அண்மையில் 2025 ஆம் ஆண்டுக்கான வேர்ட்ஸ் வேலி புத்தக விருதுகள் (Valley of Words Book Awards) அறிவிக்கப்பட்டுள்ளன.
எட்டு பிரிவுகளில் Valley of Words அதன் இறுதிப் பட்டியலை அறிவித்துள்ளது.
வெற்றியாளர்கள் அக்டோபர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் டேராடூனில் நடைபெறும் வேர்ட்ஸ் வேலி இலக்கியம் மற்றும் கலை விழாவில் அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் விருதும் கேடயமும் வழங்கப்பட உள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களும் இடம் பெறுகிறது. இப்பிரிவில் இடம் பெற்ற Dalit Kitchens of Marathwada நூல் கவனத்தை ஈர்த்தது.
இந்நூலின் சில கட்டுரைகளை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். ஷாஹு படோல் மாராத்தியில் எழுதிய ‘அன்னா ஹீ அபூர்ணா பிரம்மா’ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் Dalit Kitchens of Marathwada.
மஹர் மற்றும் மாங் எனப்படும் இரண்டு மராத்திய தலித் சமூகங்களின் உணவுப் பழக்க வழக்கங்களை விவரிக்கிறது இந்நூல்.
உணவுப் பழக்கம் வாயிலாக சமூகப் பிளவுகளைப் பராமரிக்கும் நுண் அரசியலை ஆராய்கிறது இந்நூல்.
சாதிப் பாகுபாட்டின் அடிப்படையில், எந்த உணவு தூய்மையானது (சாத்விக்)? எந்த உணவு ராஜாவுக்கு உரியது (ராஜசிக்)? எது பாவம் நிறைந்த (தாமசிக்) உணவு? என உண்ணும் உணவால் மனிதர்களைப் பாகுபடுத்தும் கீழ்மையைப் பேசுகிற நூல்.
மராத்வாடாவின் தலித் சமையல் அறைகளில் எண்ணெய், நெய் மற்றும் பால் போன்ற பொருட்கள் இடம்பெறுவது இல்லை.
மாடுகளை வளர்க்க மேய்ச்சல் நிலம் மறுக்கப்பட்டதால், இவர்களால் விலையுயர்ந்த பால் பொருட்களை நுகரமுடியவில்லை. மோருக்காக ஆதிக்க சாதிகளிடம் அடிமைச் சேவகம் புரிந்திருக்கிறார்கள் இம்மக்கள்.
ஒவ்வொரு வர்ணமும் என்ன சாப்பிட வேண்டும்? எனப் பரிந்துரைக்கும் இந்து வேதங்களையும் இந்நூல் ஆராய்கிறது .
ஒருவர் என்ன சாப்பிடுகிறாரோ அதுவாகவே மாறுகிறார்! என்கிற கருத்தை நூலாசிரியர் ஷாஹு படோல் கேள்விக்குள்ளாக்குகிறார்.
உணவுக் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகளின்படி, மராத்வாடா சமூகம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக இந்நூல் வழி அறியமுடிகிறது.
எளிமையான உணவு முதல் பண்டிகைகால விருந்துகள் வரை தயாரிக்கப்படும் சமையல் குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
சமூகங்களை இணைப்பதிலும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் உணவின் உருமாற்ற சக்தியை இந்நூல் மிகச் சிறப்பாக விவரிக்கிறது.
இந்நூலை இந்தி உள்ளிட்ட இந்திய தேசிய மொழிகள் பொருட்படுத்தாத நிலையில், சர்வதேச அளவில் செயல்படும் ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டிருப்பது சிறப்பு.
இந்திய உணவு என்றால் பெரும்பாலும் சைவ உணவு என்றே மேலை நாட்டவர் கருதுகின்றனர்.
ஏனெனில் பெரும்பாலான இந்திய ரெசிப்பி நூல்கள், பெரும்பாலான ஊடக சமையல் நிகழ்வுகள் அனைத்தும் சைவ உணவையே மையப்படுத்துகின்றன.
அந்த வகையில் எளிய மக்களின் புலால் உணவுக் கலாச்சாரத்தை உரையாடும் இந்நூலை, ‘தெற்கு ஆசியாவிலிருந்து வெளிவந்த மிக முக்கியமான சமையல் புத்தகம்’ என்கிறார் நியூயார்க் பல்கலைக் கழகத்தின் உணவு ஆய்வியல் பேராசிரியர் கிருஷ்ணேந்து ரே.
பசியைப் போக்கும் உணவு, மக்கள் வாழும் பிரதேச சூழலுக்கேற்ற வகையில் பண்பாடாகவும் மாறுகிறது.
ஆனால், இந்தியாவில் எளிய மக்களின் தட்டில் என்ன இருக்க வேண்டும்? என்பதை மத அதிகாரம் தீர்மானிக்க முயல்கிறது.
கடந்த பதினைந்து ஆண்டுகளில், பசு இறைச்சியை எடுத்துச் சென்றதாக சந்தேகித்து முஸ்லிம்களையும் தலித்துகளையும் அடித்துக் கொன்றுள்ளனர்.
ஒடுக்கப்பட்ட சாதி இந்துக்களால் உண்ணப்படும் சிவப்பு இறைச்சியை இறைச்சிக்கடைகள் கருப்பு பாலித்தீன் பைகளில் வைத்து மறைத்துத் தருகிறார்கள்.
காரணம் இறைச்சியைப் பார்த்து, சைவ ஆதிக்க சாதி இந்துக்களின் மனம் புண்பட்டுவிடும் என்பதால். இந்த நூலை தான் எழுதியது உயர்சாதியினர் படிப்பதற்காக அல்ல.
சக தலித்துகள் ‘ஏதோ தவறான உணவைச் சாப்பிடுகிறோம்’ என அவர்கள் கொள்கிற அவமான உணர்வை, குற்ற உணர்வை அகற்றவே!’ என்கிறார் நூலாசிரியர்.
இந்திய உணவுக் கலாச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சைவம், தன்னை தூய்மையானதாகவும், இறைச்சி உண்பவர்களை தாழ்ந்தவர்களாகவும் காட்டி வருகிறது.
இன்றும் கூட சைவ உணவு உண்பவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். எத்தனை சைவ உணவு உண்பவர்கள் வயல்களில் வியர்வை சிந்துகிறார்கள்? கேட்கிறார் ஷாஹு படோல்.
இந்திய சைவ உணவு உண்பவர்கள், உடல் உழைப்பு இல்லாத சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
இந்தியாவில் அந்தஸ்து, சாதி மற்றும் இறைச்சியைச் சுற்றி அமைந்துள்ள நுண் அரசியலை ஆழமாக விவாதிக்கும் இந் நூலை, Valley of Words விருதுக் குழுவினர் கவனப்படுத்தியிருப்பது மகிழ்வளிக்கிறது.
நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு