‘பாப்புலாரிட்டி’ தரும் மயக்கங்கள்!

பாப்புலாரிட்டி என்பது எந்த அளவுக்கு போதையூட்டக் கூடிய அம்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அன்றாட நடைமுறையில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அரசியலுக்குள் நுழைகிற வரை மிகச் சாதாரணமாக நம்முடன் உட்கார்ந்து டீக்கடையில் சரிசமமாக டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மக்களிடம் கும்பிடுபோட்டு கவுன்சிலராகவோ, எம்.எல்.ஏ-வாகவோ அல்லது அமைச்சராகவோ ஆகிவிட்டால், அதே மக்களிடமிருந்து விலகி கால்கள் மிதக்கும் இன்னொரு உலகத்திற்குப் போய்விடுகிறார்கள்.

தன்னை உயர்த்தி அந்த இடத்தில் அமர வைத்த மக்களிடம் அவர்கள் காட்டும் எதிர்வினையே வேறுவிதமாக மாறிவிடுகிறது. மக்களால் வளர்ந்தவர்கள் அதே மக்களைப் பற்றி கேவலமாகப் பேசும் அளவுக்குப் போய்விடுகிறார்கள்.

அடுத்த தேர்தல் நெருங்கும்வரை அந்த மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலையில், தன்னை மட்டும் பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு நகர்வும் மக்களுக்கு தெரிந்தே நடக்கிறது.

தேர்தலின்போது, எந்த மக்களிடம் கும்பிடுபோட்டு சற்றே வளைந்து வாக்குக் கேட்டார்களோ அதே மக்களிடம் தான் அதிகாரத்திற்கு வந்ததும், வேறு முகம் காட்டுகிறார்கள். அவர்களைப்பற்றி கொச்சையாகவும் பேசுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்த அரசியல்வாதிகளிடம் தென்பட்ட பண்பும், சுற்றியுள்ள மனிதர்கள் மீது கொண்டிருந்த இயல்பான அக்கறையும் தற்போது காணாமல் போய்விட்டிருக்கிறது.

தாங்கள் வகுத்ததே சரி என்கிற பிடிவாதமும் அதிகாரப்பொறுப்புக்கு வந்துவிட்டால், அதிகாரம் சார்ந்த இயல்பாக அவர்களுக்கு வந்துவிடுகிறது.

மிகச்சிலரே, இந்தப் பொது விதிக்கு மாறாக மக்களுடன் முந்தைய இயல்போடு இருக்கிறார்கள். மற்றவர்களோ பொறுப்புக்குப் போனால், கடந்த காலம் மறந்துபோகும் மனநிலைக்கு சற்றென்று வந்துவிடுகிறார்கள்.

அவர்களுக்கு அவர்கள் சிரமப்பட்ட நிலையில் உதவியவர்கள்கூட அவர்கள் நினைவிலிருந்து அகன்றுவிடுகிறது. அரசியலைப் பொறுத்தவரை, இதுதான் எழுதப்படாத பொதுவிதியாக இருக்கிறது.

சினிமாவிலோ அல்லது இசை உலகிலோ அல்லது வேறு எதாவது கலைத்துறையிலோ நுழைந்து தன்னை சிரமப்படுத்தி புகழடைந்தவர்கள்கூட மற்றவர்களுக்கு பெயரோ, முகமோ, தெரியக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்ட பிறகு அவர்களது தோரணையே மாறிவிடுகிறது.

பேசும் மொழியும் கூட. புகழின் உச்சியை அடைந்தவர்கள், தங்களை அபூர்வ அவதாரமாகவே நினைத்துக் கொள்கிறார்கள். தங்களையே ஞானியைப் போல் உணர்ந்தவர்களாக கோவில்களுக்கும் அடர்ந்த மலைப்பிராந்தியங்களுக்கும் அமைதியைத் தேடிப் போகிறார்கள்.

அவர்களது உரையாடலே ஒரு பிரசங்கத்தைப் போல உருமாறிவிடுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பண்ணை வீடுகள் வைத்திருப்பதால் சகல வசதிகளுடன் அங்கு ஓய்வெடுக்கப் போய்விடுகிறார்கள்.

நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், மிகச் சில எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள் என்று புகழைத் தொட்டிருக்கிற பலருக்கும் அவர்களுக்கென்று தனியான அந்தரங்க உலகத்தை வைத்திருக்கிறார்கள்.

அத்தகைய அந்தரங்க உலகில், சில அத்துமீறல்கள் நிகழும்போது, வெளி உலகில் கிசுகிசுவாக பேசவோ, எழுதவோ படுகிறார்கள்.

இதில், விதிவிலக்காக கவியரசர் கண்ணதாசனைப் போன்று தன்னுடைய மேடு பள்ளங்களைப் பற்றி வெளிப்படையாக எழுதியவர்கள் இங்கு குறைவுதான்.

பாப்புலாரிட்டிக்கும் அதே பாப்புலாரிட்டியை உருவாக்கித் தந்த மக்களுக்கும் இடையே ஏன் இந்தப் பிரபலங்கள் இத்தகைய இடைவெளியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்?

சக மனிதர்களிடமிருந்து, ஏன் தன்னை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் புகழின் உச்சிக்கு இந்தப் பிரபலங்கள் போனாலும், தன்னைச் சுற்றியுள்ளவர்களை தன்னை மதித்து உயர வைத்தவர்களை சரிவர மதிப்பிடாமல், மனிதர்களாக நடந்துகொள்ளவில்லை என்றால் ‘பிரபலம்’ என்கின்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை.

– மணா

Comments (0)
Add Comment