இசைக் கலைஞர்களின் நெகிழ வைக்கும் நினைவுக் குறிப்புகள்!

தமிழ்நாட்டில் இசை என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்று.

ஆனால், இசைக்கென தனித்துவமான நூல்களோ, மலர்களோ வெளிவந்தது என்பது குறைவுதான். அந்தவகையில் இசைக்கு மகுடம் சூட்டும் வகையில் வந்திருக்கிறது இந்த இசை மலர்கள்.

இரண்டு பாகங்களாக வந்திருக்கும் இந்த இசை மலர்களை 19 மற்றும் 20 நூற்றாண்டுகளில் சங்கீத சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்சிய இசை ஆளுமைகள் அலங்கரிக்கின்றனர்.

அந்தக் காலகட்டங்களில் வந்த அரிய கட்டுரைகள் மூலமாக அறியவரும் அவர்களது சித்திரங்கள் இந்த மலர்களில் உள்ளன.

முதல் மலரில் மகாவித்வான்கள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாதய்யர், கெம்பே கௌடர், லயமேதை மாமுண்டியா பிள்ளை, கான கலாதர மதுரை மணி ஐயர், அபூர்வக் கலைஞன் அங்கமாலி ஜோஸ், டைகர் வரதாச்சாரியார், எஸ்.ஜி.கிட்டப்பா, பாலமுரளி கிருஷ்ணா, வீணை காயத்ரி உள்ளிட்ட சங்கீதப் பேராளுமைகள் அணிவகுப்பு நடத்துகின்றனர். 

இதனுடன் எழுத்தின் மணக்கும் பகுதியில், அந்தக் காலத்தில் இசை ஞானம் கொண்டிருந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளின் ஒருபகுதியும், அவர்களின் இசையுலகம் பற்றிய கட்டுரைகளும் செழுமையாக்குகின்றன.

அப்படியாக இதில் தி.ஜானகிராமன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, ஸ்வாமிநாத ஆத்ரேயன், ந.சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ரங்கநாதன் உள்ளிட்ட எழுத்தாளுமைகளின் எழுத்துக்களை ரசிக்கலாம்.

இதுதவிர இசை மேதைகளின் நினைவலைகள், அரட்டைக் கச்சேரி, சங்கீத விமர்சனங்கள், சங்கீதச் சர்ச்சைகள், சங்கீதச் சிறுகதைகள், சங்கீத மொழிபெயர்ப்பு கட்டுரைகள் உள்ளிட்ட பல சங்கீத சங்கதிகள் இதில் இருக்கின்றன.

எல்லாம் அந்தக் காலத்தில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த முதல் மலரின் நினைவலைகள் பகுதியில் டைகர் வரதாச்சாரியாரின் நினைவுக் குறிப்புகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

சென்னை பெசன்ட் நகரில் கலாேஷத்ரா செல்லும் சாலைக்கு இந்த இசை மேதையின் பெயர் சூட்டப்பட்டுள்ளதைப் பலரும் அறிந்திருப்போம்.

அவர் 1940களில் திருச்சி வானொலி நிலையத்தில் என் சங்கீத நினைவுகள் என்ற தலைப்பில் பேசியுள்ளார்.

இதனை டைகர் நூற்றாண்டு விழா மலரில் மறுபதிப்பு செய்துள்ளனர். அதனை இந்த மலருக்காக தொகுத்துள்ளார் இம்மலரின் ஆசிரியர் எஸ்.சிவகுமார்.

இதேபோல் எஸ்.ஜி.கிட்டப்பா பற்றி அவரின் அண்ணன் ஹார்மோனிய கலைஞர் எஸ்.ஜி.காசி ஐயர் 1968ம் ஆண்டில் எழுதிய கட்டுரை இதில் இருக்கிறது. 

இதில் கிட்டப்பாவைப் பற்றி அறியப்படாத தகவல்கள் ரசிக்க வைக்கிறது.   

அடுத்ததாக, ‘கல்கி-மணிக்கொடி சங்கீத யுத்தம்’ எனும் தலைப்பில் சங்கீத சர்ச்சைகள் பகுதியில் ஒரு கட்டுரை வாசகர்களை நிச்சயமாக ஈர்க்கும்.

