சினிமாவில் குழந்தைகள் உலகம்…!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

நூற்றாண்டுகால இந்திய சினிமாவில் குழந்தைகளின் உலகம் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பொதுவாக வெகுஜனத் திரைப்படங்களில் இடம்பெறும் குழந்தைகள் இரண்டு விதமானவர்கள். ஒன்று பெரியவர்களைப் போல அலட்டிக் கொண்டு தன் இயல்பை மீறி மிகையாகப் பேசுகிறவர்கள். அர்த்தமற்றபடி பாட்டுபாடி ஆடுகின்றவர்கள்.

மற்றவர்கள் கைவிடப்பட்ட அநாதைகள். ஏழ்மையில் உழலும் பரிதாபமானவர்கள், ஒடிப்போனவர்கள். குடும்ப பாரம் சுமப்பவர்கள், அவர்களின் கஷ்டமும் கண்ணீரும் வணிக திரைப்படங்களின் வியாபார உத்திக்கு சுவைகூட்டவே பயன்பட்டிருக்கிறது.

டெம்பிளட் எனப்படும் வகை மாதிரிக்கு உட்பட்டே குழந்தைகள் திரைப்படங்களில் இடம் பெறுகிறார்கள்,

குழந்தைகள் சினிமா என்பதை நாம் குழந்தைகள் நடிக்கும் சினிமா எனத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம்.

குழந்தைகள் சினிமாவில் குழந்தைகள் நடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அது குழந்தைகளின் மன உலகை, விருப்பங்களை, கனவுகளைக் காட்சிபடுத்தியிருக்க வேண்டும்.

குழந்தைகளின் கண்களின் வழியே உலகம் எப்படி தென்படுகிறது என்பதை முதன்மைப் படுத்தியிருக்க வேண்டும்.

குழந்தைகள் உலகை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள். எப்படி நடந்து கொள்கிறார்கள். ஏன் அவர்களை பெரியவர்களின் உலகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

ஒரு பையனோ, பெண்ணோ புறச்சூழலின் பாதிப்பில் எப்படி தனது இயல்பான ஆசைகளை கைவிட நேர்கிறது. பெரியவர்களின் பிரச்சனைகள் சிறார் உலகை எப்படி பாதிக்கின்றன என்பதையே உலகெங்கும் குழந்தைகள் திரைப்படங்கள் பேசுகின்றன.

இந்தியா போன்ற கதைகளின் தாயகத்தில் குழந்தைகளின் விநோத கற்பனைகளை விவரிக்கும் கதைகள் ஏராளம் இருக்கின்றன.

குறிப்பாக நாட்டுபுறக் கதைகள், தேவதைக் கதைகள், அமானுஷ்யக் கதைகள், நாடோடிக் கதைகள் போன்றவை இன்றும் குழந்தைகளால் விரும்பிப் படிக்கபடுகின்றன.

ஆனால், இவற்றை மையமாகக் கொண்டு வெகு குறைவான படங்களே இந்தியாவில் வெளியாகி உள்ளன.

நமது குழந்தைகள் பார்த்து ரசிக்கும் படங்களில் எண்பது சதவீதம் ஹாலிவுட் தயாரிப்புகளே.

அதிலும் குறிப்பாக வால்ட் டிஸ்னி மற்றும் பிக்சார் தயாரிப்பில் உருவான அனிமேஷன் படங்களே.

ஜப்பானிய அனிமேஷன் படங்கள் கூட நமது குழந்தைகளுக்கு அறிமுகமாகவில்லை.

உண்மையில் அமெரிக்க அனிமேஷன் படங்களை விட பலமடங்கு சிறப்பானது ஜப்பானிய அனிமேஷன் படங்கள்.

குறிப்பாக மியாஷகியின் படங்களைச் சொல்வேன். அவற்றை நமது குழந்தைகள் திரை அரங்குகளில் பார்ப்பதற்கு எந்த வசதியும் இதுவரை செய்யப்படவில்லை.

இந்திய சினிமா சந்தையை ஏகபோகமாக அமெரிக்கா முடக்கி வைத்திருப்பதே இதற்கான முக்கிய காரணம்.

