தீபாவளிக்கு ‘ரெண்டு’ பிரதீப் ரங்கநாதன் படமா?!

திரையுலகில் ஒரு நடிகர் நட்சத்திரமாக மாறுவதென்பதும் அவரது வளர்ச்சி ஏறுமுகமாக இருப்பதும் இன்று மட்டும் நிகழவில்லை. தியாகராஜ பாகவதர், சிவாஜி கணேசன் காலம் தொட்டு அது தொடர்ந்து வருகிறது.

எழுபதுகளின் இறுதியில் அப்படித்தான் ரஜினிகாந்த் உச்சம் நோக்கி முன்னேறினார். அவரது நடையைப் போன்றே அந்த வளர்ச்சியும் சரசரவென்று அமைந்தது. மோகன், ராமராஜன் போன்றவர்களும் அப்படித்தான் வெற்றி பெற்றார்கள்.

2010-க்குப் பிறகு அப்படியொரு ஏற்றத்தைச் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றோர் சம்பாதித்தனர். இயக்குனர் சசிகுமாரையும் அந்த வரிசையில் சேர்க்க முடியும்.

கடந்த இரண்டாண்டுகளாக அப்படியொரு புகழோடு இருக்கிறார் இயக்குனர், நடிகரான பிரதீப் ரங்கநாதன். ‘பிஆர்’ என்று சுருக்கமாக இவரை அழைக்கிறது தமிழ் திரையுலகம்.

இத்தனைக்கும் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து ‘கோமாளி’ இயக்கியபிறகு, ‘லவ் டுடே’ படத்தை இவர் இயக்கி நடித்தார். மிகச்சிறிய பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் பல மடங்கு லாபத்தைத் தந்ததால், ‘ஓவர்நைட்’டில் நட்சத்திரமாக உருவெடுத்தார்.

தனது காலேஜ் சீனியர் அஸ்வத் மாரிமுத்து உடன் இவர் இணைந்து தந்த ‘டிராகன்’ வசூலில் பெருவெற்றி பெற்றது மட்டுமல்லாமல், ரசிகர்கள் ‘நல்ல கமர்ஷியல் சினிமா’ என்று சொல்லும்படியாகவும் அமைந்தது. அதனால், குடும்பத்தோடு படம் பார்க்க வருகிற ரசிகர்களையும் இவர் சம்பாதித்திருக்கிறார்.

தற்போது பிஆர் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ எனும் ‘லைக்’ தயாராகியிருக்கிறது. இன்னொருபுறம் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள ‘டூட்’ படமும் தயாராகியுள்ளது.

இவ்விரண்டில் ‘டூட்’ படம் தீபாவளிக்கு வரும் என்று முதலிலேயே சொல்லப்பட்டது. அதற்கு முன்னதாகவே ‘லைக்’ வரும் என்று கூறப்பட்டது.

ஒரு திரைப்படம் மெதுவாகத் தயாராக, இன்னொரு படம் வேகமாக வளர, தற்போது இரண்டுமே தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னதாக நடந்த ஒரு பட விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “எனது இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படம் தான் இந்த தீபாவளிக்கு வரும்’ என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பிறகுதான், இந்த அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

அதனால், தனது இரு படங்களையும் ஒரே நாளில் பந்தயத்தில் இறக்குகிற கட்டாயத்திற்கு பிஆர் ஆளாகியிருக்கிறார்.

தீபாவளியை முன்னிட்டு, இவ்விரு படங்கள் மட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்து நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருக்கும் ‘டீசல்’, சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ என ஐந்து படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு நெருக்கமாக, இப்படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும் என்ற பேச்சு நிச்சயம் எழும். அதிக தியேட்டர்களில் ஒரு படத்தை வெளியிடுவதே பெரும் லாபத்தைக் கொடுக்கும் என்ற ‘ட்ரெண்ட்’ வந்தபிறகு இப்படியொரு பிரச்சனையும் எழுந்திருக்கிறது.

பிரதிப் ரங்கநாதன் நடித்த ‘டூட்’, ‘லைக்’ இரண்டும் ஒரேநாளில் வெளியாகிறபோது அவற்றுக்கான தியேட்டர் ஒதுக்கீடு, ரசிகர்கள் வருகை, வரவேற்பு என எல்லாமே இரண்டாகப் பிரிவதற்கே சாத்தியம் அதிகம். அதனால், முடிந்தவரை ஏதேனும் ஒரு படம் பின்வாங்கும் என்றே தமிழ் திரையுலகப் பண்டிதர்கள் ’கணிப்பு’களைச் சொல்லி வருகின்றனர்.

சரி, கடந்த காலத்தில் இதுபோன்று ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றனவா? அவை இரண்டுமே வெற்றி பெற்றனவா அல்லது ஏதேனும் ஒன்றுதான் ரசிகர்களின் கவனத்தைக் குவித்ததா?

சிவாஜியின் சாதனை!

