கு.அழகிரிசாமி – தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்!

ச.தமிழ்ச்செல்வன்

ஒரு கதை மனதை மட்டுமல்ல, தொடர்ச்சியாக உடலையும் பாதிக்கும் என்பதை நான் முதன் முதலாக உணர்ந்தது அமரர் கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையை வாசித்தபோதுதான்.

அக்கதையை வாசித்த நாளில் அது ஏற்படுத்திய அதிர்வுகளைத் தாள முடியாமல் மூன்று நாள் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டேன்.

இது சற்று அதீதமாகத் தெரியலாம் என்றாலும் இது உண்மை.

எங்கள் கரிசல் மண்ணின் முன்னணி படைப்பாளியான கு.அழகிரிசாமியும், `நைனா’ என நாங்கள் அன்புடன் அழைக்கும் கி.ராஜநாராயணனும் ஒரே ஊர்க்காரர்கள்.

இடைசெவல் கிராமம் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய இரு பெரும் ஆளுமைகள் அவர்கள்.

“என் கலை சிருஷ்டிகளுக்கு ஒரு ‘ராஜநாராயணன்’ இல்லாமல் முடியவே முடியாது. சுவரில்லாமல் சித்திரம் எழுதுவதா? ராஜநாராயணன் என்றால் ஒரு குறிப்பிட்ட அடையாளங்களும், குணாதிசயங்களும் உள்ள உன்னோடு அடங்கிவிடவில்லை. நான் நினைக்கும் அந்த ராஜநாராயணனில் இவன் ஒரு பாகமேயாகும்.

இந்த ராஜநாராயணனுடைய கூட்டுறவில் இவனைச் சுற்றிச் சுற்றி, இரவு பகலாகப் படர்ந்த சிந்தனைகள், கனவுகள் ஆகிய பொருள்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எங்கும் கேட்கவும்,

எங்கும் பார்க்கவும், எங்கும் தீண்டவும் முடியும் ஒருவனையே நான் குறிப்பிடுகிறேன். அவனை உனக்கு அடையாளம் கூடத்தெரியாது.

ஆனால், என்னோடு அவன் அந்த பிரம்மாண்டமான ரூபத்திலேயே பழகுகிறான்; நேசிக்கிறான்; ஆடிப்பாடிக் களிப்பிக்கிறான்.

மனித ஜீவன்களின் நெருங்கிய கூட்டுறவில் இந்த அதீதத்தன்மை இயற்கையாகிவிடுகிறது இல்லையா?

உண்மை. அப்படி இல்லை என்றால், இன்றுவரை உலகத்தில் ஒரு காவியமோ, கலையோ பிறந்திருக்குமா?” – இது 1945-ல் கு.அழகிரிசாமி கி.ரா.வுக்கு எழுதிய கடித வரிகள் இவை.

இன்னொரு கடிதத்தில் “உன் கடிதம் காணாததால் நான் இந்தக் கடிதம் எழுதுவதாக நீ நினைக்கலாம்.

இல்லை. நீ இதற்குள் பத்துக் கடிதங்கள் எழுதியிருந்தாலும் இந்தக் கடிதம் எழுதாமல் தீராது. ஏதோ ஒரு அன்பின் சக்தி உள்ளே இருந்து தூண்டுகிறது” என்று எழுதிச் செல்கிறார்.

பொறாமை கொள்ளச்செய்யும் அப்படி ஒரு காவியத்தன்மை கொண்ட அன்பும், நட்பும் இருவருக்கும் இடையில் நிலவியது.

கு.அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் உள்ள இடைசெவல் என்னும் சிற்றூரில், 1923-ல் குருசாமி – தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.

பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.

வசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார்.

அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

1970-ல் காலமான அவர் இப்பூமியில் வாழ்ந்தது 47 ஆண்டுகள்தாம். அக்குறுகிய வாழ்வுக்காலத்தில் என்றும் அழியாத அழுத்தமான தடங்களை விட்டுச்சென்றுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், பத்திரிகைப்பணி, பதிப்புப்பணி, கடிதங்கள், இலக்கியப்பேச்சு என கலாசாரத்தின் ஒவ்வொரு அசைவிலும் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு முழுமையான இலக்கியவாதியாக வாழ்ந்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

பிற படைப்புகளும் முக்கியமானவை என்றாலும் நாங்கள் அவரைச் சரணடைந்தது அவரது சிறுகதைகளில்தான்.

கு.அழகிரிசாமியின் எழுத்துக்களை என் 25 ஆண்டுகளாகப் பரிச்சயம் கொண்டவன். 14 வருஷங்களுக்கு முன்னால், அவரை நேரிடையாகக் கண்டு நட்பும் பெற்றிருக்கிறேன்.

இது அவ்வளவு முக்கியமில்லை. இன்னும் நான் உயிர்தரித்து உலவுகின்ற எஞ்சிய நாட்கள் முழுவதும், இந்த 14 வருஷங்களாக இருந்த நேரிடைப்பழக்கம் என்கின்ற அவ்வளவு முக்கியமற்ற விஷயம் நீங்கலாக, எப்பொழுதும் போல அவருடன் நான் பரிச்சயம் செய்து கொண்டிருப்பேன்.

இதுதான் ரொம்பவும் முக்கியம். இதற்கான காரியத்தை அவர் செய்து விட்டுப் போயிருக்கிறார்.

கு.அழகிரிசாமி என்கிற ஐந்தடி ஏழு அங்குலம் உயரமுள்ள, சிறிதே தலை வழுக்கையான, ஒரு கை ஊனமான, சதா நேரமும் சிரிக்கின்ற முகமுள்ள அந்த மனிதன் என்கிற ஸ்தூலமான பொய்மைதான் இப்போது இல்லை.

