எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெரும் பேறு!

எழுத்தளார் ராஜேஷ்குமார்
ஆண்டு – 1983.
 
அது ஒரு மே மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை.
 
மாலை நேரம்.
 
அந்த காலகட்டத்தில் நான் நான்கு தொடர்கதைகள், ஆறு நாவல்கள் மட்டுமே எழுதி இருந்தேன்.
 
அதில் ஐந்து படைப்புகளை அச்சுப் புத்தகங்களாக வெளியிட விரும்பிய பாரதி பதிப்பகம் அதற்காக ஒரு விழாவை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்வாகத் ஹோட்டலில் நடத்தியது.
 
அந்த விழாவில், அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எழுத்துலக ஜாம்பவான்களாக விளங்கும் சாவி, சாண்டில்யன், அமுதசுரபி விக்ரமன், லட்சுமி கலந்து கொண்டார்கள்.
 
சாண்டில்யன் புத்தகங்களை வெளியிட, சாவி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் பேசிய நான்கு பேர்களின் வாழ்த்து மழையில் ஒரு மணி நேரம் நனைந்தேன்.
 
பி.கு. – விழாவில் சாவி சார் பேசும்போது, “இன்றைக்கு எனக்கு பக்கத்தில் ஒன்றுமே தெரியாத பூனை போல் உட்கார்ந்திருக்கும் ராஜேஷ்குமார் இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்து ஒரு புலியாக மாறுவது நிச்சயம்.
 
அந்த சமயத்தில் பத்திரிகைகள் அவரிடம் கதை கேட்டால் “நேரமில்லை…. பார்க்கலாம் என்று சொல்லக் கூடாது. முக்கியமாக எனக்கு சொல்லவே கூடாது” என்றார்.
 
நான் உடனே எழுந்து அவருடைய கையில் என் உள்ளங்கையை வைத்து “இது உங்கள் கை” என்றேன்.
 
அரங்கம் கையொலியிலும், சிரிப்பொலியிலும் அதிர்ந்தது.

 

குறிப்பு: ராஜேஷ்குமாரின் வலையொலிப் பேச்சிலிருந்து… 

Comments (0)
Add Comment