தமிழ்த் திரைப்படங்கள் வணிகநோக்கங்களை மட்டுமே பிரதானமாக கொள்வதால் குழந்தைகளை யதார்த்தமாக சித்தரிக்கும் கலைப்படங்கள் கவனிக்கபடவேயில்லை.

இந்தியாவின் மற்றமொழி திரைப்படங்களுக்கும் தமிழுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, அங்கே கலைப்படங்களுக்கு என தனியே இயக்குனர்களும், பார்வையாளர்களும் இருக்கிறார்கள்.

அரசே முன்வந்து இது போன்ற படங்களை நிதி உதவி அளிக்கிறது, படங்களை வெளியிட சிறப்பு மானியம் தருகிறது, சிறிய முதலீட்டில் வெளியான குழந்தைகள் திரைப்படங்கள் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளுகின்றன, தமிழில் அந்தச் சாளரம் திறக்கப்படவேயில்லை,

இந்தச் சூழலில் கடந்த நூறு வருஷங்களில் இந்திய அளவில் வந்த குழந்தைகள் படங்களில் சிறந்தவற்றை அறிய முற்பட்டால் நாம் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை, குழந்தைகள் படங்களைத் திரையிடுவதற்கு என தனி அரங்குகளோ, திரைப்பட விழாக்களோ நம்மிடமில்லை என்பதே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கியமான குழந்தைகள் படங்கள் பலவும் திரை அரங்குகளில் வெளியாகவில்லை, அவை மிகச்சிறிய வட்டம் ஒன்றுக்குள் காட்டப்பட்டு பெட்டிக்குள் முடங்கிப்போயின.

இந்திய சினிமாவில் அனிமேஷன் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை, ஆரம்ப முயற்சிகள் மட்டுமே இங்கு நடைபெற்றுள்ளன.

அவதார், லார்ட் ஆப் தி ரிங்ஸ், ஹாரி போட்டர், நார்னியா போன்ற படங்களின் தொழில்நுட்ப சாத்தியங்களைக் காணும்போது குழந்தைகளுக்கான சிறந்த படங்களை இந்த தொழில்நுட்பம் வழியே நாம் எளிதாக சாதிக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் அதற்கான முனைப்புகள் நம்மிடம் குறைவாக உள்ளன

இந்திய அளவில் குழந்தைகளுக்கான திரைப்படங்களை உருவாக்குவதற்கு என தனியே சிஎப்சி என்ற திரைப்பட வளர்ச்சி கழகம் உள்ளது. அவர்கள் ஆண்டுதோறும நிதி உதவி செய்து குழந்தைகள் படங்களை உருவாக்குகிறார்கள். சென்னையிலும் அவர்களுக்கு அலுவலகம் இருக்கிறது, அப்படி இருந்தும் ஏன் தமிழில் குழந்தைகள் படங்கள் எடுக்கப்படவில்லை என்பது புதிராகவே உள்ளது

இன்று புதிது புதிதாக மல்டிபிளெக்ஸ் அரங்குகள் வந்துள்ள சூழலில் சிறிய அரங்கிற்கான திரைப்படங்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் குழந்தைகளுக்கான படங்கள் தரமானதாக உருவாக்கபட்டால் அவை பெரும் வெற்றியை பெறும் என்றே தோன்றுகிறது. அதற்கு ஒரு உதாரணம் சமீபமாக மராத்தியில் வெளியாகி வரும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள்.

இந்திய அளவில் குழந்தைகளை யதார்த்தமாக சினிமாவில் காட்டிய முக்கிய இயக்குனர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களாலும் கூட முழுமையாக குழந்தைகளுக்கு என முழுநீளபடத்தை உருவாக்க முடியவில்லை. காரணம் வணிக சந்தையின் கெடுபிடியான நிர்பந்தம்.

இன்று வரை நாம் குழந்தைகளை நமது விருப்பங்களின் வடிகாலாக மட்டுமே கருதுவதால் அவர்களுக்கு என தனியான புத்தகங்கள், நூலகங்கள், திரை அரங்குகள், திரைப்படங்கள், நாடகங்கள், என எதையும் உருவாக்கி தர மறுக்கிறோம், அந்த நிலையின் இன்னொரு வடிவமே குழந்தைகளுக்கான திரைப்படங்களை நாம் ஒதுக்கி வைத்திருப்பது.

