அம்மா அப்பா துணை..!

ஜூலை 27 – பெற்றோர் தினம்

’உள்ளே குழந்தைங்க இருக்காங்க’, ‘இது என் மாமியார் கிப்ட்’, ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்பது போன்ற விதவிதமான வாக்கியங்களைக் கார் அல்லது இதர நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பதைப் பார்க்க முடியும்.

அதேநேரத்தில், வாகன முகப்பில் உள்ள வாசகங்களில் பெரும்பாலானவை பவ்யத்துடன் பக்தியுடனும் எழுதப்பட்டவையாக இருக்கும். வாகன உரிமையாளரது நம்பிக்கைகளை, எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

தான் வணங்குகிற கடவுளின் பெயரை அந்த இடத்தில் குறிப்பிடுவதே பலரது வழக்கமாக இருந்து வருகிறது. சிலர் கவன ஈர்ப்புக்காக ஏதேதோ வார்த்தைகளைக் கண்கவர் வடிவத்தில் நிறைப்பார்கள்.

மிகச்சிலர் அதில் ‘அம்மா அப்பா துணை’ என்று எழுதியிருப்பார்கள். அவர்கள் அனைவருமே ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்ற வணங்குதல் வரிசையைப் போற்றுபவர்கள்.

பெற்றோரின் பங்களிப்பு

சமூகத்தில் ஒருவர் சிறந்த மனிதராக விளங்குவதற்குச் சூழலும் சம்பந்தப்பட்டவரின் மனநிலையும் சுமூகமாக இருக்க வேண்டும். குழந்தைப்பருவத்தில் அதனை ஏற்படுத்தித் தருகிற பங்கு பெற்றோரையே சாரும்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், ‘எப்படி குழந்தைகளை வளர்க்கணும் தெரியுமா’ என்று யாராவது ‘கிளாஸ்’ எடுத்தால் ‘போய்யா உன் வேலைய பார்த்துக்கிட்டு’ என்று மக்கள் தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றிருப்பார்கள்.

இன்றோ, அப்படி ஏதாவது கட்டுரை அல்லது வீடியோ வெளியானால் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்கிற கூட்டம் பெருகியிருக்கிறது.

என்ன செய்தால், ‘நல்ல பெற்றோர்’ எனப் பெயர் வாங்கலாம் என்பது பலரது தவிப்பாக இருக்கிறது. ‘நாம நல்லாதான் குழந்தைய வளர்க்கிறோமா’ என்று தங்களைத் தாங்களே அளவிடத் தெரியாமல் சிலர் முழிக்கின்றனர்.

தாங்கள் தான் ‘சிறந்த பெற்றோர்கள்’ என்ற மிதப்பில் திரிகிற இன்னும் சிலர், அதனை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் அப்படைப்புகளைக் காண முயல்கின்றனர்.

ஆனால், முந்தைய தலைமுறை பெற்றோர்கள் இவை எவற்றையும் அறியாமல்தான் நம்மை வளர்த்து ஆளாக்கியிருக்கின்றனர்.

‘ஒழுங்கா படி’, ‘ஒழுக்கமா இருந்தாதான் முன்னேற முடியும்’, ‘நாலு பேர்கிட்ட நல்லா பழக கத்துக்கிட்டாதான் ஆச்சு’, ‘என்ன பேசத் தெரியாம பேசிக்கிட்டு இருக்குற’, ‘எங்க பணியணும், எங்க நிமிரணும்னு தெரிஞ்சுக்கிட்டாதான் வாழ்க்கை பிடிபடும்’, ‘எல்லோரையும் நம்புறதும் தப்பு, யாரையுமே நம்ப மாட்டேனு இருக்கறதும் தப்பு’, ‘எப்பவும் சந்தோஷமா இருக்க கத்துக்கணும்’ என்று விதவிதமான ‘ஆலோசனைகளை’ப் பேச்சுவாக்கில் சொல்லிச் சென்றனர்.

குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பது, பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை உறுதிப்படுத்துவது, சமூகப் பொறுப்புணர்வோடும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மனநிலையோடும் வளரச் செய்வது, கற்றல் திறன்களை மேம்படுத்தச் செய்வது, அறிவு மட்டுமல்லாமல் புத்திசாலித்தனத்தை வளர்க்க உதவுவது, ஒழுக்கத்தின் மதிப்பை உணர்த்துவது, சுயமரியாதையையும் வாழ்வை எதிர்கொள்கிற திறன்களையும் வார்த்தெடுப்பது, சுயத்தைப் புரிய வைப்பது, மிக முக்கியமாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்கிற நம்பிக்கையை விதைப்பது என்று பல விஷயங்கள் ‘பெற்றோருக்கானதாக’ இன்று முன்வைக்கப்படுகின்றன.

மேற்சொன்னவற்றைப் பாடங்களாகப் போதிக்காமல், போகிற போக்கில் நம்மிடம் விதைத்துச் சென்றிருக்கிறது முந்தைய தலைமுறை.

தியாகத்தைப் போற்றுவோம்..!

