மருந்து வழங்கும் கைகளின் தயாளம்..!

செப்டம்பர் 25 – உலக மருந்தாளுநர்கள் தினம்

இன்றைய உலகை இயக்கும் சொற்களில் ‘மருந்து’ என்பதற்கும் முக்கிய இடம் உண்டு. யாராவது ஒருவர் தனக்கு ஏதேனும் ஒரு உபாதை இருப்பதாகச் சொன்னால், உடனே ஒரு மருந்து அல்லது சில மருந்துகளைச் சட்டென்று பரிந்துரைக்கிற நபர்களை அதிகமும் பார்க்க முடியும். உண்மையில், அவற்றில் பல பயனுள்ளதாகவும் இருக்கும்.

ஆனால், கேட்பவர்களில் பலருக்கு எரிச்சல்தான் மனதுக்குள் மிகும். காரணம், ‘அந்த ஆலோசனையைச் சொல்பவருக்கு மருத்துவம் பற்றி என்ன தெரியும்’ என்கிற நினைப்பு தான்.

மருத்துவம் எனும் பெருங்கடல்..!

இந்த உலகில் உள்ள தொழில்களில் மிக மாண்புடையதாகக் கருதப்படுபவற்றில் ஒன்று, ‘மருத்துவம்’. கிட்டத்தட்ட அவரவர் வணங்கும் கடவுளுக்கு நிகரான இடம் மருத்துவர்களுக்குத் தரப்படுவது வழக்கமாக உள்ளது. அதனை அறிவது என்பது பெருங்கடலில் நீந்துவதற்கு ஒப்பானது.

அதேநேரத்தில், மருத்துவக் கல்வி பயில்வதும் மருத்துவராகத் திகழ்வதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரு வேறு திசைகளில் நிகழ்கிற பயணங்கள். இரண்டையும் வெற்றிகரமாகக் கைக்கொள்பவர்களுக்கு இச்சமூகம் பெரிய மரியாதையைத் தரும்.

மருத்துவர் என்பவர் மருத்துவ அறிவு, உயிர்களிடத்தில் இரக்கம், சமத்துவமான அன்பு, மிகுந்த நேர்மை கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பது ஆதி காலத்தில் வகுக்கப்பட்ட நெறிமுறை. அப்படிப்பட்ட மருத்துவரைக் கண்டவுடன், நோயாளிகள் தங்களது நோயில் பாதி குணமானதாக உணர்வார்கள்.

போலவே ஒரு நோயாளியின் வயது, உடல் தன்மை, பருவ காலம் ஆகியவற்றை உணர்ந்தறிந்து, அவரது நோயைச் சரியாகக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காணும் வண்ணம் சம்பந்தப்பட்டவரின் உடல் ஏற்கிற மருந்துகளைக் கொடுத்து உண்ணச் செய்கிற திறன் ஒரு மருத்துவருக்கு அவசியம்.

அனைத்துக்கும் மேலே, மருந்து என்பது நோயாளி, மருத்துவர், மருந்து மற்றும் அதனைத் தருபவர் என்று நான்கு விதங்களைச் சார்ந்தது என்கிறது திருக்குறள். ‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து’ என்கிறது.

இதில் வரும் மருந்து தயாரிப்பவர் அல்லது தருபவரைப் பழைய நாடகங்கள், திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். இன்றும் சில அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவங்களுக்கான மருந்தகங்களில் மருந்து வழங்குபவர்களை அப்படிக் காண முடியும்.

மருத்துவர் எழுதிய பரிந்துரையைப் பார்த்து, குறிப்பிட்ட மருந்துகளைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, அதனை எப்படி உண்பது என்பது குறித்து விளக்கமளிக்கிற வேலையைச் செய்வார்கள். நீர், மோர், தேன் என்று எந்த திரவம் அல்லது எந்த திட உணவுப் பொருளுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டுமென்றும் சொல்வார்கள்.

மருந்தாளுநர் பணி..!

மருந்தாளுநர் என்பதற்கு மருந்து கலப்பவர் என்றே அர்த்தம். கிட்டத்தட்ட ஒரு மருத்துவருக்கு நிகரான பணியைச் செய்பவர்களாக இவர்கள் கடந்த காலங்களில் போற்றப்பட்டிருக்கின்றனர்.

மருந்துகளைத் தயாரிக்கிற பணியையும் இவர்களே செய்திருக்கின்றனர். அதற்காக, பல இடங்களில் சுற்றித் திரிந்து குறிப்பிட்ட மூலிகைளைப் பறித்து, அவற்றை பக்குவமாகச் சீர்படுத்தி மருந்தாக மாற்றித் தந்திருக்கின்றனர்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்திலும் மருத்துவப் பரப்பின் நீள அகலங்கள் அனைத்தையும் அறிந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததற்குக் காரணம் உண்டு.

பெருமரத்தில் பல்வேறு கிளைகளை அறிவதைப் போல, மருத்துவம் என்பது மருந்து தயாரிப்பது தொடங்கி அவற்றை நோயாளிகளுக்குத் தருவது வரை பலவற்றை உள்ளடக்கியதாக இருந்துள்ளதை வரலாற்றில் இருந்து அறிய முடியும்.

அலோபதி உள்ளிட்ட மேற்கத்திய மருத்துவ முறைகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட அச்சில் அமைந்த மருந்துகளைச் சரியாகக் கண்டறிந்து, மருத்துவர் எழுதிய குறிப்புகளுடன் சரிபார்த்து தருகிற வேலையைச் செய்கின்றனர் மருந்தாளுநர்கள்.

