முகத்தில் உள்ள குழிகளுக்குத் தீர்வாகும் ஃபேஸ் பேக்!

அழகான முகத்தில் குழிகள் ஏற்பட மருத்துவ ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

முகப்பரு, ஹார்மோன் மாற்றம், மரபணு காரணங்கள், வாழ்வியல் முறை மற்றும் அதிகப்படியாக சுரக்கும் எண்ணெய்.

இதனால் இறந்த செல்கள் தோலின் அடியில் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாமல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

முகத்தில் சுரக்கக் கூடிய செபம் (Sebum) என்னும் எண்ணெய் அதிகமாகச் சுரக்கும் போது இறந்த செல்களால் துளைகள் அடைக்கப்படுகிறது.

இதனால் முகப்பருக்கள் ஏற்படுவதுடன் இறந்த செல் தோலின் அடியில் தங்கி முகத்தில் சிறிய மற்றும் பெரிய குழிகளை உண்டாக்கும்.

தேவையில்லாத பருக்கள், மாசுக்களால் ஏற்படகூடிய சிறிய, ஆழமான குழிகள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். இதனால் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை சருமப் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

முகத்தில் அழகான பகுதி என்றால் மூக்கு மற்றும் கன்னங்கள்.

ஆனால் இந்த எண்ணெய்ப் பசையால் பாதிக்கக் கூடிய பகுதி என்றால் இவை இரண்டும் தான்.

இதை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் விட்டு விட்டால் குழிகள் ஆழமாகி முகத்தின் பொலிவை இழக்கச் செய்துவிடும்.

இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றப் பொலிவு ஏற்படும்.

இதற்கு தீர்வாக வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்கள் உதவுகின்றன. அதை எப்படி பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

1. முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் :

முல்தானி மெட்டி – 2 டேபிள் ஸ்பூன்

ரோஸ் வாட்டர் – தே.அ

இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து பின் முகத்தை சுத்தம் செய்து பேக் போடவும். அப்படியே 15 நிமிடம் ஊற வைத்து அதன் பின் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த பேக் வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் சுரக்கக் கூடிய ஆயில் கட்டுக்குள் வரும்.

2. தக்காளி சாறு பேக் :

பழுத்த தக்காளி – 1

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் அரைத்த தக்காளி கூழ், எலுமிச்சை சாறு, தேன் இந்த மூன்றையும் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

வாரத்திற்கு மூன்று முறை இந்த பேக் போட்டு வந்தால் சோர்வு நீங்கி, குழிகள் மெதுமெதுவாக மறைந்து முகப் பொலிவு ஏற்படும்.

3. கடலை மாவு பேக் :

கடலை மாவு – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் –  ½ ஸ்பூன்

தயிர் – 1 ½ ஸ்பூன்

இந்த மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 முதல் 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இவை முகத்தில் தங்கியிருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குகிறது.

4. கிரீன் டீ ஐஸ் பேக் :

க்ரீன் டீ தயார் செய்த பின் அதனைக் குளிர வைத்து, அதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி வைக்கவும். ஐஸ் கட்டியாக மாறியதும் அதை எடுத்து முகத்தில் மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.

இதை தினம் ஒரு வேளை செய்து வந்தால், குழிகள் மெதுவாக மறையும். மேலும் முகம் புத்துணர்ச்சியுடனும் பொலிவாகவும் இருக்கும்.

தவிர்க்க வேண்டியவை: அழகான முகத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் அவசியம் தேவை.

எப்போதும் பொலிவாக இருக்க விரும்பினால் வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.

கடைகளில் விற்கப்படும் துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான காய்கறிகள், பழச் சாறு தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வெயில் காலங்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

8 மணி நேரத் தூக்கம், தேவையான அளவு தண்ணீர், அதிக நேரம் போன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாழ்வியல் முறை மாற்றத்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சிதைந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment