பூச்சிகள் என்றாலே ஒருவித அலர்ஜி எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக உணவில் சின்ன புழு நெளிந்தால்கூட அந்த உணவைக் கீழே கொட்டும் பழக்கமுள்ளவர்கள் நாம்.
ஆனால், சமீப காலமாக உலக அளவில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக சொல்கின்றன ஆய்வுகள்.
உலகில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் தினமும் பூச்சிகளை உட்கொள்வதாகக் கூறுகின்றன அந்த ஆய்வுகள்.
குறிப்பாக உலக அளவில் 2 ஆயிரம் பூச்சிகள் உண்ணக்கூடியதாக இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளன. இதனை ‘Edible insects’ என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர்.
இவ்வளவு பூச்சிகள் உணவாக உட்கொள்ளக் காரணம், இவற்றில் நம் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களும், கொழுப்புகளும், சர்க்கரைகளும் நிறைந்திருப்பதும், வைட்டமின் பி மற்றும் கே அதிகளவில் இருப்பதுமே என்கின்றனர் நிபுணர்கள்.
அத்துடன் மாடு, ஆடு போன்ற கால்நடைகளுடன் ஒப்பிடும்போது உண்ணக்கூடிய பூச்சிகள் இதற்கு சமமான புரதச்சத்தை வழங்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோல் கால்நடைகளைவிட பூச்சிகளுக்கு குறைவான பராமரிப்பே தேவைப்படுகின்றன. இவையெல்லாம் பூச்சிகளை உண்ணும் பழக்கத்தை அதிகரித்துள்ளன.
இந்த உண்ணக்கூடிய பூச்சிகளின் பயன்பாட்டில் இந்தியாவும் முன்னணியில் இருப்பதுதான் ஆச்சரியம்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளிவரும் ‘நேச்சர்’ இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, உலகில் 128 நாடுகளில் 2,205 பூச்சியினங்கள் உட்கொள்ளப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் ஆசியாவில்தான் அதிக எண்ணிக்கையில் பூச்சிகள் உண்ணப்படுகிறது. அதாவது ஆசியாவில் 932 பூச்சியினங்கள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. இதனையடுத்து வடஅமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்கள் உள்ளன.
பூச்சிகளை அதிகமாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் மெக்ஸிகோ 450 வகை பூச்சிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதற்கடுத்து தாய்லாந்து 272 வகை பூச்சிகளையும், இந்தியா 262 வகையான பூச்சிகளையும், காங்கோ ஜனநாயக குடியரசு 255 வகையான பூச்சிகளையும், சீனா 235 வகை பூச்சிகளையும், பிரேசில் 140 வகை பூச்சிகளையும், ஜப்பான் 123 வகை பூச்சிகளையும், கேமரூன் 100 பூச்சியினங்களையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன.
இந்தியாவில், சுமார் 12 மாநிலங்களில் வசிக்கும் பழங்குடி சமூகங்களால் இந்தப் பூச்சியினங்கள் உட்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பூச்சிகள் பிடிக்கப்பட்டோ அல்லது பண்ணைகளில் வளர்க்கப்பட்டோ விற்பனைக்கு வருகின்றன.
அமெரிக்கா, ஃபிரான்ஸ், தாய்லாந்து, டென்மார்க், சீனா, தென்னாப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகள் பூச்சி உணவிற்கென பெரிய அளவிலான பண்ணைகளை அமைத்து உலகளவில் விற்பனை செய்கின்றன.
இந்திய மதிப்பில் இது சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
அதுமட்டுமில்லாமல் 2030-க்குள் இதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 25 சதவீதம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணம், பாரம்பரியமான புரதங்களுக்குப் பதிலாக ஆரோக்கியமான மாற்றுகளை நோக்கி நுகர்வோர் நகர்வதாக சொல்லப்படுகிறது.
அதாவது அதிக புரதம், குறைந்த கொழுப்புள்ள உணவு ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருவது முக்கிய காரணமாகும்.
