அரசியல் என்பது அதிக செலவுள்ள பொழுதுபோக்கு!

கங்கனா ரணாவத் சலிப்பு

பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த ‘சந்திரமுகி-2’ உள்ளிட்ட எந்த தமிழ்ப் படமும் ஓடவில்லை.

மும்பை சினிமா உலகில் சில சர்ச்சைகளை எதிர்கொண்டார். அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், அரசியலில் சேர வாய்ப்பு வந்தது.

பாரதிய ஜனதா கட்சி கங்கனாவுக்கு தூண்டில் போட்டது. சலுகைகளை மனதில் கொண்டு அவர் பாஜகவில் இணைந்தார்.

கங்கனா ரணாவத்துக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சல பிரதேசம் மாநிலம், மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா, எம்.பி. பதவி, தனக்கு சுமையாக இருப்பதாக சலித்துள்ளார்.

அவரது நேர்காணலின் முக்கிய அம்சங்கள் :

“நான் எம்.பி.,யாகத் தேர்வு செய்யப்பட்டபோது ஆண்டிற்கு 60 முதல் 70 நாட்கள் வேலை பார்த்தால் போதும் என என்னிடம் சொன்னார்கள். ஆனால் அப்படி இல்லை. அதிக வேலைகள் இருக்கிறது.

எம்.பி., பதவி மூலம், எனக்கு வரும் சம்பளம் போதவில்லை. நான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல 300 முதல் 400 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது. அதற்காக லட்சங்களில் செலவு செய்ய வேண்டியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் வாங்கும் சம்பளத்தில் எனது ஓட்டுநர் மற்றும் பிற பணியாளர்களுக்கு வழங்கியது போக எனக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கிறது.

மொத்தத்தில், அரசியல் என்பது அதிக செலவு கொண்ட ஒரு பொழுதுபோக்கு என்பது எனது கருத்து.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறேன். ஆனால் அது வேறு.

நான் எம்.பி.யான பிறகு மக்கள் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளுக்கும் என்னிடம் வருகிறார்கள்.

அவர்கள் எங்களைப் போன்ற எம்.பி.க்களை பார்க்கும்போது, உடைந்த சாலைகள் போன்ற பிரச்னைகளுடன் வருகிறார்கள்.

அது ஒரு மாநில அரசின் பிரச்னை என்று நான் அவர்களிடம் சொன்னால், அவர்கள், ‘உங்களிடம் பணம் இருக்கிறது. உங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி செய்து தாருங்கள்’ என்று கூறுகிறார்கள்” என்று சலிப்புடன் தெரிவித்துள்ளார் பாஜக மக்களவை உறுப்பினர் கங்கனா.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment