தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி!

கம்பீரமான தன் உடலையும் உள்ளத்தையும் குடியாலும் கஞ்சாப் புகையாலும் மெள்ள மெள்ள தானே சிதைத்துக்கொண்டு, வருங்கால எழுத்தாளர்களுக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக தன் வாழ்வை அமைத்துக்கொண்ட ஜி.நாகராஜன், தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி.

அவர் எழுதியது கொஞ்சமே என்றாலும், அந்த எழுத்துகளில் தன் மேதமையையும் கலைநுட்பத்தையும் மொழி வளமையையும் அற்புதமாக வெளிப்படுத்தியவர்.

யாரும் அதுவரை எழுதியிராத பாலியல் தொழிலாளிகள், சமூகத்தின் பார்வையில் குற்றச்செயல் புரிந்து பிழைப்பவர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களின் அக உலகைத் தமிழ்க் கதைப்பரப்பில் விரித்த ஒப்பற்றப் படைப்பாளி.

1929-ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி மதுரையில் தன் பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாகப் பிறந்த இவர், தன் இளவயதிலேயே (ஒன்பதாவது பிரசவத்தின்போது) தாயை இழந்தார்.

தந்தை கணேச அய்யர், பழநியில் வக்கீல் தொழில் பார்த்துவந்தார். மதுரைக் கல்லூரியில் படித்தபோது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சர்.சி.வி.ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார்.

ஆங்கிலத்திலும் கணிதத்திலும் அசாத்தியமான புலமை பெற்றிருந்த இவர், அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளிலும் தனிப் பயிற்சி நிறுவனங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

அவருடைய மாணவராக இளம் பிராயத்திலிருந்து ஜி.நாகராஜனுடன் நட்பாயிருந்து, இறக்கும் நாளிலும் உடன் இருந்த எழுத்தாளர் சி.மோகன், அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை (சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை நூலில்) தீட்டியுள்ளார்.

சி.மோகனின் புத்தகமே ஆழமான ஒரு கலைப்படைப்பாகத் திகழ்கிறது.

அதில் ஜி.நாகராஜனைப் பற்றி அவர் தீட்டும் ஒரு தீற்றல்…

“ஜி.நாகராஜன் முகத்தோற்றத்தில்கூட அவர் தன் சாதி அடையாளத்தைக் களைந்துவிட்டிருந்தது.

பேச்சு, உடை, சிந்தனை, உணர்வு, நடத்தை, செயல், உணவு, வாழ்க்கைமுறை என எல்லாவற்றிலும் பிரக்ஞைபூர்வமாக சாதியத் தன்மைகளைக் கடந்துவிடப் பிரயத்தனப்படுவதும், அவ்வாறாகக் கடந்துவிட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் சாத்தியம்தான்.

ஆனால், அவர்களுடைய தேர்வாக இல்லாத, பிறப்பால் அமைந்த முகத்தோற்றத்தில் அதை களைந்துவிடுவது அபூர்வமென்றே நினைக்கிறேன்.

அப்படியான ஓர் அபூர்வமாகத் தன்னை ஆக்கிக்கொண்டவர் ஜி.என்.

ஸ்டாலின் மீசையும் ராணுவ முடிவெட்டும் வஸ்தாதுகளின் உடற்கட்டும் மட்டுமல்ல, முகத்தில் உருவேற்றிக்கொண்ட முரட்டுத்தனமும் சேர்ந்து சாதியத்தின் எந்தவிதச் சாயலும் இல்லாமல், அதை அறவே துடைத்துவிட்ட மனிதர் அவர்.”

“1952-56 காலகட்டத்தில் அவர் திருநெல்வேலியில் பேராசிரியர் நா.வானமாமலை நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.நல்லசிவன், ப.மாணிக்கம், நல்லகண்ணு, நெல்லை எஸ்.வேலாயுதம் போன்றோருடனும் ரகுநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, டி.செல்வராஜ் போன்ற அன்றைய இடதுசாரி எழுத்தாளர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு ஏழை எளிய உழைப்பாளி மக்களை அணி திரட்டி பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார்.

திருநெல்வேலி நகரத்தின் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இளமையின் மிடுக்குடன் ஜி.நாகராஜன் செயல்பட்ட காலம் இது. எழுத்தார்வம் வேர் பிடித்ததும் இங்குதான்” என சி.மோகன் குறிப்பிடுகிறார்.

அதே காலத்தில் நெல்லையின் பாலியல் தொழிலாளிகளுடனான உறவும் தொடங்கியிருக்கிறது. ‘குறத்தி முடுக்கு’ என்கிற புகழ்பெற்ற அவரது குறுநாவலுக்கான களம் அங்குதான் உருவாகிறது.

குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும் என, சமூகம் ஒழுக்கக்கேடு எனச் சொல்லும் எல்லா பழக்கங்களும் அவரிடம் வந்து சேருகின்றன.

கட்சிக்குள் கேள்விகள் எழுகின்றன. இதை அடுத்து அவர் கட்சிப்பேரவையைக் கூட்டி தன்னை பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரி தன்னுடைய ராஜினாமாவை முன்வைக்கிறார். ஆனால், கட்சி அவருடைய ராஜினாமாவை ஏற்க மறுக்கிறது.

தன்னுடைய வாழ்க்கை முறையைக் கட்சிக்கு பங்கம் வராதபடி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே கட்சியின் வேண்டுகோள் என, பேரவை கேட்டுக்கொள்கிறது.

வாழ்க்கை அவரிடம் வைத்த அந்தக் கடைசிக் கோரிக்கையை நிராகரித்து, தன் உள்மனம் செலுத்தும் திசைகளில் பயணிக்கத் தொடங்குகிறார். நெல்லை வாழ்க்கையைவிட்டு மீண்டும் மதுரைக்கே வருகிறார்.

கட்சியைவிட்டு வெளியேறினாலும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை மார்க்ஸியப் பிடிப்புடன் வாழ்ந்தார். அவருடைய முதல் கதையான ‘அணுயுகம்’ 8-06-1957 தேதியுடைய ‘ஜனசக்தி’ வார மலரில் வெளியானது.

அவருடைய ஆரம்பகாலப் படைப்புகள் எல்லாமே கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ‘ஜனசக்தி’, ‘சாந்தி’, ‘சரஸ்வதி’ போன்ற இதழ்களில்தான் வெளியாகின. பிறகு சிலகாலம் அரவிந்தர் மீதும் காந்தி மீதும்கூட நம்பிக்கைகொண்டிருந்தார்.

பிறகு, தத்துவங்களின் மீது நம்பிக்கை இழந்தவரானார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசிக்குமாறு அறிவுறுத்திய சுந்தர ராமசாமிக்கு, 1968-ம் ஆண்டில் அவர் எழுதிய கடிதத்தில் ‘ஜே.கே-யைப் படிக்கச் சொல்லி எழுதியிருந்தீர்கள்.

ஜே.கே-யின் புத்தகங்கள் பல, இங்கு நூல் நிலையத்தில் உள்ளன. இருந்தாலும் Philosophy-யிடத்து எனக்கிருக்கும் அவநம்பிக்கை காரணமாக நான் இதுவரை எந்த பிலாசஃபி புத்தகத்தையும் படித்ததில்லை.

அரவிந்தர், ஜே.கே போன்ற இந்துமத Philosophers வேறு வகையானவர் என்று நீங்கள் கூறலாம். உண்மைதான். Intellect-க்கு survival value-தான் உண்டு.

அதைக்கொண்டு நுண்பொருளான உண்மையை (Reality) அறிய முடியாது என்ற Hindu Philosophers-ன் கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அந்த உண்மையை அறிய அவர்கள் வலியுறுத்தும் transcendental experience ஒன்று இருக்கலாம் என்று நான் ஏற்றுக்கொண்டாலும் அந்த அனுபவத்துக்கு இட்டுச்செல்லும் வழிமுறைகளைப் பின்பற்ற எனக்குக் கொஞ்சம்கூட கட்டுப்பாடு இல்லை.

ஒருகாலத்தில் அந்த வழிமுறைகளைப் பின்பற்ற வீடு, வாசலைவிட்டு, மலை காடு என்று போக வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அதெல்லாம் ஒருவகை Psychic training என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்’ என்று எழுதுகிறார்.

அவருடைய ‘கண்டதும் கேட்டதும்’ என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை அவரே தொடங்கிய பதிப்பகமான ‘பித்தன் பட்டறை’ மூலம் 1971-ம் ஆண்டில் அவரே வெளியிட்டார். அந்தத் தொகுப்புக்கு முன்னுரைபோல சின்னஞ்சிறிய குறிப்பை முதல் பக்கத்தில் எழுதியிருப்பார்:

“ஒரு காட்டுல ஒரு சிங்கமாம். அதுக்கு மேலே சொன்னா அசிங்கமாம்” என்கிறான் கண்ணன்.

“ஒரு ஊர்ல ஒரு நரி. அதோட கதை சரி” என்கிறாள் ஆனந்தி.