அத்துடன் குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்படுவதும், இந்தப் பூச்சிகள் எளிதாக கிடைக்கும் என்பதாலும் உண்ணக்கூடிய பூச்சிகளின் சந்தை பெரியளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது.
சரி… உலக அளவிலும், இந்தியாவிலும் என்னவிதமான பூச்சிகள் உட்கொள்ளப்படுகின்றன என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.
உலக நாடுகள்… :
உலகில் பூச்சிகள் அதிகளவில் உண்ணும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மெக்ஸிகோதான். மெக்ஸிக்கோவின் உணவு பாரம்பரியத்தில் ஒரு பகுதியாகவே இந்தப் பூச்சி உணவுகள் இருக்கின்றன.
குறிப்பாக மாகுவே புழுக்கள், வெட்டுக்கிளிகள், எஸ்கமோல்ஸ் எனப்படும் எறும்பு லார்வாக்கள், ஸ்டிங் பக்ஸ் எனப்படும் துர்நாற்றப் பூச்சிகள், அட்டா எறும்புகள் ஆகியவை குழம்பு அல்லது சூப்களில் வேகவைத்து சுவைக்கப்படுகின்றன. அத்துடன் சாஸ்கள் தயாரிக்கவும் இவை அரைக்கப்படுகின்றன.
இந்தப் பூச்சிகளை Tacos எனும் உணவுப் பொருளில் நிரப்பியோ அல்லது ஃப்ரை செய்தோ ருசித்து சாப்பிடுகின்றனர். இதனுடன் எறும்பு லார்வாக்களில் செய்யப்படும் ஐஸ் கிரீம்களுக்கு அங்கே அத்தனை வரவேற்பு இருக்கிறது.
இதற்கடுத்து தாய்லாந்து உள்ளது. தாய்லாந்தின் தெருக்களில் வறுத்து உப்பு சேர்க்கப்பட்ட பூச்சிகள் வழங்கும் உணவு வண்டிகளை சாதாரணமாகவே காணலாம்.
உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்று மொறுமொறுப்பான கிரிக்கெட்ஸ் எனப்படும் சில் வண்டுகளையும், வெட்டுக்கிளிகளையும், பட்டுப்புழுக்களையும், மூங்கில் புழுக்களையும் இந்த விற்பனை வண்டிகளில் காணலாம்.
சீனாவில் 235 பூச்சியினங்கள் வரை உட்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கே பொதுவாக உண்ணக்கூடிய பூச்சி என்பது பட்டுப்புழு லார்வாக்கள்தான். இவை தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்ததெனக் குறிப்பிடப்படுகிறது.
இதனுடன் வெட்டுக்கிளிகள், கிரிக்கெட்ஸ்கள், ராட்சத சிக்காடா உள்ளிட்ட பல்வேறு பூச்சியினங்கள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர குச்சிகளில் குத்தி வைக்கப்பட்டியிருக்கும் பூச்சிகளையும், வண்டுகளையும், தேள்களையும், புழுக்களையும் நாம் யூடியூப்களில் பார்த்திருக்கலாம். இவை மாலைநேர சிற்றுண்டிபோல அவர்கள் ருசிக்கின்றனர்.
தென் அமெரிக்காவைப் பொறுத்தவரை பிரேசில்தான் உண்ணக்கூடிய பூச்சிகளில் முதலிடம் வகிக்கிறது. இங்கே 140-க்கும் மேற்பட்ட பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
இதில் குறிப்பாக இறக்கைகள் கொண்ட ராணி எறும்புகள் அதிகம் உண்ணப்படுகின்றன. இவற்றை ஃப்ரை செய்தோ அல்லது சாக்லெட்களில் அமிழ்த்தியோ உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இதேபோல் ஜப்பானில் 123-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் உட்கொள்ளப்படுகின்றன.
பொதுவாக வெட்டுக்கிளிகள், கிரிக்கெட்ஸ்கள், தேனீ லார்வாக்கள், மக்கட்ஸ் எனப்படும் புழுக்கள், பட்டுப்புழுக்கள் ஆகியவை அதிகளவில் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர கம்போடியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, காங்கோ ஜனநாயக குடியரசு, தென்கொரியா எனப் பல்வேறு நாடுகளிலும் பூச்சிகள் அதிகம் உண்ணப்படுகின்றன.
