சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள புதிய வரவான விஜய், பெருங்கூட்டத்தை வைத்துள்ளதால், அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த அவர் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
இரு மாநாடுகளிலும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கலக்கம் அடைந்திருப்பது நிஜம். அவரது ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது
இந்த நிலையில், அடுத்த கட்டமாக விஜய் மக்களை நேரில் சந்திக்க முடிவு செய்தார். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் விஜய், தமிழகம் தழுவிய தனது சுற்றுப்பயணத்தை திருச்சியில் இன்று தொடங்கினார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9.45 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நவீன பஸ், விமான நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது.
அதில் விஜய் ஏறி அமர்ந்து முதல் பிரச்சார இடமான மரக்கடைக்கு புறப்பட்டார். தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை விமான நிலையம் முதலே தொடரத் தொடங்கினர்.
காவல்துறை நிபந்தனைகளை எல்லாம் மீறி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் விஜய் வாகனத்தைப் பின் தொடர்ந்தனர்.
அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்றது. விமான நிலையத்தில் இருந்து பிரச்சார பகுதியான மரக்கடை 10 கி.மீ.தூரம்தான்.
ஆனால், இந்த தூரத்தை விஜயின் சொகுசு பஸ் கடக்க 3 மணி நேரத்துக்கும் மேலானது. விஜய் ரோடு ஷோ நடத்த போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
ஆனால், திருச்சியில் விஜய் இன்று விமான நிலையம் முதல் மரக்கடை வரை 10 கி.மீ. தூரத்துக்கு – அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், ரோடு ஷோ நடத்தியுள்ளார்.
வழி நெடுகிலும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மலர்கள் தூவியும், டிவிகே வாழ்க என முழக்கம் எழுப்பியும் வரவேற்றனர்.
அவர் பிரச்சாரம் செய்ய காலை 10.35 மணிக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் மூன்று நேரம் தாமதமாகவே பொதுக்கூட்ட பகுதிக்கு விஜயால் வர முடிந்தது.
முன் கூட்டியே திட்டமிடாத விஜய்யின் ரோடு ஷோவால் திருச்சி ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
– பாப்பாங்குளம் பாரதி.