பெண் அடிமைத்தனமும் பெண் கல்வியின் முக்கியத்துவமும்!

பெண்ணடிமைத்தனம் என்று குறிக்கப்படுவது வரலாற்றின் பெரும் பகுதியில் பெண்கள் சம உரிமை, வாய்ப்புக்கள் பெறாமல் தாழ்வுநிலையில் வாழ்ந்ததையும், அவர்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளையும், இதை ஏதுவாக்கிய சமய, சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பையும் குறிக்கிறது.

சில சமூகங்களைத் தவிர பெரும்பான்மைச் சமூகங்கள் நெடுங்காலமாக ஆணாதிக்க சமூகங்களாகவே இருந்து வந்துள்ளன. அனேக சமூகங்களில் பெண்களின் மனித, உளவியல், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பிற உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களுக்கு இணையாக அமையவில்லை.

பல சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு பணி செய்யும் அல்லது ஆண்களின் கட்டுப்பாடுகளுக்குரிய அல்லது ஆண்களை சார்ந்து இருக்கும் மனிதர்களாகவே அடிமைத்தனமாக பயன்படுத்தப்பட்டார்கள்.

சுதந்திரம் அற்றவர்களாகவும், ஆணாதிக்கத்துக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருக்கும் நிலையை பெண்ணடிமைத்தனம் எனலாம்.

பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி உரிமை, வேலை உரிமை, பேச்சுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் இருக்கவில்லை. இதனால் பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டை ஏறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமையாக்கல், கோயிலுக்கு அடிமையாக்கல் என பல வழிமுறைகளில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. தற்காலத்தில் பெண்களின் நீண்ட போராட்டத்தின் பின்பு இந்த நிலை பெரிதும் மாறிவருகிறது.

பெண்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்ற வழக்கம் இருந்ததாக ‘முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை’ என்று தொல்காப்பியம் குறிக்கிறது.

உலகின் மொத்த குடித்தொகையில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருந்தபோதிலும், ஆரம்பகாலச் சமூகங்களில் கல்வி அறிவற்ற பெண்களின் பங்கு கணிசமான அளவு இருந்தது.

பெண்கள் தமது குடும்ப நலனுக்காகவும் குடும்ப அங்கத்தவர்களின் திருப்திக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த நிலையை காண முடிந்தது. சமூக வாழ்வின் நம்பிக்கைகளும், இறுக்கமான மரபு வழி பழக்க வழக்கங்களும் பெண்களை இத்தகைய நிலைக்கு ஆளாக்கியது. பெண்களை தெய்வமாக போற்றிய தமிழ் மரபு தான் பெண்களுக்கு ஓர் எல்லைக்கோட்டையும் ஏற்படுத்தியது.

பெண்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி புனிதத் தன்மை வாய்ந்த இயற்கையின் கூறுகளை ஒப்புமையாக்கியதன் விளைவுதான் பெண்களின் வளர்ச்சிக்கு ஒரு வரையறையை ஏற்படுத்த காரணமாக இருந்தது.

இனப்பெருக்கத்தின் செயற்பாட்டுக்கு ஆணும் பெண்ணும் சம பங்குதாரர்களாக விளங்கிய போதும் தாய்மைக்கு அணிகலன் குழந்தைப்பேறு என்பதை பெண்களுக்கு பொருத்திப் பார்த்த சமூகம் பெண்ணை மனித வள விருத்தியோடு தொடர்புபடுத்தவில்லை. குழந்தைகளை பெறுதல், வளர்த்தல், குடும்பத்தில் உள்ள முதியோரை பேணிப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு வகைப்பட்ட பொறுப்புகள் பெண்களுக்கு இருந்தமையால் பெண்களின் குடும்ப, சமூக, பொருளாதார தொடர்புகள் ஆண்களை விட வேறுபட்டதாக விளங்கின.

பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ள போதிலும் அவர்களது திறமைகள் வெளியில் தெரியாத வகையில் பல விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக மதம் என்ற போர்வையில் பெண்கள் நசுக்கப்பட்டார்கள். மத ரீதியான பல நம்பிக்கைகள் பெண்களை வீட்டில் பூட்டி வைத்தன. இதனால் பெண்களின் முன்னேற்றம் பல வழிகளிலும் தடைப்பட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இதனால் பெண் கல்வி பின்னடைவதற்கு மத நம்பிக்கைகளும் பெரும் காரணமாக அமைந்தன எனலாம். பெண்களை பாரபட்சமாக நடத்துவதற்கு பல சட்டங்கள் இருந்தபோதிலும், அச்சட்டங்கள் தொடர்பாக பெண்களால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கெங்கு, என்னென்ன சட்டங்கள் உள்ளன என்பதைக் கூட அறியாமல் பெண்கள் இருந்தார்கள்.

மனித வாழ்க்கை ஆண், பெண் என்ற இரு வேறு பால்நிலை சார்ந்த உறவுகளின் இணைப்பிலேயே இயக்கம் பெற்று வந்துள்ளது. இதில் ஆண் என்பவன் முதன்மைப்படுத்தப்பட்டதால் பெண் ஆண்களாலும் சமூகத்தாலும் அடக்கப்பட்டாள்.