ஏனெனில், 1934ம் ஆண்டு விகடனில் கர்நாடகம் என்ற பெயரில் எழுதிய கல்கிக்கும், மணிக்கொடியில் இன்னிசை என்ற புனைப்பெயரில் எழுதிய முகம் தெரியாத இசை விமர்சகருக்கும் இடையே நடந்த இசை விமர்சனம் அது.

கல்கியின் விமர்சனத்தையும் அதற்கு மணிக்கொடியில் வந்த எதிர்விமர்சனமும் தொகுத்து தந்துள்ளார் இம்மலர் ஆசிரியர்.

இதேபோல் இரண்டாவது மலரில் வேதாரண்யம் வேதமூர்த்தி, தஞ்சாவூர் வெங்கடேச ஐயங்கார், திருவாலாங்காடு தியாகராஜ சாஸ்த்ரி, கொன்னக்கோல் பக்கிரியா பிள்ளை, கீழ்வேளூர் சிங்காரவேலு பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பி.கிருஷ்ணமூர்த்தி, பாலக்காடு மணி ஐயர், மதுரை சோமு உள்ளிட்ட ஆளுமைகள் பற்றி கட்டுரைகள் உள்ளன.

எழுத்தில் மணக்கும் பகுதியில் திரு.வி.க., எஸ்.வி.வி., உ.வே.சாமிநாதய்யர், ஜெயகாந்தன் உள்ளிட்ட எழுத்தாளுமைகளின் இசை குறித்த கட்டுரை மற்றும் அவர்களின் நாவல்களின் ஒரு சிறுபகுதி இதில் உள்ளன.

இசையில் அவர்களுக்கு எந்தளவுக்கு ரசனை இருந்தது என்பதை இதன்வழியே நாம் அறியலாம்.

சங்கீதச் சிறுகதைகள் பகுதியில் கு.அழகிரிசாமியின், ‘திரிவேணி’ சிறுகதை அவரின் ஆழமான இசை ரசனையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இதிலும் முதல் மலரைப் போலவே அரட்டைக் கச்சேரி, நாட்டியம், பொதுகட்டுரைகள் உள்ளன.

இந்த இசை மலரின் மற்றொரு பலம் புகைப்படங்கள். இதுவரை தெரியவராத ஆளுமைகளின் புகைப்படங்களைக்கூட சிரமமேற்பட்டு சேகரித்து அதனை அச்சில் ஏற்றியுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் பழமை மணத்தைக் கூட்டும் வகையில் பக்கங்கள் இடையே இசை சார்ந்த அக்கால விளம்பரங்களும் உள்ளன. இதுவரை இப்படியொரு இசை மலர் வெளியானதில்லை எனலாம்.

முதல் மலரின் அட்டைப் படத்தை எழுத்தாளர் தி.ஜா அலங்கரிக்கிறார். இதனை வரைந்தவர் ஓவியர் மணியம் செல்வன். இரண்டாவது மலரின் அட்டைப் படத்தை ஓவியர் கேஷவ் வரைந்துள்ளார்.

இந்த மலர்கள் மூலம் பழம்பெரும் இசை மேதைகளை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் இம்மலர் ஆசிரியர் எஸ்.சிவகுமார். இவர் தினமணி கதிர் இதழின் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.

இவரும், இசைக்காகவும், பொருளாதாரத்தில் நலிந்த இசைக் கலைஞர்களுக்காகவும் உதவி வரும் ‘பரிவாதினி’ அறக்கட்டளை லலிதாராமும் சேர்ந்து இந்த இசை மலர்களைக் கொண்டு வந்துள்ளனர். வாசிக்க வேண்டிய இசை பொக்கிஷமாக இவை இருக்கின்றன. 

நூல்: பரிவாதினி இசை மலர் 1, 2
வெளியீடு: பரிவாதினி அறக்கட்டளை
விலை: ரூ. 500/- (ஒரு மலரின் விலை)
தொடர்புக்கு: 99809 92830

– கவின்

Comments (0)
Add Comment