ஈரானிய சினிமாவைப் பார்க்கையில் குழந்தைகளுக்காக அவர்கள் எவ்வளவு தரமான படங்களை உருவாக்குகிறார்கள் என்று வியப்பாக உள்ளது. இதுபோலவே ஜப்பான், கொரியா, சீனமொழியிலும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நிறைய வெளியாகின்றன.

ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள் ஹாலிவுட் படங்களை விட நூறு மடங்கு வசூலிலும் வெற்றி பெறுகின்றன. அந்த சந்தையை நாம் இன்னமும் பயன்படுத்திக் கொள்ளவேயில்லை.

குழந்தைகள் சினிமாவில் மிக முக்கியமான பத்து படங்கள் என நான் கருதும் படங்கள் என் ரசனையில் மதிப்பிடப்பட்டவை, இவற்றிற்கு வெளியிலும் தரமான படங்கள் நான் காணாமலே இருக்கக்கூடும், நான் பார்த்து ரசித்த படங்களில் என் நினைவில் பசுமையாக உள்ள படங்களே இவை.

1) நீலக்குடை – Nellakudai : 

விஷால் பரத்வாஜ் இயக்கிய ஹிந்தி திரைப்படம். சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் பவர்ரேஞ்சர் என்று பிம்பங்களின் பின்னால் செல்லும் குழந்தைகளுக்கு அவசியம் அறிமுகம் செய்ய வேண்டிய படமிது.

2) கும்மாட்டி -Kummatty :

மறைந்த மலையாள இயக்குனர் அரவிந்தனின் படம், அரவிந்தன் கலை நேர்த்தி மிக்க படங்களை இயக்கியவர், இவரது படங்களில் யதார்த்தமும் மிகை கற்பனையும் தனித்து பிரிக்கமுடியாதபடி இழையோடி இருக்கும், கும்மாட்டியும் அப்படி ஒரு கதை இது சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது.

3) கூபி கானே பாகே பாய்னே – Goopy Gyne Bagha Byne :

சத்யஜித்ரே குழந்தைகளுக்காக உருவாக்கிய படமிது, ரேயின் தாத்தா குழந்தைகளுக்காக சந்தேஷ் என்ற இதழை நடத்தி வந்தார், அந்த இதழின் ஆசிரியராக பொறுப்பு ஏற்ற சத்யஜித்ரே குழந்தைகளுக்காக நிறைய கதைகள் எழுதியிருக்கிறார், அதில் பெலுடா சீரியஸ் எனப்படும் துப்பறியும் கதைகள் முக்கியமானவை, இந்த படத்தின் கதை ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ராய் எழுதியது,

சாகசத்துடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் சத்யஜித் ரே, கூபி கானேயின் சிறப்பு தேர்ந்த இசை மற்றும் துள்ளல் நடனம், வேடிக்கையான உரையாடல்கள், நாட்டுபுற கதையின் மரபில் அமைந்த இக்கதையை ரே அழகாக படமாக்கியிருக்கிறார்

4) டோரா Tora – Jahnu Barua :

அஸ்ஸாமிய மொழி படம், இயக்கியவர் ஜானு பரூவா, அஸ்ஸாமிய மொழியில் மிக்குறைவான திரைப்படங்களே தயாரிக்கபடுகின்றன, அஸ்ஸாமியரான ஜானு பரூவா பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்றவர், அவர் எடுத்த படங்கள் தேசிய அளவிலும் பன்னாட்டு திரைப்பட விழாக்களிலும் முக்கிய விருதுகளை பெற்றிருக்கின்றனஒரு துண்டு நிலத்திற்காக அடித்துக் கொள்ளும் பெரியவர்கள் ஒரு பக்கம், மறுபக்கம் அன்போடு பழகும் இரண்டு வீட்டு பிள்ளைகள், இந்த முரண்பாட்டின் வழியே குழந்தைகள் எப்படி பெரியவர்களின் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள் என்பதை படம் அழகாக வெளிப்படுத்துகிறது,

5) ஷாவாஸ் – Shwaas :

மராத்தி படம், 2004-ல் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படமிது, படத்தை இயக்கியவர் சந்தீப் சாவந்த். முப்பது நாட்களில் படமாக்கபட்டது அன்பும் அக்கறையும், நெகிழ்ச்சியும் கலந்த உறவே படத்தினை உன்னதமான அனுபவமாக மாற்றுகிறது, ஷாவாஸ் சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறது

6) தாரே ஜமீன் பர், –Taare Zameen Par :

அமீர்கான் இயக்கியது, 2007ல் வெளியான திரைப்படமிது. இஷான் என்ற எட்டுவயதுச் சிறுவனின் அகஉலகை மிக உண்மையாக, நுட்பமாக இப்படம் சித்தரித்துள்ளது.

பிரபல ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசேவா பள்ளி நாட்களில் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தையாக இருந்திருக்கிறார், அவருக்குப் பள்ளியில் நடத்தப்படும் பாடங்கள் எதுவும் புரியாது, ஒவியம் வரைவதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார். இந்த சம்பவமே தாரே ஜமீன்பர் கதைக்கு ஆதாரக் கரு.

இதை மையமாகக் கொண்டு டிஸ்லெக்சியாவால் பாதிக்கபட்ட குழந்தைகள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது, இஷான் என்ற சிறுவன் கற்பனைத் திறன் மிக்கவன், அவனுக்கு ஒவியம் தான் உலகம், அவனை முட்டாள் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிகாசம் செய்கிறார்கள், அவனது திறமையைப் புரிந்து கொண்ட அவனது ஆசிரியர் எப்படி அவனை உற்சாகப்படுத்தி ஒவியத்திறமை வழியே சாதிக்க வைக்கிறார் என்பதை நெகிழ்ச்சியோடு சொன்னபடமிது, குழந்தையின் கண்கள் வழியாகவே உலகம் படமாக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்,

7) மைடியர் குட்டிசாத்தான், –My Dear Kuttichathan :

ஜிஜோ புன்னோஸ் இயக்கிய மலையாளப்படமிது, இது முதல் 3டி படமாகும், நவோதயா அப்பச்சன் தயாரிப்பில் உருவான இப்படம் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்ற ஒன்று, வழக்கமான பொழுது போக்கு அம்சங்கள் பிரதானமாக இருந்தபோது இது குழந்தைகளின் கற்பனை உலகை நேர்த்தியாக விவரித்து இருந்தது, குட்டிசாத்தான் கதாபாத்திரமும், அது செய்யும் மாயங்களும் முப்பரிமாணம் மூலம் திரையில் காணும் போது குழந்தைகள் அதிக சந்தோஷம் அடைந்தார்கள் அசோக்குமார் படத்தினை சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்,

8) மல்லி -Malli :

சந்தோஷ் சிவன் இயக்கிய தமிழ் திரைப்படம், 1998ல் வெளியானது,ஒரு சிறுமியின் கனவை கவித்துவமாக காட்சிபடுத்தியிருக்கிறது, இரண்டு தேசிய விருதுகளுடன் பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை பெற்றுள்ள சிறந்த படமிது

9) Baaja –A K Bir :

ஏகே பீர் இயக்கிய இப்படம் 2002 ல் வெளியானது, படத்தலைப்பின் பொருள் மவுத் ஆர்கன்.தனது செருப்புக்கடைக்கு உதவி ஆளாக சிபுவை அழைத்துக் கொண்டு போய் கூட வேலை பார்க்க வைக்கிறார் மாமா, இங்கே அவன் ஒரு எதிர்கொள்ளும் உலகம் தான் ஒரு சிறுவன் மட்டுமே என்பதை முழுமையாக உணர வைக்கிறது, ஏ கே பீர் இந்தியாவின் மிகசிறந்த ஒளிப்பதிவாளர், பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்றவர், பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர், இந்த படத்தின் சிறப்பு கவித்துவமாக அழகுடன் உருவாக்கபட்டிருப்பதாகும்

10) கர்மாதி கோட் – Karamati Coat :

1993. அஜய் கார்த்திக் டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர், அவர் ஹிந்தியில் இயக்கிய குழந்தைகள் படமிது, பிராங்பெர்ட் திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது,சாலையோரச் சிறுவர்களின் உலகையும், பணம் கிடைத்தவுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அழகாக சித்தரிக்கபட்டுள்ளன, எல்லா சிறுவர்களுக்கும் உள்ள ஒரு ஆசையை படமாக்கி நல்ல பாடம் ஒன்றினை கற்றுதருவதே இப்படத்தின் சிறப்பு

இந்திய அளவில் குழந்தைகளுக்கான சிறந்த படங்களை போல உலக அளவில் எனக்கு விருப்பமான குழந்தைகள் படங்களில் முக்கியமானவை இவையே.