இயற்கை சார்ந்தும் வாழ்ந்த பெண், ஆண் சமூகத்தில் வளர்ச்சி பெற்ற உழைப்பும், உழைப்பு பிரிவினையும், இதனால் வளர்ச்சி பெற்ற அதிகார அதிகரிப்புகளும் ஆணுக்கு சாதகமாகவே மாறியது.

அக்காலத்தில் ஆண் உடல் பலத்தாலும் அதிகாரத்தாலும் தனித்து சொத்துக்கு உரிமையாக்கப்பட்டான். சமூக கூட்டு வாழ்வில் வாழ்ந்த பெண், சொத்துரிமை மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானாள்.

தாய்வழிச் சமூக அமைப்பில் பெண் முதன்மையான இடத்தை பெற்றிருந்தாள். பின்வந்த நிலவுடமை சமூகத்தில் சொத்துரிமையோடு சேர்த்து பெண்ணும் அடிமையாக்கப்பட்டாள்.

ஆணுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டவள், அவனது குறிப்பறிந்து நடக்க பழகிக்கொள்வதோடு பாலியல் தேவை, சந்ததி விருத்தி செய்முறை, வீட்டுப் பொறுப்புக்கள் என பெண்ணுக்குரிய கடமைகள் எல்லைப்படுத்தப்பட்டன. அதற்குப் பொருந்தும் வகையில்,

“அச்சமும், நாணமும், மடமும், பயிர்ப்பும் பெண்ணுக்குரிய நான்கு குணங்களாக, படைகளாகவும் பெருமையும், அறிவும் ஆடவர்க்குரியது” என தொல்காப்பியம் வகுத்தது.

அச்சம் என்றால் பயம், தயக்கம். மடம் என்பது அறியாமை. நாணம் என்றால் வெட்கப்படுவது. பயிர்ப்பு என்றால் ஆண்கள் தொடும்போது உண்டாகும் உணர்வு. இவை பெண்ணின் நாற்குணங்களாக கூறப்பட்டது. காரணம், பாலியல் தேவைக்கு ஆணின் விருப்பத்துக்கு இசைவான பெண்ணாக இருப்பதற்கு இத்தகைய குணங்கள் தேவைப்பட்டன.

அச்சம் என்ற முதல் வார்த்தையிலேயே பெண் அடிமையாக்கப்பட்டுவிட்டாள். ஆண்சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவிக்கொள்ளலாம் என்றார்கள். மறுபுறத்தில் கல் என்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்றார்கள்.

ஆண் சுதந்திரமானவன்; பெண் சுதந்திரம் அற்றவள். ஆண் எதை செய்தாலும் தவறில்லை. ஆனால், பெண் ஆணுக்கு எதிராக, நான்கு குணங்களுக்கு மாறாக எதை செய்தாலும் பிழை என்றார்கள். இவை அனைத்தும் பெண்ணின் உடலியல் சார்ந்த நிலையை இலக்கு வைத்தே கூறப்பட்டது. பெண் பிறந்ததிலிருந்தே சுமையாகிறாள். பெண்ணை பெற்றவர்கள் அவளை ஒருவனின் கையில் ஒப்படைக்கும் வரை பெரிய பொறுப்பை தலையில் கட்டி வைத்திருப்பது போல் அவதிப்பட்டனர். இவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது அவளுடைய கருவளம்.

ஆண், பெண் இணைந்து தவறு செய்தாலும் ஆண் தப்பிவிடுவான். பெண்ணின் கருத்தரிக்கும் இயல்பு அவள் தவறு செய்தவள் என வெளியுலகுக்கு காட்டிவிடும். இதனால் பெண்ணின் பெற்றோர், சகோதரர்கள், நெருங்கிய உறவுகள் என அனைவரும் ஒருதலைப்பட்சமாக குற்றம், அவமானம், பழிச்சொல் அனைத்தையும் அனுபவிப்பார்கள். மொத்தத்தில் பெண்ணின் உடலியல் சார் நிலை அவளை தங்கி வாழ்பவர்களாக பார்த்து வைத்தது.

இவ்வாறான காரணங்களால் பெண் தன்னை சமூகத்துக்கு ஏற்ப இசைவாக்கிக்கொண்டாள். தற்போதைய காலத்தில் பெண் அடிமைத்தனம் என்பது சற்று குறைந்து காணப்பட்டாலும், சில சமூகத்தின் அடிப்படையில் சாதி, மதம், இனம் என்பவற்றின் ரீதியிலாக பெண் அடிமைத்தனம் இன்றும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த பெண் அடிமைத்தனத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மனிதர் என்ற ரீதியில் நாமும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பெண் அடிமைத்தனத்தை இல்லாதொழித்து பெண்களுக்கான முழு சுதந்திரத்தையும் கொடுத்து ஆணுக்கு நிகரானவள் பெண் என்ற சமூக உரிமையை வழங்கி பெண்களை போற்ற வேண்டும்.