தமிழ் சினிமாவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாகவும் முதன்மை பாத்திரங்களிலும் நடித்தவர் சிவாஜி கணேசன். உடல்நலக்குறைவு, அரசியல் கட்சி தொடக்கம் போன்ற காரணங்களால் தொண்ணூறுகளில் அவர் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

போலவே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் எழுச்சிக்குப் பிறகு அவரது படங்களின் மீதான கவனிப்பும் குறைந்தது.

ஆதலால், 1950 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் சிவாஜி நடிப்பில் சுமார் 180 படங்கள் வெளியாகியிருக்கும் என்று சொல்ல முடியும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஐந்தாறு படங்களாவது வரும் என்ற உத்தரவாதத்தைத் தருகிறது அவரது ‘பிலிமோகிராஃபி’.

அதில் 17 முறை அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ‘ரிலீஸ்’ ஆகியிருக்கின்றனவாம்.

1954 ஆகஸ்ட் 26 அன்று எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’ மற்றும் ‘தூக்கு தூக்கி’ ஆகியன வெளியாகின. இப்படங்களில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

அதற்கு முன்னதாக, அதே ஆண்டு ஏப்ரல் 13 அன்று ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, ‘அந்த நாள்’ படங்கள் வெளிவந்தன.

1955-ம் ஆண்டு நவம்பர் 13 அன்று ‘கோடீஸ்வரன்’, ‘கள்வனின் காதலி’ இரண்டும் வந்தன. ‘கள்வனின் காதலி’ படமே நூறு நாட்களைக் கடந்து வெற்றி பெற்றது.

1956-ம் ஆண்டு ஜனவரி 14 அன்று வெளியான இரண்டு படங்களில் ‘நல்ல வீடு’ தோல்வியடைய, ‘நான் பெற்ற செல்வம்’ பெருவெற்றியை ஈட்டியது.

1959-ம் ஆண்டு அக்டோபர் 31 அன்று ‘பாகப்பிரிவினை’, ‘அவள் யார்’ ஆகியன வந்தன. இதில் எந்தப் படத்தின் டைட்டில் நமக்குத் தெரியும் என்று யூகித்தால், அதன் வெற்றியையும் அறியலாம்.

1960-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதியன்று ’பெற்ற மனம்’, ‘பாவை விளக்கும்’ படஞ்கள் வெளியாகின.

இதே போன்று 1961-ம் ஆண்டு ‘எல்லாம் உனக்காக’, ‘ஸ்ரீ வள்ளி’ மற்றும் ‘நவராத்திரி’, ‘முரடன் முத்து’ ஆகியன இரு வேறு தினங்களில் வெளியாகின. இப்படங்களில் நவராத்திரிக்கு ஈடாக ஓடியிருக்க வேண்டிய ‘முரடன் முத்து’ பெரிய கவனிப்பைப் பெறவில்லை. அதற்கு, இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானதே காரணம் என்ற கருத்து சிவாஜி ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

1967-ம் ஆண்டு நவம்பர் 1 அன்று ‘இரு மலர்கள்’, ‘ஊட்டி வரை உறவு’ வெளியாகின. இரண்டுமே வெற்றியைப் பெற்றன.

1970-ம் ஆண்டில் ’விளையாட்டுப் பிள்ளை’, ‘தர்த்தி’ என்ற இந்திப்படம் இரண்டு பிப்ரவரி 20 அன்று வெளியாகின. அதே ஆண்டு அக்டோபர் 29 அன்று ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ படங்கள் வந்தன.

1971-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சாவித்திரி இயக்கிய ‘பிராப்தம்’, சி.வி.ராஜேந்திரனின் ’சுமதி என் சுந்தரி’ வந்தன. இரண்டில் ‘பிராப்தம்’ பெருந்தோல்வியைச் சந்தித்து, சாவித்திரியின் திரை வாழ்வைச் சின்னாபின்னமாக்கியது.

1975-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று ‘டாக்டர் சிவா’, ‘வைர நெஞ்சம்’ ஆகியன வந்தன. ஸ்ரீதரின் ‘வைர நெஞ்சம்’ சுமார் மூன்றாண்டு கால தாமதத்திற்குப் பிறகு வந்து கவனிப்பைப் பெறாமல் போனது.

இவை போக ‘பரிட்சைக்கு நேரமாச்சு’, ‘ஊரும் உறவும்’ மற்றும் ‘இரு மேதைகள்’, ‘தாவணிக் கனவுகள்’ ஆகியன ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன.

1987-ம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு’, ‘கிருஷ்ணன் வந்தான்’ படங்கள் சிவாஜி நடிப்பில் ஒரே நாளில் வந்தன. அவ்விரண்டில் ‘ஜல்லிக்கட்டு’ பம்பர் ஹிட்டானது.

சில ஆச்சர்யங்கள்..!

