தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், நாகப்பட்டினம் சென்றிருந்தபோது, அங்கு பலதரப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, விஜய் அங்கு வருவதற்கு முன்பிருந்தே, அங்கு தொண்டர்களுக்கிடையே நடந்த சிறுசிறு சச்சரவுகளையும் தொண்டர்களின் அத்துமீறல்களையும் கூட வெவ்வேறு தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
அப்படி ஒளிபரப்பப்பட்டதில் முக்கியமான ஒரு காட்சி.
அந்தத் திரளான கூட்டத்திற்கிடையே, ஒரு இளைஞர் ஒரு பெண்மணியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை திருடிவிட்டதாக குற்றஞ்சாட்டி அந்த இளைஞரை தவெக தொண்டர்கள் தொடர்ந்து தாக்குவதை நேரடியான காட்சிப்பதிவாக ஒளிபரப்பினார்கள்.
அரசியல் காரணமாகவும், பக்தி காரணமாகவும் திரளும் கூட்டங்களிலேயே இப்படிப்பட்ட குற்றங்கள் அவ்வப்போது இயல்பாக நடந்திருக்கின்றன.
ஆனால், நாகையில் நடந்த நிகழ்வில், தொலைக்காட்சிகள் உடனே அதை ஸ்கிராலிங் செய்தியாகப் போடும்போது, பிடிபட்டு அடி வாங்கிய அந்தக் குற்றவாளி ஒரு வடமாநில இளைஞர் என்பதை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள்.
ஒரு குற்றவாளியை அவருடைய சாதி சார்ந்தோ, மதம் சார்ந்தோ அல்லது அவருடைய மொழி சார்ந்தோ பொதுவெளியில் காட்சிப்படுத்தும்போது ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களை, இத்தகைய காட்சிகளை ஒளிபரப்பும் ஊடக நிறுவனங்கள் சரிவர உணர்ந்திருக்கிறார்களா? என்பது தான் முதன்மையான கேள்வி.
உதாரணமாக, கேரளாவில் ஒரு நபர் குற்றச் செயலில் ஈடுபட்டபோது, அங்குள்ள மலையாள ஊடகங்களில், அந்த சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒரு தமிழர் என்று குறிப்பிட்டாலோ,
டெல்லி அல்லது மும்பையிலோ உள்ள ஊடகங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒரு குற்றத்தில் ஈடுபடும்போது, அவரை தமிழர் என்று அடையாளம் இட்டு அதை ஒளிபரப்பினால், அது எத்தகைய எதிர்விளைவுகளை அங்குள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தும்?
பொது இடங்களில் அதுவும் மக்கள் திரள் கூடக்கூடிய இடங்களில் நடக்கும் சில அசம்பாவிதங்களை அல்லது குற்றங்களை, மொழி அடையாளத்தின் பேரில், காட்சிகள் ஊடகங்கள் அதை வெளிக்காட்டும்போது, பல்வேறு பின்விளைவுகள் உருவாகலாம்.
இத்தகைய சாதி, மதம் அல்லது மொழி சார்ந்த அடையாளங்களோடு ஒரு குற்றவாளியை ஒப்பிட்டு, அதைப் பொது வெளியில் பரப்புவதா ஊடக நீதி?
ஒருமுறை மதுரையில் உள்ள ஒரு சிறையில் கணக்கெடுப்புக்காக ஒரு சமூகச் சேவை செய்வதாக சொல்லிக்கொண்ட ஒரு நிறுவனம், சிறைச்சாலைக்கு உள்ளே வந்து அங்குள்ள ஜெயிலரைப் பார்க்க வந்தபோது நானும் அந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது.
அப்போது அங்கு வந்திருந்த சமூக ஆர்வலராக தன்னை சொல்லிக் கொண்டவர், அங்கு சிறைபட்டிருக்கும் குற்றவாளிகளுடைய சாதி அடையாளத்தைப் பற்றிய கணக்குகளைக் கேட்டார்.
எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கின்ற கேள்வியை முன்வைத்தபோது, அதை எதிர்கொண்ட ஜெயிலர் அளித்த பதில் படு நிதானமானது.
“எதை வைத்து இத்தகைய கணக்கீட்டை நீங்கள் நடத்துகிறீர்கள்?
குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அதிகமான குற்றசெயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை வெளிக்காட்டவா?
கணக்கீட்டை எடுப்பதன் மூலம் நீங்கள் எதை உணர்த்த வருகிறீர்கள்?
திரும்பவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றச்செயலுடன் இணைத்து அவர்களை பொதுவெளியில் அடையாளப்படுத்துவதன் மூலம் எதை சாதிக்கப் போகிறீர்கள்?
ஆய்வு நோக்கத்துடன் செய்வதாக நீங்கள் சொன்னாலும், இத்தகைய ஆய்வு நோக்கத்திற்கு பயன்படும் விதத்தில் எந்த ஒரு தகவலையோ அல்லது எண்ணிக்கையையோ நாங்கள் தர முடியாது” என்று ஆணித்தனமாக மறுத்துவிட்டார்.
அதைத்தான் இப்போது பொது ஊடகத்தில் ஒரு மொழி சார்ந்த ஒருவராக, ஒருவரை அடையாளப்படுத்தும் போது,
அதே மொழி சார்ந்த இன மக்கள் இங்கு வந்து கட்டுமானத் தொழிலிலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியின் நகர்விலும் அவர்களுடைய பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும்போது அவர்களுடைய மனது என்ன பாடுபடும்?
ஒருவர் மூலமாக ஒரு பொது சமூகத்துடன் பொருத்தி, அதை காட்சிப்படுத்தும்போது இனிமேலாவது ஊடகங்கள் அத்தகைய காட்சிப்படுத்துதலில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே மனிதத்தை வலியுறுத்துபவர்களின் பார்வையாக இருக்கும்.
– மணா