நினைவில் நீடிக்கும் கருப்பு தினம்!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலுக்கு அருகிலுள்ள சின்னஞ்சிறு கிராமமான வேங்கைவயலில் 4 ஆண்டுகளுக்கு முன்பு – அதாவது 2022, டிசம்பர் 26ம் தேதி நடந்த அந்த அவலத்தை யாரும் லேசில் மறந்துவிட முடியாது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் உச்சம்பெற்று பல்வேறு குரூர வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

கோவிலுக்குள்ளும் தெருவுக்குள்ளும் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பொதுக் குளத்தில் நீர் எடுக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை, பஞ்சாயத்து என்கிற பெயரில் பல நாட்டாண்மைகளின் காலில் விழ வைக்கும் கொடுமை அரங்கேறி இருக்கிறது.

சிறுநீரை முகத்தில் கழித்த கொடுமையும் இங்கு நடந்திருக்கிறது.

இதற்கெல்லாம் உச்சமாகத்தான் மனித மலத்தை வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டியில் கலந்திருக்கிற குரூரமும் நிகழ்ந்து பேரதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

வேங்கைவயலில் இத்தகைய சம்பவம் நடந்ததும் பல்வேறு ஊடகங்களில் அது தொடர்பான செய்திகள் வெளிவந்தன. சில இயக்கத் தலைவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று வந்தார்கள்.

சி.பி.சி.ஐ.டி வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 75 பேர் வரை விசாரிக்கப்பட்டு, அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

தனிப்பட்ட விரோதத்தின் காரண்மாக இந்த சம்பவம் நிகழந்ததாக தெரிவிக்கப்பட்டு, அதற்கேற்ப குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இருந்தாலும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்கின்ற ஆதங்கமும் கோபமும் அங்குள்ள மக்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.

அதன் வெளிப்பாடாகத் தான் சில தினங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலை வேங்கைவயலில் உள்ள மக்கள் புறக்கணித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தங்களுடைய கிராமத்தில் நடந்த அநீதிக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அவர்கள் தரப்பிலான ஆதங்கமாக நீடிக்கிறது.

அண்மையில் நடந்த தேர்தலின்போது வேங்கைவயல் கிராமத்திற்குள் பலரும் வாக்கு கேட்டுப் போகவில்லை. கிராம மக்களின் கட்டுப்பாட்டை மீறி வெகு சிலர் மட்டும் வாக்களித்ததாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் நேரத்திய சூடு பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே வேங்கைவயல் கிராமத்தில் நடந்த தேர்தல் புறக்கணிப்பும் அதற்கு பின்னிருந்த மக்களின் ஒருமித்த உணர்வும் வெளி ஊடகங்களில் அவ்வளவாக வெளிப்படுத்தப்படவில்லை.

சமூக வலைதளங்களில் மட்டுமே அது குறித்த செய்திகள், காட்சிப் பதிவுகளும் வெளியாகின.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற தொன்ம முழக்கத்தை அடிக்கடி பொதுவெளியில் வெளிப்படுத்தும் நாம், வேங்கைவயல் மக்களுக்கான சமநீதியை ஏன் வழங்கத் தவறியிருக்கிறோம்?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இயங்குவதாக சொல்லும் இயக்கங்கள் ஏன் வேங்கைவயல் மக்களின் தேர்தல் புறக்கணிப்பைப் பொருட்படுத்தவில்லை?

இன்னும் பலரது நினைவுகளில் நாற்றமடிக்கும் ஒரு கரும்புள்ளியாக நீடித்துக் கொண்டிருக்கிறது வேங்கைவயல் என்கிற சின்னஞ்சிறு கிராமத்தில் நிகழ்ந்த குரூரமான நிகழ்வு.

– எஸ். தேவேந்திரன்

Comments (0)
Add Comment