தஞ்சாவூர் கிளுவை வேலிகள் தெரியுமா…?

ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கிளுவை வேலி இல்லாத வீடுகளோ, வயல், தோப்புகளோ இல்லாத இடம் இல்லை என சொல்லலாம். கிளுவையை ஒரு தரம் ஊன்றினால் அது நிலத்திற்கு பாதுகாப்பையும், விவசாயிக்கும் தொடர்ந்து வருமானத்தை கொடுக்கக்கூடியது.

இருபதைந்து வருடங்களுக்கு முன் எங்கள் ஒரு வேலி நிலத்தில் அப்பாதான் எங்கள் பகுதிலேயே முதன்முதலில் கிளுவை வேலி வைத்திருந்தார்.

கிளுவை வேலி வைப்பது ஒரு திறமையான வேலை! சிறு குழிதோண்டி கிளுவைக் கம்புகளை வரிசையாக ஊன்றி, அது நேராக நிற்பதற்கு மூங்கில் சிலாண்டுகளால் சணல் மூலம் கட்டினால் பார்க்கவே அழகாக இருக்கும். கிளுவை வளர்ந்த பிறகு அதன் மேல் கிளைகளை வெட்டி மற்ற விவசாயிகளுக்கு விற்கலாம்.

சிறுவனாக இருந்த காலத்தில், “டேய் தம்பி இந்த ஊருல இன்னாரு கிளுவை பணம் கொடுக்கனும் வாங்கிட்டு வாடா” என அப்பா அனுப்பி நான் இரண்டு கி.மீ சைக்கிளில் சென்று பணம் வாங்கி வருவதுண்டு. கிளுவை வேலி எத்தனை பறவை இனத்திற்கு வாழ்விடமாகவும், மூலிகை கொடிகள் படர பந்தலாகவும் இருந்திருக்கிறது.

மனித உயிர்களுக்கே மதிப்பில்லாத இக்காலத்தில் உயிர்வேலிகள் அற்று போய்விட்டது. நாகரிக காலம் இப்போது இரும்பு முள்வேலிகளாக மாறி இருக்கிறது.

இருந்தாலும் இன்னமும் எங்க வயல்களில் எங்கப்பா வைத்த கிளுவை வேலியில் மிச்சம் இருக்கும் சில கிளுவை மரங்கள், எங்கப்பா பெயரை உச்சரித்தப்படியே இருக்கின்றன.

பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment