எழுத்தாளரின் எண்ணத்தை திரையில் கொண்டுவர முடியுமா?

திரையுலகப் படைப்பாளிகள் காகிதத்தில் எழுதிய அனைத்தையும் திரையில் கொண்டு வந்து விட முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது.
 
நடிகர் – நடிகையினாலோ, லொகேஷன் பிரச்சினையினாலோ, பணப் பிரச்சினையினாலோ கதையில் சமரசம் பண்ண வேண்டியது வரும்.
 
அவர்கள் அப்படி சமரசம் பண்ணினாலும், திரைப்படத்தின் பைனல் அவுட் புட்-ல் எவ்வித குறைபாடுமில்லாமல் திரைக்குக் கொண்டு வருவதில்தான் ஒரு இயக்குநரின் திறமையே அடங்கியிருக்கு.
 
அப்படி மாற்றம் செய்து மிகப்பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களும் உண்டு. 
 
அந்த வகையில் முதல்படமாக மகேந்திரன் அவர்களின் இயக்கத்திலும், ரஜினி-ஸ்ரீதேவியின் நடிப்பிலும் வெளிவந்த, ‘ஜானி’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் பற்றி!
 
க்ளைமாக்ஸ் காட்சியின் லீட் (lead) காட்சியில், வானொலியில், “இன்று பலத்த புயல் காற்றும் மழையும் பெய்யும். மக்கள் எவரும் வெளியில் செல்ல வேண்டாம்” என வானிலை அறிக்கை வாசிக்கப்படுகிறது.
 
ஸ்ரீதேவியின் தோழியும் உதவியாளருமான ப்ரேமி, “இந்த புயல் – மழையிலே யாரு வரப்போறாங்க… அவசியம் நீ போய் பாடத்தான் போறியா?” என்று கேட்க ஸ்ரீதேவி, “நான் மத்தவங்களுக்காக பாடப் போகலே…. அவருக்காகத்தான் பாடப் போறேன்.”
 
“அவரு மட்டும் இந்தப் புயல் மழையிலே வந்துர முடியுமா?”
 
“எனக்கு அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தா அவரு கண்டிப்பா வருவார்.”
 
க்ளைமாக்ஸ் காட்சியில் அருமையான பாடல். கங்கை அமரன் அவர்களின் வரிகளில் எஸ்.ஜானகி அவர்களின் மயக்கும் குரலில், “காற்றில் எந்தன் கீதம்” எனும் அற்புதமான பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்.
 
பார்வையாளருக்கு மட்டும் ரஜினி புயல் மழையையும் பொருட்படுத்தாமல் ஓடிவருவதைப் பாடலுக்கு இடையில் காட்டிக் கொண்டே வருவார் இயக்குநர் மகேந்திரன்.
 
பாடி முடித்ததும் யாரை எதிர்பார்த்தாரோ அவர் வராமல் கொலையாளியான ரஜினி வருவார். தன்னைப்பற்றி விளக்கமளித்து போலீஸ் ஜீப்பில் ஏறி செல்வார்.
 
ஸ்ரீதேவி ஏமாற்றத்தோடு நிற்க சற்று தூரத்தில் தனது காதலன் ரஜினி வருவதை வியப்பும் மகிழ்ச்சியும் கலந்து பார்க்கிறார். அருகில் வந்து நிற்கிறார்.
 
இரண்டு பேரும் மகிழ்ச்சி பொங்க பார்க்கிறார்கள். இரண்டு பேருக்கும் மாற்றி மாற்றி க்ளோஸ் அப் சாட்ஸ் வைத்து காண்பித்த பின், அடுத்த ஷாட்டில் வேறொரு லொக்கேஷனில் இருவரும் கடற்கரை மணலில் மகிழ்ச்சியோடு நடந்தபடியே வருவதைக் காண்பித்து, ஃப்ரீஸ் செய்து ‘Music to life giver’ எனும் எழுத்துடன் படத்தை கவித்துவமாக முடித்திருப்பார் இயக்குநர்.
 
வானொலி செய்தியிலிருந்து படம் முடிவடையும் வரை மிகுந்த ரசனையோடு படமாக்கியிருப்பார் மகேந்திரன் அவர்கள்.
 
இவர்கள் இருவரும் சேரும் அந்தக் காட்சியில் பின்னணி இசையானது காட்சியை அப்படியே கட்டித் தழுவும் வகையில் அமைந்து இருக்கும்.
 
மற்றப் படங்களில் உள்ளது போல இருவரும் இறுக அணைத்து ஆரத்தழுவி முகம் முழுவதும் முத்தமிட்ட படி முடித்திருந்தால் அது வழக்கமான வெகுஜன சினிமாதான்.
 
கதாபாத்திரத்தின் குண இயல்பை கருத்தில் கொண்டு மிகுந்த நாகரிகத்தோடு காட்சியை கையாண்டிருப்பது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் அறிவாற்றலைத்தான் காட்டுகிறது.
 
இப்போ, இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு வருவோம். படத்தில் உள்ள இந்த க்ளைமாக்ஸ் காட்சியை இப்பொழுது பார்த்தாலும் நம்மால் நன்றாக ரசிக்க முடியும்.
 
ஆனால், அவர் இக்காட்சியை இப்படி எடுக்க நினைக்கவில்லை. ஸ்கிரிப்ட்டில் இருந்தது இதான்.
 
பெருத்த ஜனக்கூட்டத்துக்கு முன் ஸ்ரீதேவி பாடுவது போலவும், ரஜினி அந்தக் கூட்டத்தில் முண்டியடித்து வருவது போலவும், ஸ்ரீதேவி பாடிக் கொண்டிருந்தாலும் ரஜினியை அந்தக் கூட்டத்தில் கண்களாலயே தேடிக் கொண்டிருப்பது போலவும், பாடல் முடிந்தப் பிறகுதான் அவர்கள் இருவரும் சந்திப்பது போலவும் காட்சியை எழுதியிருக்கிறார்.
 
ஒரு பிரபல பாடகியின் கச்சேரி என்றால் பெருங்கூட்டத்தை காட்டியாக வேண்டும். அதற்கு பணச்செலவு அதிகம் ஆகும்.
 
அன்றைய சூழ்நிலையில் தயாரிப்பாளர் இவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது என்று சொல்லிய காரணத்தால், இப்பொழுது நாம் பார்க்கும் காட்சியை எடுத்திருக்கிறார் இயக்குநர். கேஆர்ஜி கம்பெனிதான் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
 
கெட்டதிலும் ஒரு நல்லது ஒளிந்திருக்கும்னு சொல்வார்களே அது இதான்.
 
“இல்லாததை நினைத்துக் கலங்கி நிற்காமல் இருப்பதை வைத்து சிறப்பாக செய்வதே புத்திசாலித்தனம்.”
 
– சே. மணிசேகரன்
 
நன்றி : முகநூல் பதிவு
Comments (0)
Add Comment