1) RED BALLOON .

2) MY LIFE AS A DOG

3) CHILDREN OF HEAVEN

4) CHARLIE AND THE CHOCOLATE FACTORY

5) MODERN TIMES

6) VIVA CUBA

7) PRINCESS MONO NOKE

8) WIZARD OF OZ

9) NOT ONE LESS

10) NOBODY KNOWS, JAPAN.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் The Red Balloon, Children of Heaven, Fly Away Home சிறார்களுக்கான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. திரையிடலுக்குப் பிறகு படம் குறித்த உரையாடல்களும் நடைபெற்றன. படம்பார்த்த சிறார்களும் பெற்றோர்களும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பையும் வழங்கிவருகிறார்கள். பேராசிரியர் பிரபாகர் அய்யா திரைப்படங்களை காணும் கலையை இந்த உரையாடல்கள் வாயிலாக கற்றுக்கொடுப்பதாக உணர்கிறேன்.

The Red Balloon

1956-ல் எடுக்கப்பட்ட The Red Balloon படத்தை முதன்முதலாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்த்தேன். அந்தக்காலத்திலேயே இவ்வளவு அற்புதமாக படம் எடுத்திருக்கிறார்களே என்று எண்ணி வியந்தேன்.

Albert Lamorisse இயக்கிய படம். அவருடைய மகன்தான் படத்தில் வரும் சிறுவன். ஒரு கம்பத்தில் சிக்கியுள்ள பலூனை எடுக்கும் சிறுவன் அந்த பலூனை தன் கூடவே வைத்துக்கொண்டு அலைகிறான். அவனது அன்பில் அந்த பலூனும் இணைந்து அவன் கூடவே திரிகிறது. பலூனோடு அந்தப் பையன் உரையாடுவதும் அதைக்கேட்டு அந்த பலூன் நடந்துகொள்வதும் சிறப்பு. அந்த பலூன் அவனோடு ஒளிந்து பிடித்தெல்லாம் விளையாடுகிறது. அந்த ஊரிலுள்ள மற்ற சிறுவர்கள் பொறாமையோடு சிகப்பு பலூனைத் தாக்குகிறார்கள். அந்தப் பையன் பலூன் உடைந்த சோகத்திலிருக்கும்போது ஊரிலுள்ள எல்லா பலூன்களும் சேர்ந்து வந்த அந்தப் பையனைத் தூக்கிச் செல்லும் காட்சி கவிதை.

Children of Heaven

ஆனந்தவிகடனில் செழியன் எழுதியபோது Children of Heaven படம் பற்றி எழுதியிருந்ததை வாசித்து பின்னால் அந்தப் படத்தை பார்த்தேன். Majid Majidi இயக்கிய மிக அற்புதமான படம்.

கடந்தாண்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அந்த திரைப்படத்தை மீண்டுமொருமுறை பார்த்தபோது இன்னும் பல காட்சிகள் மனதைக் கவர்ந்தன. குறிப்பாக இலந்தை அடைதின்னும் சிறுமி என்னை பால்ய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றாள். ஏழ்மையான குடும்பத்தின் அன்றாட வாழ்வை அழகாகப் பதிவு செய்த படம். அண்ணன் தங்கை இடையிலான அன்பை மிக எதார்த்தமாகப் பதிவு செய்த படம். இந்தப் படம் குறித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு நன்றி.

