ஒரு பெரிய குறிப்பேட்டின் பின்பக்க அட்டையில் இருந்து மெதுவாகத் தீப்பிடிக்கத் தொடங்கினால் என்ன ஆகும்? ஒவ்வொரு பக்கமாகக் கருகிச் சாம்பலாக, அது பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல் முன்பக்க அட்டை நோக்கித் தகிப்பு ஊடுருவும்.
அந்த புத்தகத்திற்கு எத்தகைய வலி இருக்கும் என்று உணர முடியாவிட்டாலும், அந்த காட்சியைக் காணும் எவருக்கும் நெஞ்சம் பதைபதைப்பது உறுதி.
‘அல்சைமர்ஸ்’ நோய் தாக்கியவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நட்பு வட்டத்தில் உள்ளவர்களும் கிட்டத்தட்ட அப்படியொரு உணர்வைத்தான் பெறுகின்றனர். ஏனென்றால், பாதிக்கப்பட்டவரது மூளையின் அடுக்குகளில் படிந்திருக்கும் நினைவுகளைப் பின்னோக்கி அழித்துக்கொண்டே செல்வதுதான் அந்த நோயின் இயல்பு.
நேற்று என்ன நடந்தது? போன வாரம் யாரைச் சந்தித்தோம் என்று ஒவ்வொரு நாட்களின் நினைவுகளும் அந்நோய் பாதித்தவர்களை விட்டுக் கழன்று செல்லும்.
அந்த நினைவுகள் கடற்கரை மணலில் வரையப்பட்ட சிற்பம், ஓவியம் போன்று சட்டென்று கரைந்து போகும்போது, நோயாளியின் உடனிருப்பவர்கள் தான் துடிதுடித்துப் போவார்கள்.
அல்சைமர்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு ஒருகட்டத்தில் ‘நான் யார்’ என்பது கூட மறந்து போகும். அந்தளவுக்கு நிலைமை முற்றிவிடாமல் தடுக்க வழியில்லை; ஆனால், அந்த நிலையை எட்டாமல் தள்ளிப்போட முடியும். மூளைக்கும் உடலுக்கும் சில பயிற்சிகள் கொடுக்கலாம். சில மருந்துகள் கொடுத்தும் அந்த வேலையைச் செய்யலாம்.
சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘சையாரா’ இந்திப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு படைப்பு. அப்படத்தில் வரும் நாயகி பாத்திரம் ‘அல்சைமர்ஸ்’ நோயால் பாதிக்கப்படுவதாகக் காட்டப்பட்டிருக்கும்.
அந்தப் படமே ‘எ மொமண்ட் டூ ரிமெம்பர்’ எனும் கொரிய திரைப்படத்தின் ‘உல்டா’ தான். சில காட்சிகள், கதையமைப்பு, கிளைமேக்ஸ் என உள்ளடக்கம் அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கும்..
எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ் திரைப்படங்களில் நாயகன் அல்லது நாயகி பாத்திரங்களுக்கு ‘கேன்சர்’ இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ரத்தப் புற்றுநோய் எனும் பாதிப்பு அதற்காக நிறையவே நம் இயக்குநர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட அப்படியொரு நிலையை ‘அல்சைமர்ஸ்’ எதிர்காலத்தில் அடையக்கூடும்.
சரி, இதுவரை ‘அல்சைமர்ஸ்’ நோய் பாதிப்பைப் பேசிய திரைப்படங்கள் என்னவென்று பார்க்கலாமா?
60 வயது மாநிறம்
’கோதி பன்னா சதரனே மைகட்டு’ என்ற பெயரில் கன்னடத்தில் தயாரான படத்தைத் தமிழில் ராதாமோகன் ‘ரீமேக்’ செய்திருந்தார். இதில் ’அல்சைமர்ஸ்’ பாதிப்பு உள்ளவராக பிரகாஷ் ராஜும் அவரது மகனாக விக்ரம் பிரபுவும் நடித்திருந்தனர்.
நோய் பாதிப்புக்கு உள்ளானவரை, அந்த நோயின் இயல்போடு ஏற்றுக்கொள்ள முனைகிற மனிதர்கள் இதில் பிரதானமாகக் காட்டப்பட்டிருந்தனர். கதிரின் கலை வடிவமைப்பு, மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை என்றிருந்தபோதும், சரியான கவன ஈர்ப்பை உருவாக்காமல் ரசிகர்களைக் கடந்து சென்றது இப்படைப்பு.
தி ஸ்மைல் மேன்
வெகு நாட்களுக்குப் பிறகு சரத்குமார் நாயகனாக மீண்டும் நடித்த படம் இது. ஷ்யாம், பிரவீன் இதனை இயக்கியிருந்தனர். கவாஸ்கர் அவினாஷ் இதற்கு இசையமைத்திருந்தார்.