(கண்ணன், ஆனந்தி இருவரும் ஜி.நாகராஜனின் குழந்தைகள். ‘ஆனந்தி’ அவரது முதல் மனைவியின் பெயர். அவர் அகாலத்தில் இறந்த பிறகு, இரண்டாவதாக பள்ளி ஆசிரியரான நாகலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார்.)

அந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் சுந்தர ராமசாமி  “கதைகளைச் சொல்லிச் சொல்லிக் கொல்ல வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும் உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது இவருக்குத் தெரியும்.

பின்கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப் பார்க்கிறார்.

இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான், தான் செய்த ஒரே காரியம் என்கிற பாவத்துடன்…” என்று ஜி.நாகராஜனின் எழுத்துமுறை பற்றிக் குறிப்பிடுகிறார்.

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை ‘கொடுமை’ எனப் புரிந்துகொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

மதுரையில் சில காலம் காந்தி மியூசியத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். அங்கேயே தங்கிக்கொள்ள இடமும் அளிக்கிறார்கள். ஆனாலும் இவரது தன்போக்கான வாழ்முறை அந்த வேலையையும் விட்டுத் துரத்துகிறது.

‘பேராசிரியர் ஜி.நாகராஜன், எங்கள் கல்லூரியில் பாடம் எடுக்கிறார்’ என்று தனிப்பயிற்சிக் கல்லூரிகள் சினிமா தியேட்டர்களில் விளம்பர சிலைடு போடும் அளவுக்குப் பிரசித்திபெற்ற கணித, ஆங்கில ஆசிரியராக இருந்த அவர்,

திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகவும் ஆகிவிட்ட அவர்,

தன் அறிவுத்திறத்தால் எவரையும் வீழ்த்திவிடும் வல்லமை பெற்றிருந்த அவர் குடிப் பழக்கத்திலிருந்து ‘குடி நோயாளி’ என்கிற நிலைக்கு வீழ்ந்து,

தெரிந்தவர்களிடமெல்லாம் கையேந்திக் காசு வாங்கிக் குடிப்பவராகவும் வீடற்றவராகத் தெருக்களில் படுத்துறங்குபவராகவும் மாறிப்போனார்.

கடைசி ஏழு ஆண்டுகள் இப்படியான ஒரு வாழ்முறைக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் அல்லது வெளியேற விரும்பாமல் சிதைந்து கொண்டிருந்தார்.

நான் அவருடைய ‘ஆண்மை’ கதையை முதன்முறையாக வாசித்தபோது அந்தப் பெண் ராஜத்துக்காக கண் கலங்கினேன்.

அதில், தன்னைப் பற்றி அவள் தனக்குள் வரைந்திருந்த சித்திரம் கலைந்து எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்டதை அவள் உணரும் ஒரு தருணத்தை, அவள் உடைந்து நொறுங்கும் அந்தத் தருணத்தை ஜி.நாகராஜன் படம் பிடித்திருக்கும்விதம் வாசக மனதில் ஆழமான அதிர்வுகளை உண்டாக்குகிறது.

இப்படியான வாழ்வைப் படம்பிடிப்பதை 50-களின் இலக்கிய உலகம் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை.

1981-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி காலை அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் சி.மோகனும் சிவராமகிருஷ்ணன் என்கிற நண்பரும்.

“இடையில் டாய்லெட் போக வேண்டும்” என்றார். எழுந்து நடக்க வெகுவாகச் சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாள முடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, ”கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்” என்று வாய்விட்டுக் கதறி அழுதார்.

திரும்ப வந்து படுக்கையில் படுத்துக்கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. “குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் “சிதையில் போய் படுத்துக்கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.

இப்படி அவரது வாழ்வின் கடைசி நிமிடத்தை சி.மோகன் பதிவுசெய்கிறார்.

அன்று இரவு உடன் யாருமே இல்லாத தனிமையில் அநாதையாக அந்த அரசு மருத்துவமனையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார் ஜி.நாகராஜன்.

சி.மோகனும் சிவராமகிருஷ்ணனும் இரவு போய்விட்டு, காலையில் வருவதாகச் சொல்லிப் பிரிந்தபோது ஜி.நாகராஜன் ஷெல்லியின் ஒரு கவிதை வரியைச் சொல்லி விடை கொடுத்திருக்கிறார்.

“வாழ்வின் முட்கள் மீது நானே விழுந்தேன்!

குருதி கொட்டிக்கொண்டிருக்கிறேன்.”

தன்னுடைய பொன்மொழிகளாகச் சிலவற்றை அவரே விட்டுச் சென்றிருக்கிறார். அதில் ஒன்று:

மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.

  • நன்றி : விகடன்
Comments (0)
Add Comment