ஒவ்வொருவருக்கும் எப்போது எங்கு மரணம் தன் வாசலைத் திறக்கும் என்பது தெரியாது.
சில சமயங்களில் பழுத்து உதிர்ந்த, நிறம் மாறிய சருகைப் போல மரணம்.
சில சமயங்களில் அதிரடி நிகழ்வாக.
சில சமயங்களில் தானே வலியக் கிணற்றில் பாய்கிற மாதிரியான மரணங்களும்.
எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் தற்கொலையும் இந்த ரகம் சார்ந்ததுதான். அதீதமான நுண்ணுணர்வுகளே சில சமயங்களில் சிக்கலாகி மரணத்தைத் தேடிக்கொள்ள வைத்து விடுகின்றன.
அண்ணாவின் வளர்ப்பு மகனான டாக்டர்.பரிமளம் மரணத்தை வரவழைத்துக் கொண்ட வினோதம்.
நெரிசலான போக்குவரத்து நெரிசலில் சடாரென்று வாகனத்தைத் தானே ப்ரேக் போட்டு நிறுத்தி விடுவதைப்போல மூச்சை அறுத்திருக்கிறார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றுக்காக அவரைச் சந்திக்கச் சென்றபோது அண்ணாவைப் பற்றிப் பல சம்பவங்களை மென்குரலில் விவரித்துக் கொண்டிருந்தார்.
அண்ணா இறந்தபோது அவருடைய பேங்க் பேலன்ஸ் தொகை சில நூறு ரூபாய்கள்தான் என்பதைச் சொல்லிவிட்டு தான் வளர்த்த குழந்தைகளுக்கு அவர் தந்தது தரமான கல்வியைதான் என்றார் பெருமிதத்துடன்.
எதனால் நம் மனது சிலருடன் ஒத்துப்போகிறது? எதனால் சிலருடன் விலகி நிற்கிறது என்பதற்கு உளவியல் காரணங்களாகப் பலவற்றைச் சொல்லலாம்.
சிலருடைய தோற்றம், அவர் பேச்சில் காட்டும் தளர்ச்சியான நிலை, நெகிழ்வு, பேசும் கணத்தில் உண்மையின் தெறிப்பிக்கிறது என்று மனதில் படரும் உணர்வு – இவற்றுடன் இன்னொரு காரணமும் உண்டு.
நம் மனதில் தோன்றும் விதவிதமான உணர்வுகளுக்கு இன்னொருவர் எழுத்து வடிவம் கொடுத்ததைப் போன்று இருந்தால் – அந்த எழுத்துக்காரருடன் மனது உறவு கொண்டாடி வருகிறது.
அதை வாசிக்கும்போது மனசின் குரலும் சேர்ந்து இழையாடுவதைக் கேட்க முடியும்.
திரைப்படத்தில் வரும் சில வசன வரிகளுடனோ, சில பாடல் வரிகளுடனோ நீங்கள் ஒன்றிணையவும் முடியும். காதில் விழும் பேச்சின் ஒரு துண்டு மனதில் நகராமல் நிற்க முடியும்.
அதுபோல வாசிக்கிற எழுத்தும் – பார்வை அந்தப் பக்கத்தை விட்டு நகர்ந்த பிறகும் மனதில் அலையவிட முடியும்.
வணிகப் பத்திரிகை ஒன்றிலிருந்தோ, சிற்றிதழ்களிலிருந்தோ கூட அந்த வரிகள் மனவெளிக்கு நகர முடியும்.
சில பத்திரிகைகளில் வரும் பத்திகளில் இம்மாதிரியான ஒன்றிணைப்பு சாத்தியம். வெளிப்படையான மனதின் அந்தரங்க சுத்தியுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து எதிர்வினைகளை வரவேற்று அந்த இடத்தை பரிமாற்றத்திற்கான இடமாக மாற்ற முடியும்.
இதுவரை – மூன்றாண்டுகளாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட – இந்தப் பத்தியை – உரையாடல் வெளியை இழக்கும்போது – சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.
– மணா
– ஏப்ரல் 2008 ‘புதியபார்வை’ இதழில் எழுத வந்த தொடரை முடிக்கும் போது…
#ஸ்டெல்லாபுரூஸ் #அண்ணா #டாக்டர்பரிமளம் #stellaprus #anna #drparimalam