அல்சைமர்ஸ் பாதிப்பு உள்ள ஒரு காவல் துறை அதிகாரி, தனது விருப்ப ஓய்வுக்கு முன்னதாக ஒரு சைக்கோ கொலையாளியைக் கண்டறிவதுதான் இப்படத்தின் கதை. நாயகனின் நோய் பாதிப்பு தான் இதில் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்துவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஒரு கமர்ஷியல் படமாக அமைந்த காரணத்தால், இதில் நோய் பாதிப்பின் வேறு பக்கங்களை காண முடியாது.
ஹவுஸ் ஓனர்
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்களது இளவயது வாழ்வைச் சொல்கிற காட்சிகளில் கிஷோர் டி.எஸ் மற்றும் லவ்லின் நடித்திருந்தனர்.
ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருந்தார். முதுமையில் இருக்கிற தம்பதிகளில் கணவருக்கு அல்சைமர்ஸ் பாதிப்பு ஏற்பட, அதனை எதிர்கொண்ட மனைவியின் அனுபவம் எத்தகையது என்று சொன்னது இப்படம்.
பிளாக்
அமிதாப் பச்சன், ராணி முகர்ஜி நடிப்பில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த இந்திப் படமிது.
ஹெலன் கெல்லர் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என்று பல வண்ணங்களை வாரியிறைத்து ‘தேவதாஸ்’, ’ஹம் தில் தே சுகே சனம்’ படங்களைத் தந்தவர் என்பதால் ஆசையோடு தியேட்டருக்கு வந்தவர்களுக்கு, இந்தப் படத்தில் நீலமும் கருப்பும் கலந்த கலவையைத் திரையில் ஊற்றி ஆங்கிலப் பட பாணியிலான காட்சியாக்கத்தைக் காண்பித்திருந்தார் சஞ்சய். இப்படத்தில் அமிதாப்பின் பாத்திர வார்ப்பு கண் கலங்க வைப்பதாக இருக்கும்.
தன்மாத்ரா
’ஆடுஜீவிதம்’ தந்த இயக்குனர் பிளெஸ்ஸியின் ஆரம்ப காலப் படைப்புகளில் ஒன்று இது. ’டிமென்ஷியா’ எனும் மறதி பாதிப்புக்கு ஆளாகும் நாயக பாத்திரம், மெல்லத் தனது சமூக, குடும்ப வாழ்வில் அதனால் சந்திக்கிற பிரச்சனைகளைச் சொல்வதாக இப்படம் இருக்கும். இதில் மோகன்லால் அந்நோய் பாதிப்புக்கு ஆளானவராகவும், மீரா வாசுதேவன் அவரது மனைவியாகவும் நடித்திருந்தனர்.
பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே நடிகையாக அறிமுகமான ‘மாய்’ படத்தில் ‘அல்சைமர்ஸ்’ நோய் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும்.
கோல்டு பிஷ், லிஸன் அமாயா, மை நே காந்தி கோ நஹி மாரா, யூ மீ அவுர் ஹம் என்று சில இந்தி மற்றும் பிற மொழிப் படங்கள் அல்சைமர்ஸ் நோய் பற்றிப் பேசியிருக்கின்றன.
இது போகச் சில படங்கள் அல்சைமர்ஸ் மற்றும் டிமென்ஷியாவை தொட்டுச் சென்றிருக்கின்றன. பா.ரஞ்சித் தயாரிப்பில், தமிழில் சுரேஷ் மாரி இயக்கிய ‘ஜெ பேபி’ அதிலொன்று. அதில் நாயகி ஊர்வசிக்கு ‘பைபோலார் டிசார்டர்’ரும் இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும்.
வரும் நாட்களில் இப்பாதிப்பை பயன்படுத்தி கதை உருவாக்குவது அதிகமாகலாம். அதற்கான வாய்ப்புகள் அனேகம்.
ரொமான்ஸ், ட்ராமா வகைமை மட்டுமல்லாமல் இன்ன பிற வகைமைகளையும் கலந்து ‘அல்சைமர்ஸ்’ நோய் பாதிப்பைச் சொல்கிற படங்களை உருவாக்கினால், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையனுபவம் கிடைக்கும். கூடவே, இந்த நோய் குறித்த விழிப்புணர்வும் பன்மடங்காகப் பெருகும்.
ஏனென்றால், 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கிட்டத்தட்ட 90 லட்சம் பேர் இந்தியாவில் இப்பாதிப்பினால் அவதியுற்று வருவதாகத் தெரிய வந்திருக்கிறது. முதுமை இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், வேறு சில காரணிகளும் இதன் பின்னிருப்பது தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.
மறதி என்பது இன்றைய வேக யுகத்தில் ஒரு வழக்கமாக, இயல்பாக உருமாறி வருகிறது. நவீன தொழில்நுட்பங்களைச் சார்ந்து வாழ்வதும் ஒரு காரணம்.
அப்படியொரு சூழலில் மனிதர்கள் தங்களது மூளை நலன், நினைவு சக்தி மற்றும் மறதி சார்ந்த பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வைப் பெறும் விதமாக மேற்சொன்ன படங்கள் நிச்சயம் இருக்கும்..!
– மாபா