எம்ஜிஆர் நடித்த படங்கள் எதுவும் ஒரே நாளில் ‘ரிலீஸ்’ ஆனதில்லை. தனது படங்களின் தொடக்கம் முதல் தியேட்டர் வெற்றி வரை ஒவ்வொன்றையும் மிகுந்த திட்டமிடலோடு அணுகியதுதான் அதற்குக் காரணம்.

அதையும் மீறி, 1966-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘அன்பே வா’, ‘நான் ஆணையிட்டால்’ படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், எம்ஜிஆரின் தலையீட்டினால் அந்த ஆண்டு பிப்ரவரி 4 அன்று ‘நான் ஆணையிட்டால்’ வெளியானதால் அந்த போட்டி தவிர்க்கப்பட்டது.

ஜெமினி கணேசன் நடிப்பில், 1959-ம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று டி.பிரகாஷ்ராவ் இயக்கிய ‘நல்ல தீர்ப்பு’ மற்றும் ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ ஆகியன வெளியாகின. இரண்டில் ஸ்ரீதர் படம் பெற்ற வரவேற்பு முன்னதற்குக் கிடைக்கவில்லை.

இதற்கு முன்னதாக, ஜெமினி நடித்த ‘ஆசை மகன்’, அதன் மலையாளப் பதிப்பான ’ஆஷா தீபம்’ இரண்டும் 1953-ம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று வெளியாகின.

1978-ம் ஆண்டு அக்டோபர் 30 அன்று தேவர் பிலிம்ஸின் ‘தாய் மீது சத்தியம்’, ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ படங்கள் வெளியாகின. இரண்டிலும் ரஜினிகாந்த் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தாயில்லாமல் நானில்லை’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இரண்டிலும் ‘மெய்ன் ஹீரோ’ ஆக கமல் நடித்திருந்தார். இரண்டுமே வெற்றியைப் பெற்றன.

இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ ஆகியன ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. 1986ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று வெளியான இவ்விரு படங்களும் ‘சூப்பர்ஹிட்’ ஆகின. இரண்டிலும் சத்யராஜ் நாயகனாக நடித்திருந்தார் என்பது இன்னொரு சிறப்பு.

இதே நாளில் விஜயகாந்த் நடித்த ‘தழுவாத கைகள்’, ‘தர்ம தேவதை’ படங்களும் வெளியாகின. சோகம் நிறைந்த ‘தழுவாத கைகள்’ படத்தில் விஜயகாந்தின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், பெரிய வெற்றியைப் பெறவில்லை.

1987-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று ‘உழவன் மகன்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ படங்கள் வந்தன. இரண்டில் ‘உழவன் மகன்’ படத்தின் பட்ஜெட்டும் வெற்றியும் பெரியதாக இருந்தன.

1989-ம் ஆண்டு அக்டோபர் 28 அன்று ‘ராஜநடை’, ‘தர்மம் வெல்லு’ படங்கள் வெளியாகின. இதில் ‘ராஜநடை’ படத்தின் கதை சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ போல இருக்கும்.

’பில்லா’ கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘திராவிடன்’, பி.வாசு இயக்கிய ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’ படங்கள் அதே நாளில் வெளியாகின. அதில் பி.வாசுவின் படமே சத்யராஜுக்கு கைகொடுத்தது.

1990-ம் ஆண்டு அர்ஜுனின் ‘தங்கைக்கு ஒரு தாலாட்டு’, ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’ படங்கள் ஒரே நாளில் ‘ரிலீஸ்’ ஆகியிருக்கின்றன.

இதேபோன்று பிரபு, ராம்கி, முரளி எனச் சில நாயகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. தமிழ் மட்டுமல்லாமல் வேறு மொழிகளில் நடித்த படங்களும் ஒரே நாளில் வெளியான பெருமையைச் சில நாயகர்கள் பெறுகின்றனர்.

 அடுத்தடுத்த நாட்களில் ஒரே நாயகனின் வெவ்வேறு படங்கள் வெளியானதும் தமிழ் திரையுலக வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன.

இவை போக நடிகைகள் நடித்து ஒரே நாளில் வெளியான படங்கள் என்று தனியாகப் பட்டியல் இடலாம். சில இயக்குனர்களின் படங்களும் அப்படி வந்திருக்கின்றன. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘சகலகலா வல்லவன்’ ஆகியன அப்படி வெளியாகியிருக்கின்றன. இரண்டுமே அவரைப் புகழின் உச்சத்தில் நிறுத்தின எனலாம்.

ஆதலால், இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது நிச்சயம் பாதகமாக அமையாது; ஒருவேளை அந்த வெற்றியின் அளவு சிறிதளவு குறையலாம். உள்ளடக்கம் சத்தோடு இருந்தால் கண்டிப்பாக இரண்டு படங்களுமே வெற்றி பெறும் என்பதையே கடந்த கால உதாரணங்கள் ரசிகர்களுக்கு எடுத்துரைக்கின்றன.

– மாபா

Comments (0)
Add Comment