நினைக்கிறபோது இப்போதும் மனதை அதிர வைக்கக் கூடிய சம்பவம் அது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்.
அப்போதும் நான் பிரபல வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.
சென்னையின் மையப்பகுதியில் சாக்கடைக் குழிக்குள் விழுந்து சில பணியாளர்கள் உயிரிழந்த செய்தியை நண்பர் ஒருவர் சொன்னார்.
உடனே கிளம்பி அந்தப் பகுதிக்குப் போனபோது அதற்குள் கூட்டம் கூடியிருந்தது. கூடுதலாக இயந்திரத்தையும் வரவழைத்திருந்தார்கள். திறந்திருந்த சாக்கடைக் குழியைச் சுற்றிலும் உள்ளிருந்து எடுக்கப்பட்ட கழிவுகள் குவியலாக கிடந்தன.
சற்று நேரத்தில் பெரும் முயற்சிக்குப் பிறகு உடம்பு முழுக்க சாக்கடை கழிவுகள் அப்பிய நிலையில் ஒரு பிரேதத்தை எடுத்து வெளியே போட்டபோது சுற்றியிருந்த உறவினர்களிடமிருந்து வீறிட்ட அலறல். ஒரே கத்தல்.
அடுத்தடுத்து இன்னும் இரண்டு சடங்களை அதே மாதிரி சாக்கடை அப்பிய நிலையில் குழியில் இருந்து எடுத்து வெளியே போட்டார்கள். கூட்டத்தின் கதறல் இன்னும் அதிகமானது.
தெருவில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து அடைத்திருந்த நிலையில், மாநகராட்சிக்கு புகார் போய், அந்த மூன்று தூய்மைப் பணியாளர்களும் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அந்தக் குழிக்குள் இறங்கியிருகிறார்கள்.
சாக்கடைக் குழிக்குள் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்களால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியில் பார்த்தால் எந்த வீட்டிலோ கழிவறையில் வீசப்பட்ட ‘நாப்கின்’ துணி உள்ளே அடைப்பை ஏற்படுத்தியிருக்க, அதனால் தெருவிலும் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியேறி தெருவில் ஓடியிருக்கிறது.
அந்த நாற்றம் பொறுக்க மாட்டாமல் பொதுமக்கள் புகார் செய்யப் போக, அந்த அடைப்பை நீக்குவதற்காக சாக்கடைக்குள் இறங்கிய மூன்று தூய்மைப் பணியாளர்கள் சாக்கடை குவியலுக்குகிடையே விரைத்துக் கிடந்ததை சுற்றியுள்ளவர்களால் கண்கலங்காமல் பார்க்க முடியவில்லை.
அந்த கோரக்காட்சியை புகைப்படம் எடுத்த கேமராமேனின் கண்களிலும் நீர் கசிந்தது.
இந்தக் கட்டுரை பிரபல வார இதழில் வெளிவந்தபோது, எதிர்வினையாக 300 க்கும் மேற்பட்ட கடிதங்கள் உருக்கமான பதிலுரைகளாக வந்து சேர்ந்தன.
அந்தக் கட்டுரைக்கு அப்போது வைத்திருந்த பெயர் ‘இவர்கள் கடவுளின் குழந்தைகள் இல்லையா?’.
இப்படியெல்லாம் சிங்காரச் சென்னை என்ற அடைமொழியோடு நாம் அழைத்துக் கொண்டிருக்கும் அதே சென்னையைத் தூய்மைப்படுத்தத்தான் உண்மையிலேயே தங்கள் உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களுக்குமேல் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியில் ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராடி, சிலர் உயிர்களை இழந்தநிலையில்கூட மத்திய அரசாங்கம் அவர்களைக் கண்டுகொள்ள நீண்ட நாட்களாயிற்று.
அதே பாணியில், நாமும் தூய்மைப் பணியாளர்களையும், அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளையும் கடந்து போய்விட முடியுமா?
– மணா