இந்தியா… :
இந்தியாவைப் பொறுத்தவரை ஜார்க்கண்ட், தமிழ்நாடு, ஒடிசா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மிசோரம், அசாம், மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பூச்சிகளை உண்ணும் பழக்கம் அதிகமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு கிடைத்தது நினைவிருக்கலாம்.
அங்குள்ள கந்தமால், சுந்தர்கார், மயூர்பஞ்ச், கோராபுட் உள்பட சில மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடிகள் இந்தச் சிவப்பு எறும்புகளை சட்னியாக அரைத்து அதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிடுகின்றனர்.
இதில் அதிகப் புரதச்சத்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த வழக்கம் சத்தீஸ்கர் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உள்ளன.
தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சிவப்பு எறும்பினை உண்ணும் வழக்கம் இருக்கிறது. இவர்கள் எறும்புகளின் முட்டைகள் மற்றும் லார்வாக்களை உட்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சில பழங்குடிகள் ஆசிய தேனீக்கள், வல்லூறு தேனீக்கள், சிவப்பு எறும்புகள், குளவிகள், ஈசல்கள் ஆகியவற்றை உட்கொள்ளும் பழக்கம் வைத்துள்ளனர்.
இதில் ஈசல் உண்ணும் வழக்கம் பெருவாரியான மக்களிடம் உள்ளது. சென்னையில்கூட ஈசல் வறுவல் உணவாகக் கிடைக்கின்றன.
கேரளா மற்றும் தெலுங்கானாவில் பருவமழைக்கு முன்பு ஈசல் ருசியான உணவாக இருக்கிறது. இதனுடன் இந்திய தேனீக்கள், பாறை தேனீக்கள், சிவப்பு எறும்புகள், வெட்டுக்கிளிகள் ஆகியவை உண்ணும் பழக்கமும் கொண்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சத்புரா மலைத்தொடரில் உள்ள பழங்குடிகள் பத்து வகையான பூச்சியினங்களை உண்கின்றனர்.
சிவப்பு எறும்பு, சிவப்பு குளவிகள், இந்திய தேனீக்கள், கறுப்பு குளவிகள், பட்டுப்புழுக்கள், கொப்புள வண்டுகள், வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சி லார்வாக்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் ருசிக்கின்றனர்.
வடகிழக்கு இந்தியப் பகுதிகளைப் பொறுத்தவரை மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 41 வகையான பூச்சியினங்கள் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
அங்கே ராட்சத நீர்ப் பூச்சிகள், நீர் வண்டுகள், ஸ்கார்லெட் ஸ்கிம்மர் எனப்படும் தும்பிகள் சில பழங்குடிகளுக்குப் பிரியமான உணவாக உள்ளன.
இதேபோல் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நியிஷி மற்றும் காலோ பழங்குடிகள் இடையே 81 வகையான பூச்சியினங்களை உண்ணும் வழக்கம் உள்ளது.
இதில் குறிப்பாக பட்டுப்புழு லார்வாக்கள், தேனீக் குஞ்சுகள், குளவி குஞ்சுகள், தட்டாம்பூச்சிகள், அதன் லார்வாக்கள், மூங்கில் கம்பளிப்பூச்சிகள், மண் கிரிக்கெட்ஸ்கள், பழுப்பு நிற அனோமலா சிலந்திகள் உள்ளிட்டவை அடங்கும்.
நாகலாந்து மாநிலத்தில் கார்பென்ட்டர் புழுக்களின் லார்வாக்கள் திருவிழாக் காலங்களில் படைக்கப்படுகின்றன. அசாமில் போடோஸ் மக்கள் 23 வகையான பூச்சிகளை உண்ணுகின்றனர்.
இப்படியாக இன்று ஒட்டுமொத்த உலகமும் பூச்சி உணவுகளைத் தேடி பறந்து கொண்டிருக்கிறது.
– லக்ஷன்