மற்றபடி, அழகிரிசாமி என்கிற மனிதனின் முகம் தெரியாமல், அவரது ‘திரிவேணி’யையும், ‘சிரிக்கவில்லை’யையும், ‘அழகம்மா’வையும், ‘வெறும் நாயை’யும், ‘ராசா வந்துட்டாரு’வையும் நான் படித்து, பரவசமுற்று, பாராட்டி, நினைத்து நெகிழ்ந்திருக்கிறேன்.

அந்த அழகிரிசாமி இப்போதும் இருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். இதுதான் ரொம்பவும் முக்கியமான அர்த்தமுள்ள விஷயம்” என்று ஜெயகாந்தன் ‘ஞானரதம்’ இதழில் அழகிரிசாமியின் மறைவையொட்டி 1970-ல் எழுதியிருந்தார்.

இந்தக் கதைகளில் வருகிறவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும்தான்.

ஆயினும் அவர்களைக் கதை ஆசிரியர் ஏதோ, ஜால வித்தையினால் அபூர்வமான கதபாத்திரங்களாகத் திகழும்படி செய்திருக்கிறார். அவர்கள் நம்மை விட்டுப் போகாமல் சுற்றித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்படியும் செய்துவிட்டிருக்கிறார்.

குழந்தை சாரங்கராஜன் நம் கண்ணினும் இனிய கண்மணியாகிவிடுகிறான். அவனை அழைத்து வந்து ஏதேனும் ஒரு புத்தகத்தில் ‘அன்பளிப்பு‘ என்று எழுதிக் கொடுக்க நம் உள்ளம் துடிதுடிக்கிறது.

மங்கம்மாள் அரை அடி முன்னால் நகர்ந்து வந்து நின்று “எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான். வேணும்னா வந்து பாரு” என்று சொல்லும் காட்சி மனதிலிருந்து அகலுவதில்லை.

அவனைத் தொடர்ந்து சென்று அந்த ராஜாவை நாமும் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாகிறது.

கல்யாண கிருஷ்ணனைத் தொடர்ந்து அந்தமான் தீவு வரைக்கும் போக நாமும் தயாராகிறோம்; செல்கிறோம். ஆனால் அங்கேயிருந்தும் அவன் டிமிக்கி கொடுத்துவிட்டானே!

ஒரு வேளை காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போனால் அவனைக் கண்டுபிடிக்கலாமோ?

ஸ்ரீ கு.அழகிரிசாமிக்குக் கதை புனையும் கலை அற்புதமாக வந்திருக்கிறது. சாதாரண புருஷர்களும், ஸ்திரீகளும், குழந்தைகளும் அவருக்குக் கை கொடுத்து உதவி இருக்கிறார்கள்.

“கதை ஆசிரியர் எதற்காக கதை எழுதுகிறார்? கடவுள் எதற்காக இந்த உலகத்தைப் படைக்கிறாரோ, அதே காரணத்துக்காகத்தான்.

இந்த உலகத்தில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கின்றன.

இலக்கிய விமர்சகரை இந்த உலகத்தைப் பற்றி விமர்சனம் எழுதச் சொன்னால் இதில் உள்ள குற்றம் குறைகளை எடுத்துக் கொண்டு வெளுத்து வாங்கிவிடுவார்!

ஆனாலும், இவ்வளவு குறைபாடுகளை உடைய உலகத்தை சிருஷ்டி செய்வதில் கடவுள் ஆனந்தம் அடைகிறார்.

இல்லாவிடில் இவ்வளவு சிரமமான சிருஷ்டித் தொழிலில் பிடிவாதமாக ஈடுபட்டிருக்கமாட்டார் அல்லவா? அது போலவே கதை ஆசிரியர்களும் கதை புனைவதில் ஏற்படும் ஆனந்தம் காரணமாகவே கதை எழுதுகிறார்கள.

தாங்கள் எழுதும் கதைகளை யாராவது படித்தாலும் படிக்காவிட்டாலும், பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும், அதனால் ஊதியம் ஏதேனும் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், கதை ஆசிரியர்கள் கதை எழுதிக் கொண்டுதானிருப்பார்கள்” என்பது அமரர் கல்கி, கு.அழகிரிசாமியின் கதைகள் பற்றி எழுதிய குறிப்பு.

புதுமைப்பித்தனைத் தனது குருவாக வரித்துக்கொண்ட கு.அழகிரிசாமியின் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு ’மாஸ்டர் பீஸ்’.

இது நல்ல கதை, அது அற்புதமான கதை என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாதபடி ஒவ்வொரு கதையிலும் அவருடைய எழுத்தின் ஒளியை நாம் தரிசிக்கிறோம்.

அவருடைய  ‘சுய ரூபம்’ கதை பற்றி பிரபஞ்சன் எழுதிய குறிப்பு:

“தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்திய அமரர் கு.அழகிரிசாமியின் இந்தக் கதையைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வாசித்தேன்.

மீண்டும் சென்ற வாரம் திரும்பவும் வாசிக்க நேர்ந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் அதை வாசிக்கையில், எனக்கேற்பட்ட அதே இலக்கிய அனுபவம் இப்போதும் ஏற்பட்டது.

பசி மட்டும்தானா இக்கதையின் கரு. மேலும் பல பரிமாணங்களை உள்ளடக்கியது. இக்கதை இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான உரிமைப்போராட்டமே அது.

இன்னும் ஆழமாகப் பார்ப்போமேயாகில், இக்கதையில் முரண் சக்திகள் இல்லை. வில்லன்கள் இல்லை. உண்மையில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் வித்தியாசமும் பெரிதாக இல்லை.’’

– நன்றி: விகடன்

Comments (0)
Add Comment