தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், விக்கிரவாண்டியிலும் மதுரையிலும் மாநாடுகள் நடத்தி ‘மாஸ்’ காட்டினார்.
இதன் தொடர்ச்சியாக மக்களை நேரடியாக சந்திக்க முடிவு செய்து, தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
விடுமுறை தினமான சனிக்கிழமைகளில் அவரது மக்கள் சந்திப்பு நடக்கிறது. கடந்த 13 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
திருச்சியிலும் அரியலூரிலும் அவர் பேசினார். இரு கூட்டங்களிலும் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
அன்றைய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர் குன்னம் வந்தபோது, நேரம் கடந்து விட்டது. இதனால் தனது முகத்தை மட்டும் காட்டிவிட்டுச் சென்று விட்டார்.
பயணத்திட்டத்தில் இருந்த பெரம்பலூருக்கு அவர் போகவில்லை. அங்கு இன்னொரு நாள் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
இரண்டாம் கட்டமாக விஜய் கடந்த சனிக்கிழமை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். நாகப்பட்டினம் விஜய்க்கு புதிய தளமல்ல.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து 2011 ஆம் ஆண்டு நாகையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்றுள்ளார்.
அப்போது விஜய் மக்கள் இயக்கத்தை அவரது ரசிகர்கள் தொடங்கி இருந்தனர். அந்த இயக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம் அது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாகைக்கு வந்திருந்தார்.
இந்த முறை ஒரு அரசியல் கட்சியின் தலைவராக வந்திருந்த அவரைக் காண பெருங்கூட்டம் திரண்டிருந்தது.
தனது பிரச்சாரத்துக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் அவர் பொங்கி எழுந்தார்.
’’ஆர்எஸ்எஸ் தலைவர், பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் வந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? மின்சாரத்தை நிறுத்துவீர்களா?
நிறுத்த மாட்டீர்கள். நீங்கள் அவர்களது மறைமுக உறவுக்காரர்கள்” என உணர்ச்சி வசப்பட்டார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாகவே சவால் விடுத்தார். “2026-ல் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் வேண்டாம்.
தில்லாக, கெத்தாக, நேர்மையாக தேர்தலைச் சந்திக்க வாருங்கள், நீங்களா அல்லது நானா என்று பார்த்துவிடலாம்” என விஜய் குரலை உயர்த்திப் பேச கூட்டம் ஆர்ப்பரித்தது.
விஜய் பேச்சுகளுக்கு வழக்கமாக திமுகவினர்தான் எதிர்வினை ஆற்றுவார்கள். ஆனால், நாகை பேச்சுக்கு தமிழக அரசே விளக்கம் அளித்தது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து தமிழக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘’பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாடு வரும்போது நிபந்தனைகள் போடுவீர்களா? என விஜய் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு போலீசார் 20 நிபந்தனைகளை விதித்தனர் என்பதுதான் உண்மை – எனவே விஜய் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என அதில் கூறப்பட்டது.
நாகை, திருவாரூரில் விஜய்க்கு திரண்ட கூட்டம் திமுகவை மட்டுமல்ல அதன் கூட்டணிக் கட்சியினரையும், பாஜக – அதிமுக கூட்டணியையும் மிரள வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
‘விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது’ என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒரே குரலில் கருத்து தெரிவித்துள்ளனர்.
“தமிழக அரசியல் களத்தில் விஜய் மையப்புள்ளி ஆகிவிட்டார். தமிழ்நாட்டு அரசியல் இன்று அவரை முன்வைத்தே சுழல்கிறது” என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
– பாப்பாங்குளம் பாரதி.