மருத்துவமனைகள், மருத்துவர்களின் தனிப்பட்ட கிளினிக் அருகில் இருக்கிற மருந்தகங்களில் இருக்கிற மருந்தாளுநர்கள், மருத்துவர்கள் பரிந்துரைக்கிற மருந்துகள் என்னவாக இருக்கும் என்கிற புரிதலைச் சில மாத / ஆண்டு கால அனுபவத்தில் அறிந்திருப்பார்கள். அதற்கேற்பச் சரியான மருந்துகளைக் கொடுத்து நோயாளியின் மனதையும் உடலையும் சீர்படுத்த உதவுவார்கள்.

வெறுமனே மருந்துச் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டு வேறெங்கோ இருக்கிற மருந்தகங்களை நாடும்போதும் கூட அது போன்ற அனுசரணையான செயலைக் காண முடியும்.

ஒரு மருத்துவருக்கு இருக்கிற அடிப்படை அம்சங்களைப் போன்றே ஒரு மருந்தாளுநரும் இருக்க வேண்டுமென்பது அப்போது புரியும்.

மருந்துச்சீட்டு இல்லாமல், வெறுமனே ‘எனக்கு தலை வலிக்குது’, ‘காய்ச்சல் அடிக்குற மாதிரி இருக்குது’, ‘ஒரே இருமல் சளி பிரச்சனை’, ‘நெஞ்சை அடைக்குது’ என்று விதவிதமான உபாதைகளைச் சொல்பவருக்கு மருந்துகளைத் தருகிற மருந்தாளுநர்களும் உண்டு.

மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறாமல், அவரது பரிந்துரை இல்லாமல் மருந்துகளைத் தருவது சரியான வழிமுறை அல்ல. ஆனால், அந்தச் செயலைச் செய்கிற கோடிக்கணக்கான மக்கள் நாட்டில் உண்டு.

‘மருந்து சரி வரலேன்னா, அப்புறம் டாக்டரை பார்ப்போம்’ என்பதே அதன் பின்னிருக்கும் எண்ணம்.

பெரும்பாலான நேரங்களில் நோயாளியின் உடல் தன்மை தெரியாமல், நோய் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளைக் கொடுப்பார்கள் சில மருந்தாளுநர்கள். அதனால் நோய் தீரும் என்றபோதும், நோயைத் தாங்குகிற வல்லமையை உடல் இழக்கிற அபாயம் அதன் பின்னிருப்பதை மறந்துவிடக் கூடாது.

ஏனென்றால், நோயின் தாக்கத்தை அழிப்பதோடு நின்றுவிடாமல் வேறு சில பக்க விளைவையும் சில மருந்துகள் ஏற்படுத்தக் கூடும்.

தேர்ந்த மருத்துவ அறிவு கொண்டவர்கள் அதற்கும் ஏற்றவாறு மருந்து கொடுப்பார்கள். அப்படிப்பட்ட மருந்தாளுநர்களாலேயே மனித குல ஆரோக்கியம் சீர்கெடாமல் இயங்கி வருகிறது.

பருவநிலை மாற்றம், பொருளாதாரச் சீர்குலைவு, சுகாதாரப் பராமரிப்பு தேவைகளின் பெருக்கம் என்றிருந்து வருகிற உலகில் சக மனிதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய மருந்துகளைக் குறைந்த விலையில் தரவும் மருந்தாளுநர்களின் பங்களிப்பு அவசியமானதாக உள்ளது.

அதனால், மருந்தகங்களில் அப்பணியைச் செய்யத் தகுதியான மருந்தாளுநர்களைப் பணியில் அமர்த்துவதற்கான தேவைகளும் பெருகியுள்ளது.

அதனை உணர்ந்தே, இன்று மருந்தாளுநர் பணியைச் செய்வதற்கேற்ற மருந்தகப் படிப்புக்கான முக்கியத்துவமும் பெருகியுள்ளது. அதில் பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியன உள்ளன. மருந்து கண்டறிதலில் ஆய்வு மேற்கொள்கிறவர்களும் பெருகி வருகின்றனர்.

மருந்தாளுநர்களைக் கொண்டாடுவோம்..!

மருந்தாளுநர் பணியின் முக்கியத்துவம், அவர்கள் பணியில் எதிர்கொள்கிற இடர்பாடுகள், அவர்களது மன உறுதி மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கிற மரியாதை போன்றவை குறித்து அனைத்து மக்களும் அறிகிற வகையில் ‘உலக மருந்தாளுநர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

1912-ம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று ‘சர்வதேச மருந்து கூட்டமைப்பு’ (International Pharmaceutical Federation) அமைக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

மளிகைக்கடை, துணிக்கடை, காய்கறிக்கடை போன்று ஒவ்வொரு குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் மருந்தகங்களுக்கு என்று தனித்தொகை ஒதுக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அதனை அனைவரும் குறைக்க வேண்டும் என்பதுதான் நல்லெண்ணமாக இருக்க முடியும்.

அதையும் மீறி, மருந்தகங்களில் நிற்கிற கணங்களில் மருந்தாளுநர்கள் நுகர்வோரான நமக்கு வழங்குகிற கண்ணியத்தையும் மரியாதையையும் திருப்பித் தருவதுதான் ‘மருந்து’க்கான மதிப்பினை உறுதி செய்வதாக அமையும்.

அனைத்துக்கும் மேலே, நோயாளியின் நோய் குணமாக வேண்டும் என்று நூறு சதவிகிதம் உளமார எண்ணி மருந்து வழங்கும் கைகளின் தயாளத்தை எப்படிப் போற்றாமல் இருக்க முடியும்?!

– மாபா

Comments (0)
Add Comment