முன்னைய காலத்திலேயே பெண் அடிமைத்தனம் அதிகளவாக காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் பெண்கள் சுதந்திரமாக வெளியுலகுக்கு வந்து சகல துறைகளிலும் தன் சாதனைகளை சாதிப்பவர்களாகவும் வெளிக்காட்டக்கூடியவர்களாகவும் சுதந்திரத்துடன் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களின் இந்த முன்னேற்றத்துக்கு கல்வியின் முக்கியத்துவம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

பெண் கல்வியின் முக்கியத்துவம்

ஒரு சமூகத்தில் ஆண்கள் கல்வி கற்பதற்கு எத்தகைய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவோ அவற்றுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி கற்பதற்குரிய அனைத்து வாய்ப்புக்களும் எதுவித பாரபட்சங்களுமின்றி வழங்கப்பட வேண்டும். இதனை பெண்கள் எதுவித தடையுமின்றி பெறும் நிலையே கல்வியின் சமத்துவம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ஒரு சமூக அமைப்பிலே பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கை வசதிகளையும் சமூக அந்தஸ்தையும் உடைய பல பெண்கள் வாழ்கின்றார்கள். அதேவேளை தமது அன்றாட வாழ்வாதாரத்துக்காக பாடுபடும் பெண்களும் சமூகத்தில் வாழ்கின்றார்கள்.

இவர்களில் சிலர் எது விதமான கல்வியறிவும் அற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்கள் கல்வி அறிவு பெறும்போது குடும்பத்தின் சுகாதாரம், பாதுகாப்பு போன்றவை ஓரளவு உறுதிப்படுத்தப்படுகின்றன.

கல்வி அறிவு பெற்ற பெண்களின் சமூகப் பங்களிப்பு சமூக வளர்ச்சிக்கு ஒரு காரணியாகவும் அமைகிறது. கல்வி அறிவு பெற்ற பெண் மனித வளத்தின் நேரிடையான பங்களிப்பு குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நன்மை விளைவிக்கும்.

பெண் மனித வளத்தை விருத்தி செய்ய வேண்டுமானால், பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். அண்மை காலங்களில் பெண்கள் பல துறைகளிலும் சம உரிமையுடன் கல்வி கற்று வருகின்றனர். இதனை சமூகம், அறிவு ரீதியாக உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளது.

இன்றைய சமூகத்தின் அதி தீவிரமான அறிவுத்தேடல், பொருள் நோக்கிய சிந்தனை போன்றவற்றின் காரணமாக ஆண், பெண், சிறுவர்கள் என்ற பேதமின்றி யாவரும் கற்பதற்கும் உழைப்பதற்கும் உரியவர்கள் என்ற சிந்தனை மேலோங்கி வருகின்றது.

குடும்பத்தின் வளர்ச்சியிலும் கல்வியிலும் அதிக கவனம் கொண்டவர்களாக கூடிய பொறுப்புணர்ச்சியுடன் பெண்கள் செயற்படுகின்றனர். தொழில் புரியும் பெண்கள் தொடர்பான தவறான எண்ணங்கள், சிந்தனைகள் மாற்றப்பட்டு வருகின்றபோதிலும், சில சமூகங்களில் இத்தகைய முன்னேற்றகரமான சிந்தனைகள் சரியாக அங்கீகரிக்கப்பட முடியாத நிலையும் உண்டு.

அந்த வகையில், பெண் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் அதன் மூலம் ஏற்படும் சமூக, பொருளாதார, வளர்ச்சி போன்றவை தொடர்பான சமூக ஆதரவை திரட்டும் நோக்குடன் கல்வி நிறுவனங்களும் அரசாங்கங்களும் செயற்பட வேண்டும். கிராமிய மக்களிடையே பெண் பிள்ளைகளின் கல்வி நிலை தொடர்பான பெற்றோர் அக்கறையின்மையை நீக்கும்போது பெண்களின் கல்வி நிலை உயர்வடையும்.

பெண்களுக்கும் கல்விக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்காக பெண் கல்வியை துரிதப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயற்பட வேண்டும். பெண்களை கல்வியில் மட்டுமின்றி பல துறைகளிலும் அடிமைப்படுத்தாமல் அவர்களுக்கான சம உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றை வழங்கி அவர்களையும் மதித்து போற்ற வேண்டும்.

– சொக்கலிங்கம் லோஜினி

நன்றி வீரகேசரி

#சுதந்திரம் #ஆணாதிக்கம் #அடிமை #பெண்ணடிமைத்தனம் #பெண்சிசுக்கொலை #சிறுவர்திருமணம் #சீதனம் #உடன்கட்டைஏறுதல் #மறுமணமறுப்பு #மணவிலக்குமறுப்பு #உடமைமறுப்பு #கொத்தடிமை
#Freedom #Patriarchy #Slavery #FemaleSubjugation #FemaleInfanticide #ChildMarriage #Dowry #ForcedConsummation #OppositionToRemarriage #OppositionToDivorce #DenialOfPropertyRights #BondedLabor

Comments (0)
Add Comment