போர்வையை விலக்க அவ்வப்போது கவிதை எழுதுகிறார்கள்.
சமந்தாவும் அப்படிதான்.
when you are fully yourself
without apology
without disguise
you don’t just free yourself
You set the whole world free.
மனிதர்கள் தம் இருமை வாழ்விலிருந்து வெளியேறும்போது அவர்களை மட்டும் அல்ல இவ்வுலகையும் சுதந்திரமானதாக மாற்ற முடியும் என சமந்தா நம்புகிறார்.
வள்ளுவரைப் பேச வள்ளுவரைதான் படிக்க வேண்டும் என்றில்லை. சமந்தாவையும் படிக்கலாம்.
யார் யார் வாய்க் கேட்டால் என்ன. மெய்ப்பொருள் கண்டால் போதாதா?