குழந்தைகள் நம் தோளின் மீது ஏறி உலகைப் பார்க்க வேண்டும் என்கிற மனப்பாங்கு எக்காலத்திலும் உண்டு. இன்று அது பல மடங்காக அதிகரித்திருக்கிறது. விளைவு, அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்துக் குழந்தைகளை வளர்ப்பது பெருகியிருக்கிறது. அது, எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கிற குணத்தைக் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

மற்றொரு புறம், ‘இது எனது வாழ்க்கை’ என்று குழந்தைகளின், முதியோர்களின் நலன்களை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு தன் இஷ்டம் போல இருக்கிற இளையோர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

இரண்டுக்கும் நடுவே இருக்கிற ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஓரளவுக்கு முந்தைய தலைமுறையின் வெற்றியை எட்ட முடியும். அதற்கான வழிகளைக் கண்டறிந்தால் ‘குழந்தை வளர்ப்பு’ குறித்து பெற்றோர்கள் கவலை கொள்ளத் தேவையிருக்காது.

குழந்தை வளர்ப்பின்போது தொலைக்காட்சி, மொபைல் போன், இணையம் போன்ற எந்த தொழில்நுட்ப வசதிகளையும் தினசரி வாழ்வில் முந்தைய தலைமுறையினர் எதிர்கொள்ளவில்லை.

இன்று, குழந்தைகள் அழுதாலோ அல்லது உணவு சாப்பிடாவிட்டாலோ தொலைக்காட்சி அல்லது மொபைல்போனை காட்டுவது பெரும்பாலானோரின் வழக்கமாக இருந்து வருகிறது.

அது, ‘போலச் செய்தல்’ எனும் காப்பியடிக்கும் வழக்கத்தில் குழப்பங்களைப் புகுத்துகிறது. எந்த விஷயத்தில், யாரைப் பின்பற்றுவது என்ற புரிதல் இல்லாமல் செய்கிறது.

பெற்றோர், சுற்றத்தாரை விட்டு தான் தொலைக்காட்சியில், மொபைல் போனில் பார்க்கிற விஷயங்களைப் பின்பற்ற வைக்கிறது.

குழந்தைகளிடத்தில் பெற்றோர்கள் விதைக்க வேண்டிய அடிப்படையான விஷயங்களை அது அடியோடு சிதைத்துவிடும். அந்த அபாயம் பூதாகரம் ஆவதற்கு முன்னர் பெற்றோர் விழித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித் தான் வளர்ந்த சூழலையும் குழந்தைகளுக்கு அளிக்கிற விஷயங்களையும் ஒப்பிட்டு நோக்குகிற குணத்தைக் கைக்கொண்டாலே ‘நல்ல’ பெற்றோராக மாறலாம். போலவே, ‘சிறப்பான’ பெற்றோராகப் பெருமிதம் கொள்ளும் அளவுக்குக் குழந்தைகளின் இயல்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இதுபோன்ற காலமாற்றத்தினால் விளைந்த குறைபாடுகளைத் தாண்டி, இன்றும் பல பெற்றோர்கள் ‘சிறப்பான வாழ்வை’த் தமது சந்ததிக்கு அளிக்கத் தம்மால் ஆனதைச் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகளைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ‘பெற்றோர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, 1994-ல் அங்கு ‘பெற்றோர் தினம்’ கொண்டாடுவதற்குத் துணை நின்றிருக்கிறார். பெற்றோரின் பங்களிப்பை ஒவ்வொரு குழந்தையும் உணர வேண்டும் என்பதே அவரது அவா. இன்று, அது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இது அனுசரிக்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளைப் பார்த்து ‘தந்தையர் தினம்’, ‘அன்னையர் தினம்’ கொண்டாடிய நாம், இன்று ‘பெற்றோர் தினம்’ கொண்டாடுகிறோம்.

உண்மையைச் சொன்னால், பெற்றோரின் பங்களிப்பு குழந்தை வளர்ப்பில் எத்தனை முக்கியமானது என்பதை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நாம் காண முடியும். பல வேறுபாடுகளை மீறிக் குழந்தை வளர்ப்பில் ஒரே மாதிரியான அடிப்படைத் தன்மை இருப்பதை உணர முடியும்.

அதனாலேயே, இங்கு தாய், தந்தையரை வாழும் தெய்வங்களாகப் போற்றுகிற குணம் தொடர்ந்து வருகிறது.

குழந்தைகள் ஏதேதோ கற்றுக்கொள்ள வேண்டும் நாம் ஆசைப்படுகிறோம். அதற்கான முன்னதாக, ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பதைச் சொல்லித் தர வேண்டும்.

அதுவே, அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது ‘இந்த வாழ்வினைக் கொடுத்த தாய், தந்தைக்கு நன்றி’ என்று தினமும் காலையிலோ, இரவிலோ பிரார்த்தனை செய்கிற இயல்பைத் தானே உருவாக்கும்.

இன்று நாம் கொண்டாடுகிற பண்டிகைகளில் பல ‘நன்றி’ சொல்வதற்கானவை. அந்த வகையில், ‘அப்பா அம்மா துணை’ என்ற வார்த்தைகளைச் சொல்லித் தம்மைக் குழந்தைகள் கொண்டாடுவதற்கு ஏதுவாகச் சிறப்பான ‘வாழ்தலை’ அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம். பின்னாட்களில் அவர்கள் ‘பெற்றோர் தினம்’ கொண்டாடத் துணை நிற்போம்..!

மாபா

Comments (0)
Add Comment