மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், எம்.எம். அப்துல்லா, சண்முகம், அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன், பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரது மாநிலங்களவை எம்பி பதவி காலம் நேற்றுடன் (ஜூலை – 24) நிறைவடைந்தது. இதனையடுத்து மாநிலங்களவையில் 6 பேருக்கும் வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய வைகோ, இந்த பெருமைமிகு அவைக்கு 1978ஆம் ஆண்டு என்னை முதன்முதலாக மாநிலங்களவைக்கு அனுப்பியவர் கலைஞர்.
அதைத்தொடர்ந்து 1984, 1990 எனத் தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பினார். அவருக்குப் பிறகு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2019-ம் ஆண்டு என்னை எம்.பி.யாக்கினார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறனால் வார்த்தெடுக்கப்பட்டவன் நான்.
இந்த மாநிலங்களவையில் பல தலைவர்களை எதிர்கொண்டிருக்கிறேன். பல தலைவர்களுடன் பயணித்திருக்கிறேன். 1963ஆம் ஆண்டு, ஏப்ரலில் அண்ணா தனது பாராளுமன்ற உரையில் ‘I belong to Dravidian stock’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அண்ணாவின் அந்த உரை தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களில் இருந்து தனித்துக் காட்டியது. அதைப் பின்தொடர்ந்து இங்கு இருக்கும் என் சக மாநிலங்களவை உறுப்பினர்களும், இனி வருபவர்களும் தமிழ்நாட்டைத் தனித்துவத்துடன் உயர்த்த பாடுபட வேண்டும்.
தமிழீழப் படுகொலைக்கு நீதி கேட்டும், இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் கொடுஞ் செயலை அம்பலப்படுத்தியும் 13 வீர உரைகளை இந்த மாநிலங்களவையில் முழங்கியிருக்கிறேன்.
அதற்காக என் விசா முடக்கப்பட்டது. சிறை சென்றிருக்கிறேன். இன்னும் பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் வலிகள், சோகங்கள் நிறைந்ததாக இருந்தாலும் என்றும் என்வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள்.
நாம் வெற்றி, தோல்வி, துரோகம் எனப் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் துவண்டுவிடக்கூடாது. என்னவானாலும் கடைசிவரை தமிழ் மக்களுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் என் வீர வாளைச் சுழற்றிக் கொண்டேதான் இருப்பேன்” எனக் கூறினார்.