பதவிப் பறிப்புச் சட்டம் யாருடைய நலனுக்காக?

மக்கள் மனதின் குரல்:

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அறிவித்திருக்கிற பதவிப் பறிப்பு சம்பந்தமான சட்ட மசோதா குறித்த அறிவிப்பு, இந்தியா முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மத்தியில் பரவலான சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது.

குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் வரை சிறையில் இருந்தால், மறுநாள் பிரதமராக இருந்தாலும், முதலமைச்சர்களாக இருந்தாலும், எந்த அரசியல் பொறுப்பில் இருந்தாலும் அவர்களுடைய பதவி பறிக்கப்படும் என்று அமித்ஷா அறிவித்தபோது, நாடாளுமன்றத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அந்த சட்ட மசோதா இனி பெரும்பான்மையான ஒப்புதலைப் பெற்ற பிறகே  சட்டமாவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், பாஜக இத்தகைய பதவிப் பறிப்புச் சட்டத்தை எதற்காக இந்த நேரத்தில் கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

தற்போதுதான் தேர்தல் ஆணையத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கிளம்பி அதற்கான பல்வேறு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டு பெரும் விவாதம் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் பதில் சொல்வதற்கு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த பிரச்சனையிலிருந்து திசை திருப்பும் விதத்தில் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுடிருக்கிறது பாஜக.

இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவது நல்லது தானே.. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு அவர்கள் பதவி பறிக்கப்படுவது நியாயம் தானே.. அரசு சரியான அளவில் தானே முடிவெடுத்திருக்கிறது என்று கூட பொதுமக்கள் நினைக்கலாம். கருதலாம்.

ஆனால், இத்தகைய பதவிப் பறிப்புச் சட்டத்தை மத்தியில் ஆளும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சி தன்னுடைய சொந்த நலனுக்காக யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

இதன்மூலம் பிரதமரையும் சேர்த்து தான் அமித்ஷா தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார். ஆனால், ஏற்கனவே இந்திய அளவில் சில முதலமைச்சர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தது எல்லோருக்கும் தெரியும்.

குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலான பிறகும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்டதும் தெரியும்.

இதெல்லாம் இத்தகைய சட்டம் வருவதற்கு முன்பே நடந்தேறிய சம்பவங்கள்தான்.

ஆக, இதற்கு முன்பே இவ்வளவு கடுமை காட்டியிருக்கிற பாஜக, இனி இத்தகைய பதவிப் பறிப்புச் சட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கொண்டுவந்து அதை சட்டமாக்கி அமல்படுத்தினால், எப்படிப்பட்ட விளைவுகள் இருக்கும்.

பாஜக அரசுக்கு எதிராக செயல்பட முனைகிற எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு முதலமைச்சரும், அமைச்சரும், எம்.பி.க்களும் இதே சட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு குற்றவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சிறைக்கு அனுப்பப்பட்டு 30 நாட்களுக்கு மேல் அவர்கள் சிறைவைக்கப்பட்டால் அவர்களுடைய பதவி பறிக்கக்கூடிய வாய்ப்பு மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்த சட்டம் மத்தியில் பாஜக கையில் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஆயுதத்தைப் போல அமைந்திருக்கிறது. இதன்மூலம் எத்தகைய ஒரு எதிர்பார்ப்புக்கும் ஏற்றபடி சட்டத்தை வளைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம் – குற்றவழக்கு என்று பொதுவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக குற்ற வழக்கு என்றால், எது குற்ற வழக்கு? அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினாலே அவர்கள் மீது வெவ்வேறு பொது சொத்துக்கு  ஆபத்து விளைவித்தல், அரசுக்கு எதிராக குரலை எழுப்புதல் என்று வெவ்வேறு குற்ற வழக்குகள் அவர்கள் மேல் தாக்கல் செய்யப்படுகின்றன.

அதேசமயம் பெரும் ஊழல் செய்கிறவர்கள், கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களும் இருக்கிறார்கள். தற்போதைய அளவில் வெவ்வேறு கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக முதற்கொண்டு காங்கிரஸ் மற்றும் எல்லா மாநிலக் கட்சிககளிலும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் பல முக்கியமான பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

இதைத் தேர்தல் ஆணையம் எந்த அளவில் அனுமதித்திருக்கிறது? இதையெல்லாம் ஒரு விதத்தில் அனுமதித்துவிட்டு தற்போது திடீரென்று குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறைக்குப் போகிறவர்கள் மீது உடனடியாக பதவிப் பறிப்பு நடவடிக்கை என்றெல்லாம் அறிவித்திருப்பது, மேலே குறிப்பிட்டபடி ஒரு திசைத் திருப்பும் காரியமாகத் தான் பார்க்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆனால், இந்தச் சட்டத்தைக் கருப்புச் சட்டம் என்றும் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்ட நாளைக் ‘கருப்பு நாள்’ என்றும் அறிவித்திருக்கிறார்கள் எதிர்க்கட்சித் தரப்பில்.

ஆனால், அதே சமயம் இத்தகைய சட்டங்கள் ஏற்கனவே இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, அந்த நெருக்கடி நிலையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டன என்கின்ற வரலாறை நாம் அகில இந்திய அரசியலில் பார்த்திருக்கிறோம்.

அதே நெருக்கடி நிலைக்காக காலம் கடந்து, அதே இந்திரா காந்தி வருத்தம் தெரிவித்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.

அதே அணுகுமுறையோடு தான் தற்போது இந்தச் சட்டமும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஆனால், இன்றைக்கு பாஜக எடுத்திருக்கிற இந்த முடிவுக்கு எதிர்காலத்தில் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

சூழ்நிலைகள் மாறினால், நாளை, பாஜகவினரும் இதே சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவோ, பதவி பறிக்கப்படவோ வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

ஆக கூர்மையான வாளைப் போன்ற இத்தகைய சட்டத்தைப் பயன்படுத்துவோரும், தனது நலனுக்காக பயன்படுத்த நினைப்போரும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது. 

– ரா.செல்வக்குமரன்.

Comments (0)
Add Comment