சாதுக்களின் வேடத்தில் சரிந்த சாம்ராஜ்யங்கள்!

‘நச்’ திரைப்பட மொழி:

“சாதுக்கள் வேடத்திலே தான் பல சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன”

“பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்”.

“பொன்னும், மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே தமிழ்ப் பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே வீரனே! என் விழி நிறைந்தவனே! என்று யாரைச் சீராட்டிப் பாராட்டினீர்களோ,

அவனை, அந்த மனோகரனைச் சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி, சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்னும் உங்களது தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

வசந்த சேனை – வட்டமிடும் கழுகு. வாய் பிளந்து நிற்கும் ஓநாய். நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு. அதோடு அவள் வடக்கத்திக்காரி…

புருசோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டும் விழியில் உலகத்தைக் காண்பவரே!

மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தப் பரம்பரையில் மாசாக வந்தவரே!

மயிலுக்கும் குயிலுக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே!

குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டை எனக் கூறிய குருடரே!

என் தாய் அன்பின் பிறப்பிடம். அறநெறியின் இருப்பிடம். கருணை வடிவம். கற்பின் திருவுருவம். மாசற்ற மாணிக்கம். மாற்றுக் குறையாத தங்கம்.

அவர்களை அவதூறு கூறிய அங்கங்களைப் பிளந்தெறிவேன்.

இந்தத் துரோகப் பேச்சுக்கு உம்மைத் தூண்டி விட்ட துர்த்தந்தையின் உடலைத் துண்டாடுவேன்.

துணிவிருந்தால், தோளிலே வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை! தடுத்துக் கொள்ளும் உமது சாவை!

தைரியமில்லா விட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகி விட்டிருந்தால், ஓடி விடும் இதை விட்டு. இதை விட்டுப் புறமுதுகு காட்டி ஓடும்.

புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றிலே புறமுதுகு காட்டி ஓடும்.”

வசந்த சேனையின் மகன் வசந்தன்: “அண்ணா நீ வாழ வேண்டும்; அண்ணா நீ தான் இந்த நாட்டை ஆள வேண்டும்.”

1954 – ஆண்டு வெளிவந்த ‘மனோகரா’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாபாத்திரம் பேசிய வசனம்.

சிவாஜி, கலைஞர் கூட்டணியில் வெளியான ‘பராசக்தி’ எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதைவிட பல மடங்கு கரவொலியையும் வசூலையும் ‘மனோகரா’ அள்ளியது குறிப்பிடத்தக்கது.

 
Comments (0)
Add Comment