சைகை மொழி என்பது அனைவருக்குமானது!

செப்டம்பர் 23 – சர்வதேச சைகை மொழிகள் தினம்

ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடத்தில் தனது எண்ணத்தை, சொல்ல விரும்புகிற தகவலைப் பகிர நினைத்தபோது உலகின் முதல் மொழியின் அடிப்படை தொடங்கியிருக்கும். அது வெறும் ஓலமாகவோ, ஒற்றை எழுத்தாகவோ கூட இருந்திருக்கலாம்.

அந்த சத்தம் விஷயத்தைக் கடத்தாதபோதோ அல்லது அதற்கு முன்னதாகவோ சைகை மூலமாகத் தகவல் பரிமாறிக் கொள்கிற நுட்பம் மனிதர்களுக்கு வாய்த்திருக்க வேண்டும்.

எத்தனையோ மொழிகள் இன்று உலகில் பேசப்படுகின்றன. அவற்றைப் பேச இயலாமல், கேட்க இயலாமல் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாட்டோடு பலர் தவித்து வருகின்றனர்.

சுமார் 7 கோடிக்கும் மேற்பட்டோர் உலகம் முழுக்க ‘கேட்டல் குறைபாடு’ உடையவர்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சரி, அவர்கள் எப்படித் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள்? தங்களது எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரிவிப்பார்கள்? அதற்காகத்தான் ‘சைகை மொழி’ உள்ளது.

அது நாம் பேசும் மொழி எப்பட்டதாயினும், அதிலிருக்கும் அனைத்தையும் வெறும் கையசைவுகள், கண்ணசைவுகள் மற்றும் முக பாவனைகளைக் கொண்டு, அவர்களுக்கு உணர்த்திவிடும்.

உலகம் முழுக்கச் செவித்திறன் குறைபாட்டுடன் இருக்கும் மனிதர்களில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். அதனால், சுமார் 300 சைகை மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் அவற்றின் பயன்பாடும் உள்ளடக்கமும் வேறுவிதமாக இருக்கும். ஆனால், வளரும் நாடுகளில் அவை வேறுவிதமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.

அந்தந்த கலாசார, பாரம்பரிய நடைமுறைகளுக்கேற்ப சைகை மொழிகள் அமைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். அதற்கேற்ப ஒவ்வொரு அசைவுக்குமான அர்த்தம் வரையறுக்கப்பட்டிருக்கும்.

இது தவிர, சர்வதேச சைகை மொழி ஒன்றும் புழக்கத்தில் உள்ளது.

அவை சர்வதேச அளவில் நடக்கிற நிகழ்வுகள், பயணங்களில் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் சக மனிதர்களோடு பழக, உறவு பேண உதவுகிறது.

கைகள், விரல்களைக் கொண்டு வெவ்வேறு வடிவங்களை உருவாக்கி, அதன் வழியே வெவ்வேறு வார்த்தைகளின், வாக்கியங்களின் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதையே ‘சைகை மொழி’ என்கிறோம்.

பெரும்பாலும் இதில் முக பாவனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முகத்தில் மகிழ்ச்சி, சோகம், பயம், ஆச்சர்யம், அதிர்ச்சி எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலமாகப் பேச விரும்புகிற விஷயம் எளிதில் பரிமாறப்படுகிறது.

அதனால் சிறிதாகப் புருவம் உயர்த்துவது, வாயை கோணிக் கொள்வது, கண் விழிகளை உருட்டுவது, உடலை விரும்பும் விதமாக மாற்றிக் கொள்வது என ஒவ்வொன்றும் சைகை மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தான் நடித்த ஒரு நகைச்சுவை காட்சியில் ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்ற வசனத்தைச் சொல்லத் தனது உடலைக் குறுக்கிச் சுருக்கியும் கம்பீரமாக நிமிர்த்தியும் உடல்மொழியில் மாற்றத்தைக் காட்டியிருப்பார்.

இப்படி நம்மையும் அறியாமல் நாம் வெளிப்படுத்துகிற சைகைகளை தனியே உற்றுநோக்கினால், அவற்றின் சைகை மொழிகளின் சாயலை உணர முடியும்.

வெறுமனே பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் மட்டுமே சைகை மொழிகளை படித்தறிய வேண்டும் என்பதில்லை.

அவர்களுடன் உரையாட விரும்புகிற, அவர்களது விருப்பங்களையும் எண்ணப்பகிர்வையும் அறிய நினைக்கிற எவரும் இதனைக் கற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமைகள் தவறாமல் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிற எவரும், செவித்திறன் குறைபாடு உடையவர்களும் நம்மோடு சகஜமாகக் கருத்து பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்றெண்ணுவது தான் இயல்பு.

இதன் மூலமாக, நம் குடும்பத்தில் இருக்கிற மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் சமூகத்தில் அவரைப் போன்று இருக்கிற பிறரோடும் நாம் உரையாட முடியும்.

உலகம் முழுக்க இப்படிப் பேசப்படுகிற சைகை மொழிகளின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுகிற வகையில், அது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23-ம் தேதியன்று ‘சர்வதேச சைகை மொழிகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக செவித்திறன் குறைபாடுடையோர் கூட்டமைப்பு இதனை 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

’சைகை மொழி உரிமைகள் இல்லாமல் மனித உரிமைகள் இல்லை’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் ‘சர்வதேச செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான வாரம்’ பின்பற்றப்பட்டது. 1958-ம் ஆண்டு முதல் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினசரி வாழ்வில் எப்போதாவது பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான பள்ளிகளில் படித்தவர்களை காணும் அனுபவங்களை நம்மில் சிலர் பெற்றிருக்கக்கூடும்.

அப்படிப்பட்ட தருணங்களில் சைகை மொழியை மிக உவகையோடு அவர்கள் பயன்படுத்துவதையும் கண்டிருக்கக் கூடும்.

அவர்களது உடலசைவுகள், முக பாவனைகளில் நுரைத்துப் பொங்கிப் பெருவெள்ளமெனப் பாயும் அருவியின் ஆர்ப்பரிப்பை உணர முடியும்.

அது அவர்களது மனங்களில் அடைபட்டுக் கிடக்கிற எண்ணங்கள் பெருக்கெடுத்து ஊற்றாகக் கொப்பளிப்பதன் வெளிப்பாடு. அது சில நேரங்களில் அதீதமாகத் தோன்றலாம்.

அதனால், சைகை மொழியின் கூறாகவும் அந்த ‘அதீதம்’ இருந்து வருகிறது.

தராசின் ஒருபக்கம் சாயும்போது இன்னொரு பக்கத்தில் எடையை அதிகப்படுத்துவது போலானது அது.

வாருங்கள், சைகை மொழிகளை முழுதாகப் படிக்க இயலாவிட்டாலும் அவற்றின் அடிப்படைக் கூறுகளை தெரிந்துகொள்வோம்..!

நம்மைச் சுற்றியிருக்கும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்களை ‘நிறைவானவர்களாக’ உணரச் செய்ய, அவற்றின் வழியே அவர்களோடு உரையாடுவோம்..!

– மாபா

Comments (0)
Add Comment