Fly Away Home

Carroll Ballard இயக்கிய Fly Away Home தாயை இழந்த மகளை ஆற்றுப்படுத்தும் தந்தையின் அன்பை, வாத்துகளை தாய்போல பார்த்துக் கொள்ளும் சிறுமி – பின்னாளில் தந்தை மேல் கொள்ளும் பாசம், பறக்கும் சிறிய கிளைடர் விமானம் மூலம் பறவைகளை வலசைக்கு அழைத்துச் செல்லும் காட்சி என ஏராளமான சிறப்புகள். படம் பார்க்கும் நாமும் சேர்ந்து பறக்கும் அனுபவத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த மூன்று படங்களையும் என் மகள் மதுராவோடு சென்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பார்க்க முடிந்தது. நாம் தொலைக்காட்சிகளில் அன்றாடம் காணும் திரைப்படங்களிலிருந்து இந்தப் படங்கள் மாறுபட்டிருப்பதைக் குறித்து மதுராவோடு தொடர்ந்து உரையாடி வருகிறேன்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் சிறுவர்களுக்கான நிகழ்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்திவருகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி.

உலகெங்கும் குழந்தைகள் திரைப்படங்கள் மற்றும் மாற்று சினிமா முயற்சிகளுக்காக பிரத்யேக திரைஅரங்குகள் அரசின் உதவியோடு கட்டப்பட்டுள்ளன, அங்கே வழக்கமான வணிகத் திரைப்படங்கள் ஒரு போதும் திரையிடப்படுவதில்லை. அதற்கு மாறாக குறும்படங்கள், ஆவணப்படங்கள் குழந்தைகள் படங்கள், நாடகங்கள், மற்றும் மாற்றுகலைவடிவங்களுக்கான அரங்கமாக அது செயல்படுகிறது.

அப்படியான மாற்று கலைஅரங்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் உருவாக்கபடுதல் அவசியம். அப்போது தான் குறைந்த முதலீட்டில் தயாரிக்கபடும் குழந்தைகள் படங்கள் மக்களைச் சென்றடைய முடியும்.

இல்லாவிட்டால் வணிக சந்தை எனும் சுறாமீனின் அகன்ற வாய்க்குள் மாட்டிக் கொண்டு குழந்தைகள் திரைப்படங்கள் விழுங்கபட்டுவிடும்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணி குழந்தைகளுக்கான பிரத்யேகப் படங்களையும், சிறிய திரை அரங்குகளையும் உருவாக்குவதாகும்.

கல்விநிலையங்களில் சினிமாவை ஒரு கலையாக கற்பிப்பது இன்னொரு முக்கியமான பணி.

இன்றுள்ள டிஜிட்டில் தொழில்நுட்பத்தை கொண்டு குறைந்தசெலவில் தரமான குழந்தைகள் படங்களை உருவாக்க ஆர்வமான இளைஞர்கள் முன்வர வேண்டும்.

பேட்மேனுக்கும் ஸ்பைடர்மேனுக்கும் மாற்றாக ஒரு சினிமாவை நாம் உருவாக்க வேண்டும் என்பதே இன்று நம் முன்னுள்ள சவால், அதை சாதிக்க வேண்டிய பொறுப்பு நல்ல சினிமா மீது நம்பிக்கை கொண்ட அனைவரது கையிலுமேயிருக்கிறது.

நன்றி :  குவிகம்

#neelakudihindimovie #vishalbhardwaj #கும்மாட்டி #Kummatty #கூபிகானேபாகேபாய்னே #GoopyGyneBaghaByne #டோரா #Tora #SatyajitRay #சத்யஜித்ரே #ஷாவாஸ் #Shwaas #தாரேஜமீன்பர் #TaareZameenPar #அமீர்கான் #AamirKhan #மைடியர்குட்டிசாத்தான் #MyDearKuttichathan #ஜிஜோபுன்னோஸ் #JijoPunnoose #malli #SantoshSivan #மல்லி #சந்தோஷ்_சிவன் #Baaja #AKBir #ஏகேபீர் #கர்மாதிகோட் #KaramatiCoat #AjayKartik #TheRedBalloon #AlbertLamorisse #ChildrenofHeaven #FlyAwayHome #எஸ்ரா #sra #sramakrishanan #writersra #writersramakrishnan #எழுத்தாளர்எஸ்ராமகிருஷ்ணன் #எழுத்தாளர்எஸ்ரா

Comments (0)
Add Comment