மணிவிழா காணும் ‘செம்மீன்’ – சில நினைவுகள்!

மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்த ‘செம்மீன்’ படம் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1965-ம் ஆண்டு ஓணம் பண்டிகைக்கு இத்திரைப்படம் வெளியானது. மணிவிழா கொண்டாடும் ’செம்மீன்’ படத்தைப் பற்றிய சில நினைவுகள்.

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய லாட்ஜில் தங்கியிருந்து ‘செம்மீன்’ கதையை தகழி எழுதியுள்ளார். ஒரு வாரத்தில் அவர் இந்தக் கதையை எழுதி முடித்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருதை வென்ற முதல் மலையாள நாவல் என்ற பெருமை ‘செம்மீன்’ நாவலுக்கு உள்ளது. 1957-ம் ஆண்டில் இந்நாவல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. இந்த நாவல் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநரான ராமு கரியாத், 1962-ம் ஆண்டில் இதைப் படமாக எடுக்க விரும்பினார். அதற்கு கேரள ஃபைனான்ஷியல் கார்ப்பரேஷனிடம் நிதி கேட்டார்.

படத் தயாரிப்புக்கு தேவையான நிதியில் 75 சதவீத தொகையையே அவர் கேட்டபோதும் அவர்கள் அத்தொகையை வழங்கவில்லை.

இதைத்தொடர்ந்து ராமு கரியாத்தின் நண்பர்கள் பாபு சேட் என்ற தயாரிப்பாளரிடம் அவரை அழைத்துச் சென்றனர். அவர் இதை படமாக எடுக்க ஒப்புக்கொண்டார்.

தகழியின் கதையில் இடம்பெற்றுள்ள புறக்காடு என்ற அதே கேரள கடற்கரை பகுதியில்தான் இப்படத்தை எடுக்க ராமு கரியாத் முதலில் விரும்பியுள்ளார்.

ஆனால், அங்குள்ள சில மீனவர்கள், தங்கள் படகுகளை படப்பிடிப்புக்கு கொடுக்க அதிக வாடகை கேட்டதால், அவர் நாட்டிகா என்ற கடற்கரை கிராமத்தில் படப்பிடிப்பை நடத்தினார்.

‘செம்மீன்’ படத்தில் நடிக்க நடிகர் சத்யனுக்கு 12,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

மதுவுக்கு 2,000 ரூபாய்தான் சம்பளம். 8 லட்ச ரூபாய்க்குள் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் முதல் ரிலீஸில் 40 லட்ச ரூபாயை வசூலித்தது.

இதன் தயாரிப்பாளர் பாபு, அந்த பணத்தை வைத்து எர்ணாகுளம் நகரத்தில் கவிதா என்ற தியேட்டரை கட்டினார்.

‘செம்மீன்’ படத்தை தங்களின் வாழ்க்கை முறையையும், பேச்சு மொழியையும் கிண்டலடிக்கும் வகையில் எடுத்திருப்பதாக கூறி கேரளாவில் உள்ள மீனவர் சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லும் மீனவரின் மனைவி நடத்தை தவறினால் அந்த மீனவனை கடலன்னை விழுங்கிவிடுவாள் என்ற பழமைவாத கருத்தை இப்படம் தூக்கிப் பிடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.  

இதனால் அப்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

சென்சாரிலும் சில காட்சிகள் வெட்டப்பட்ட பிறகே இப்படத்தை திரையிட சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

‘செம்மீன்’ படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. இப்படம் சலீல் சவுத்ரி இசையமைத்த முதல் தென்னிந்திய படம். அதற்கு முன் அவர் வங்கப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

செம்மீனில் அவர் இசையில் வெளியான, ‘மானச மைனே வரு’, கடலினக்கர போணோரே’ ‘பெண்ணாளே… பெண்ணாளே…’ உள்ளிட்ட பல பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

இதில், ‘மானச மைனே வரு’ பாடலில் சரியான முறையில் மலையாள மொழியை உச்சரிக்க அதைப் பாடிய மன்னா டே மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

பலமுறை ஒத்திகை செய்த பிறகே இந்த பாடலை அவர் பாடியுள்ளார். அப்போதும் இப்பாடல் பல டேக்குகளை வாங்கியுள்ளது.

பல நாட்கள் இந்த பாடலின் பதிவு நடந்ததால் வாடகை அதிகமாகி உள்ளது.

கடைசியில் சலீல் சவுத்ரிக்கு மன்னா டேயின் உச்சரிப்பு திருப்தி தராத நிலையில் பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள, ‘புத்தன் வலக்காரே’ பாடலை யேசுதாஸ் பாடியுள்ளார். இதில் ‘மானச மைனே வரு’ பாடலின் ட்யூன் பின்னர் 1979-ம் ஆண்டு ஸ்ரீகண்டர் வில் என்ற வங்கப் படத்தில் பயன்படுத்தப்பட்டது.

Comments (0)
Add Comment