ஜூலை 28 – உலக இயற்கை பாதுகாப்பு தினம்
இயற்கை என்பது தாயின் உச்ச வடிவம். எந்த தாய்க்கும் தமது மக்களின் நலனே முதற்சிந்தனையாக இருக்கும். எத்தனைதான் குழந்தைகள் பழித்தாலும் புறந்தள்ளினாலும் எந்தத் தாயும் சிரித்த முகத்துடன் அவற்றை எதிர்கொள்வார். எத்தகைய மோசமான சூழலிலும் அவர்களை அரவணைத்துக் காத்திடுவார்.
ஆனால், தாய்மை உணர்வை மரத்துப்போகச் செய்கிற, மரணிக்க வைக்கிற செய்கைகளைக் கண்டால் அதே தாய் ரௌத்திரம் கொள்வார். இயற்கை அன்னையும் அப்படித்தான்.
அதனை உணர்ந்ததாலேயே, முன்னோர்கள் இயற்கையைப் போற்றினர். தமது வாழ்வை அதற்கு ஒப்புக் கொடுத்தனர். ‘நீயின்றி நானில்லை’ எனும்படியாக ஒன்றாகக் கலப்பதைத் தமது வாழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் அதையே கற்றுக்கொடுத்துவிட்டுச் சென்றனர்.
சமீபகாலமாக, அந்தக் கற்றலில் தொய்வு விழுந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால், இயற்கையோடு இருக்கிற பிணைப்பைத் துண்டிக்கிற பணிகள் நிகழ்ந்து வருகின்றன.
பெருமரத்தின் கிளையொன்றில் அமர்ந்துகொண்டு, அந்தக் கிளையின் இணைப்பைக் கிள்ளியெறிவதை நாம் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறோம். அந்த குழந்தைத்தனத்தை எத்தனை நாள்தான் இயற்கை அன்னை பொறுத்துக் கொள்வார்?
எத்தனையெத்தனை வளங்கள்!
காற்று, சூரிய ஒளி, நீர், மண், அதிலிருக்கும் தாதுக்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு உட்படப் பல வளங்கள் இந்த பூமியில் நிறைந்திருக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கை நீரும் ஒரு பங்கு நிலத்தில் எத்தனையோ தாவரங்களும் விலங்குகளும் இதர உயிரினங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், மேற்சொன்ன வளங்களில் பெரும்பாலானவற்றைத் துய்ப்பது மனித இனம் மட்டுமே.
2037-ம் ஆண்டில் பூமியில் மக்கள் தொகை 900 கோடியைத் தொட்டுவிடும் என்கிறது ஒரு கணிப்பு. இந்த மக்கள் அனைவரும் இயற்கை வளங்களைத் துய்க்க முற்படும்போது என்ன ஆகும்?
இப்போது நாம் நீரைப் பயன்படுத்துகிற வேகத்தைத் தொடர்ந்தால், 2050-ல் பூமியே நீரின்றி வற்றிவிடும் என்கிறது ஒரு ஆய்வு. அந்த முடிவு நமக்கு மிகையாகத் தெரியலாம்.
ஆனால், அப்படியொரு நிலை அருகாமையில் இருப்பதை மறந்துவிட முடியாது. காரணம், மனித இனத்தின் பேராசைமிக்க செயல்பாடுகள் தான்.
காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம் நசிவு, காடுகள் அழிப்பு, மாசுறதல், இதர உயிரினங்களின் வாழ்விடங்களைச் சிதைத்தல் என்று பல காரியங்கள் ‘மனித குல வளர்ச்சி’ என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
என்னதான் நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியோடு நாம் இயைந்து செல்ல வேண்டியது அவசியம் என்றாலும், அதற்கென்று ஒரு எல்லைக்கோடு இருப்பதை மறந்துவிடக் கூடாது.
சட்டியில் இருப்பதை முழுவதும் வழித்துவிட்டால், வளம் என்பது வற்றிப் போய்விடும். அதனை உணர்ந்து, சுயநலமாகவாவது இயற்கையைக் காத்திடும் செயல்களில் இறங்கிடுவது அவசியம்.
இயற்கையை நேசிப்போம்!
மண் அரிப்பைத் தடுக்க மரம் நடுவது, பொருட்களின் மறுசுழற்சியை ஊக்குவித்து மறுபயன்பாட்டைப் பெருக்குவது, போக்குவரத்து செயல்பாடுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, தேவையற்ற வகையில் மின்சாரம் செலவழிவதைத் தடுப்பது, இயற்கைக்கு கேடு விளைவிக்கிற பொருட்கள் சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்துவது என்று பலவற்றைக் கைக்கொள்வதன் மூலமாக இயற்கையைக் காக்கிற செயல்பாடுகளில் இணையலாம்.
முதற்கட்டமாக நாம் அன்றாடம் பயன்படுத்துகிற உணவு, நீர், உடை ஆகியவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம். தேவைக்கு அதிகமாகத் துய்ப்பதைக் குறைக்கத் தொடங்கினாலே பல விஷயங்கள் கட்டுக்குள் வரும்.
உறைவிடத்தைப் பொறுத்தவரை அத்தியாவசியம் என்ற வகையில் ஒரு தங்குமிடம் போதும் என்ற நிலைப்பாட்டை எட்டினால், பல அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை தானாகச் சரியும்.
இன்னும் தேவையற்ற தொழில்நுட்பங்கள் என்று எவற்றைக் கருதுகிறோமோ, அவற்றையெல்லாம் தவிர்க்கலாம். ‘எல்லாம் எனக்கு, முதலில் எனக்கு’ என்ற எண்ணத்தோடு இந்த உலகை நோக்குவதை மாற்றிக் கொள்வது இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும்.
நமது மனநிலையில், தினசரிச் செயல்பாட்டில் கொண்டு வருகிற மாற்றங்கள் காலம்காலமாகத் தொடர, அது தொடர்பான விளக்கங்களையும் விழிப்புணர்வையும் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஊட்ட வேண்டும்.
மிக முக்கியமாக, இயற்கையை நேசிக்கக் கற்றுத் தர வேண்டும். வளர்ப்பு விலங்குகளைக் கொஞ்சிக் குலாவுகிற குழந்தைகளுக்கு, ‘நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுவே திரும்பக் கிடைக்கும்’ என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
சக மனிதர்கள் உடனான உறவும் அன்பும் எவ்வளவு முக்கியம் என்று தெரியப்படுத்துகிறோமோ, அதற்கிணையாகச் சுற்றியிருக்கும் இதர உயிரினங்களும் தாவரங்களும் பிரபஞ்ச வெளியும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் என்று உணர வைக்க வேண்டும்.
அதற்காகவே, ‘உலக இயற்கை பாதுகாப்பு தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28-ம் தேதியன்று பின்பற்றப்படுகிறது. அந்த ஒரு தினம் மட்டுமே அதனை நாம் மனதில் கொள்ள வேண்டுமென்பதில்லை.
ஆண்டு முழுக்க இயற்கையைக் காக்க வேண்டுமென்கிற உணர்வை மனதில் சுமந்தால், அதற்கான கொண்டாட்டமாக அத்தினம் அமையும்.
அப்படியொரு கொண்டாட்டத்தை நிகழ்த்த, இந்த பூமியில் இருக்கிற வளங்களைப் பேணி அடுத்த தலைமுறைக்கு வழங்கிட, அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திட, நாம் இப்போதே இயற்கையைக் காக்கிற கடமையைக் கைக்கொள்வோம்..
மாபா