கற்றலில் புதிய அணுகுமுறை!

மனிதனின் அறிவு, ஒழுக்கம், திறமை மற்றும் ஆளுமையை மேம்படுத்தி சமூகத்தில் முழுமையான ஆற்றல் மிக்கவனாக மாற்றும் கருவியே கல்வி எனப்படுகிறது.

இது வெறும் படிப்பறிவை மட்டுமல்லாது சிந்தனைத் திறன் வளரவும், நற்பண்புகள் பெறவும், தனிமனித வாழ்க்கையை சிறப்பிக்கவும் வழிவகுக்கிறது.

குழந்தைகளின் எதிர்காலம் கல்விக் கூடங்களில் தான் கட்டமைக்கப்படுகிறது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, கல்வி முறை பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும் பாடத்திட்ட கல்வி ஒருபுறமும், அதனின் துணை கொண்டு செயல்முறை திட்ட கல்வி மறுபுறமும் செயல்பட்டு வருகிறது.

முதலாம் வகையில் ஆசிரியர் பாடம் நடத்துபவராக மட்டுமல்லாமல் ஒரு வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்.

மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து கருத்துக்களை எடுத்துரைத்தல் போன்ற முறைகள் மூலம் ஆழமான புரிதலை உண்டாக்க ஊக்குவிக்கப்படுகிறது.

குழுவாக படித்தல், கதைகள் மூலம் கற்பித்தல் மற்றும் கலந்துரையாடல் மூலம் மொழியியல் திறனை வளர்த்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவர், தாங்களே தேடி ஆராய்ந்து புதிய விஷயங்களைக் கண்டறியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய வழி வகுப்புகள் மூலம் கற்றல் வடிவமைக்கப்படுகிறது.

மேலும் மாணவர்களின் மனநிலை மற்றும் கற்கும் திறனுக்கு ஏற்ப, விளக்கப் படங்களின் உதவியோடு பாடங்கள் எளிமைப்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு மாணவனின் திறமைக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இம்முறையானது கல்வியை ஒரு சுமையாக கருதாமல் சுகமான அனுபவமாக மாற்றுகிறது.

இரண்டாம் முறையான செயல்முறை கல்வியையும், இன்று பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர். தற்போது இம்முறையானது, பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒழுக்கத்துடன் கூடிய நிஜமான வாழ்க்கை நடைமுறையை கல்வியுடன் இணைத்து போதிக்கப்படுகிறது. இதில் 60% வாழ்க்கை கல்வியும் 40% பாடக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் தியானத்துடன் ஆரம்பிக்கும் வகுப்புகள். தொடர்ந்து வரும் நேரத்தில் அவரவரின் ஆர்வத்தின் பேரில் வேலைகள் பிரித்து தரப்படுகிறது. தனி இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த காய்கறிகளை விளைவித்தும், கழிவுகளைப் பயன்படுத்தி உரங்களையும் தயாரிக்கின்றனர். சமையல் கலை வகுப்புகளும் இடம் பெறுகின்றன.

இவை தவிர கலை பொருட்கள் தயாரித்தல், மர வேலைபாடுகள் செய்தல், சிலை வடித்தல் போன்ற பல வகையான கைவினை கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்குள்ள நடைமுறைகள் பற்றி விளக்கப்படுகிறது.

RTO அலுவலகம் சென்று வாகன சோதனை பற்றியும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்பு நிலையம் போன்ற முக்கிய இடங்களுக்கும் சென்று அங்குள்ள செயல்பாடுகள் பற்றியும் விவரிக்கப்படுகின்றன.

வெளியிடங்களில் பெற்ற அனுபவங்களை கடிதமாக எழுதியும் படமாக வரைந்தும் பகிர்கின்றனர் மாணவர்கள். செயல்முறை கல்வி மூலம் பாடங்களை சிறந்த முறையில் உள்வாங்கும் திறனும் பெறப்படுகிறது.

மேலும் வார இறுதியில் கம்பம், யோகா, சிலம்பம் போன்ற வாழ்வியல் கலைகளும் கற்றுத் தரப்படுகின்றன. பன்மொழி கற்றலுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளில் சரியானதை தேர்வு செய்து வாழ்வில் வெற்றி பெற, மாணவர்களுக்கு இப் புதிய கற்றல் முறைகள் சிறப்பாக கை கொடுக்கும்.

S. வாணி

Comments (0)
Add Comment