சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம்; வீட்டில் அடைபட்டிருக்க மாட்டேன்; எங்கேயாவது ‘சுறுசுறு’வென்று சுற்றிக்கொன்டே இருப்பேன். அது வெறும் சுற்றலாக இல்லாமல், அங்குள்ள சிறப்புகளை அறிந்துகொள்ள ஓர் ஆர்வத்தை உண்டாக்கக் காரணமாக இருந்தது.
என்னைத் தெரிந்தவர்கள் என்னுடைய அந்தச் சுபாவத்தை, அந்த நாட்களிலேயே பாராட்டினார்கள்; என்னைத் தெரியாதவர்கள் ‘ஊர் சுற்றி’ என்று சொன்னார்கள்.
நான் ஊர் சுற்றியோ? உலகம் சுற்றியோ? அப்படிச் சுற்றுவதில் எனக்கு ஓர் சுகம் அன்றும் இருந்தது; இன்னும் இருக்கிறது.
அந்தப் பழக்கத்திலிருந்து பிறந்த எழுச்சி, எங்கேயாவது சுற்றி எதையாவது புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
நான் எழுத்தாளனாகி, பத்திரிக்கையாளனாகி, பத்திரிகை ஆசிரியராகப் பணி ஆற்றத் தொடங்கியது முதல் என்னுள் இருந்து வரும் அந்தப் பழக்கம் மேலும் மிகுந்திருக்கிறது.
பத்திரிகை ஆபீஸ்களில் தரப்பட்டிருக்கும் அறைக்குள் முடங்கிக் கிடப்பது எனக்கு எப்போதுமே பிடிக்காது. வெளிநடப்புகளைப் பார்க்கும் அடக்கம் எனக்குப் பிடிக்காத ஒன்று.
எதையும் நேரில் சென்று பார்க்க வேண்டும்; அந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான்.
அவ்வாறு வெளிவந்து சுற்றியதில் கிடைத்த சுவையான அனுபவங்களை நகைச்சுவையோடு சொல்லத் தொடங்கினேன்.
அந்தப் புதிய கண்ணோட்டத்தின் ஒரு படைப்புத்தான் “இங்கே போயிருக்கிறீர்களா?” என்ற இந்தத் தொகுப்பு.
“இங்கே போயிருக்கிறீர்களா?” என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பி விட்டுச் சும்மா இருந்து விடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு ‘நியூஸ் ரீல்’ போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறேன்.
நமது நாட்டில் நான் போகாத இடங்கள் இல்லை. சுற்றிப் பார்க்காத பகுதிகள் இல்லை. சென்ற இடங்களில் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததையே திரும்பத் திரும்பச் சொல்லவில்லை. சந்து பொந்துகளில் எல்லாம் நின்று கவனித்து, அந்த அனுபவங்களை அப்படியே எழுதியிருக்கிறேன்.
நான் பெங்களூருக்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். அங்குள்ள லால்பாக்கின் இயற்கை அழகையும் விதான் சௌதாவின் வனப்பையும் மட்டும் கண்டு களித்துவிட்டு வந்து விடுவதில்லை. மல்லேசுவரத்தில் சுடச்சுட மசால் வடை எந்த இடத்தில் கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியும்.
எதையும் சரிவரக் கூர்ந்து கவனிக்கவேண்டும். கவனித்ததை ரசமாகச் சொல்ல வேண்டும்; படிப்பவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்.
ஏதாவது ஒன்றை எந்த ஊரிலாவது பார்த்தால், அதைப் பார்வைக்கு மட்டும் ஒரு காட்சியாக்கிவிடாமல், அதையே காதுக்கும் மூக்கிற்கும் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தான் திட்டமிடுவேன்.
உதாரணமாகப் ‘பொள்ளாச்சி சந்தை’ பற்றி இந்த கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதியில் அந்தச் சந்தையில் புரளுகிற கொங்கு நாட்டு மொழியை அவர்கள் எப்படிப் பேசுகிறார்களோ அப்படியே தந்திருக்கிறேன்.
மாடுகள் விற்பனை செய்யும் பகுதியில் அவர்கள் மாட்டு பாஷையிலேயே பணத்திற்கும் ஒரு பரிபாஷயைப் பயன்படுத்துவதையும் குறிப்பிட்டிருக்கிறேன். அதைப்போலவே மூக்கு அனுபவித்த பலாப்பழ வாசனை, கதம்ப மணம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
உலக நாடுகள் சுற்றிப் பார்த்து இதே குறிக்கோளோடு சிறு சிறு விஷயங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்துச் சுவையாக வாசகர்களுக்குச் சொல்லவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. அது எப்பொழுது நிறைவேறுமோ தெரியாது.
பிரயாணக் கட்டுரையில் ஒரு புதிய முறையைப் பின்பற்றவேண்டும் என்ற என் நெடு நாளைய ஆசை. அது எப்பொழுது நிறைவேறுமோ தெரியாது.
பிராயணக் கட்டுரையில் ஒரு புதிய முறையைப் பின்பற்றவேண்டும் என்ற என் நெடு நாளைய லட்சியத்திற்கு இந்த “இங்கே போயிருக்கிறீர்களா?” ஒரு சின்ன வாய்ப்பு.
‘பொன்னியின் புதல்வர்’ என்ற பெயரில் பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதிப் பெரும் புகழ் பெற்றுள்ள என் அருமை நண்பர் திரு.சுந்தா அவர்கள் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை வழங்கியுள்ளார்கள்.
தமது லண்டன் வாழ்க்கையைப் பற்றி ‘ஆங்கில வாழ்க்கை’ என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதியவர். நகைச்சுவையோடு, ரத்னச் சுருக்கமாக அமைந்துள்ள அந்தக் கட்டுரைகளை அவர் புதிய டெக்னிக்’கில் எழுதியுள்ளார்.
என் வேண்டுகோளுக்கு இணங்கி இப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதித் தந்த திரு.சுந்தாவுக்கு நன்றி கூறி என்னுரையை முடித்துக் கொள்கிறேன்.
சாவி
ஆசிரியர், தினமணி கதிர்,
சென்னை.
நூல்: இங்கே போயிருக்கிறீர்களா?
ஆசிரியர்: எழுத்தாளர் சாவி
அல்லயன்ஸ் பதிப்பகம்
பக்கங்கள்: 360
விலை: ரூ. 160/-