வேலைக்குப் போய் சம்பாதிப்பது யாருக்காக?

பறந்து போ திரைப்படத்தை முன்வைத்து

ஊர்சுற்றிக் குறிப்புகள்:

“புகைப்பது உடலுக்குக் கேடு” என்பதையே பார்வையாளர்கள் ரசிக்கத்தக்க விதத்தில் சொல்லியிருக்கிறது ராமின் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’.

படத்தில் சம காலத்திய பல இடைவெளி கலந்த நிகழ்வுகள் நுட்பமாக சொல்லப்பட்டிருக்கின்றன.

பெற்றோர் இருவருமே வேலைக்குப் போய்விடும் நிலையில் வீட்டில் ஒற்றையாய் தனியே இருக்கிற ஒரு சிறுவனின் மனநிலை இதில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதில் வரும் சிறுவன், பூட்டிய வீட்டுக்குள் இருக்கும் நிலையில் தனக்கு பீட்சா டெலிவரி செய்ய வரும் இளைஞரை உரிமையுடன் “ப்ரோ” என்று அழைக்கிறான். அந்த இளைஞரை தன்னுடன் கொஞ்ச நேரம் விளையாடி விட்டுப் போகவும் விருப்பபபடுகிறான்.

என்னதான் பீட்சா, பர்கர், லேப்டாப் என்று நவீன யுகத்திற்கு மாறினாலும் அவனுக்கான குடும்பத்துடன் நெருக்கமில்லாமல் இருக்கிறான்.

வீட்டை விட்டு அப்பாவுடன் வெளியே போகும்போது அவன் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறான்.

அருகில் ஒரு கிராமத்திலுள்ள எளிய குடும்பம் காட்டும் நெருக்கம் அவனுக்குப் பிடித்திருக்கிறது.

கான்கிரீட் வீட்டவிட அந்த எளிமையான வீட்டைச் சுற்றியுள்ள பசுமையான குளம், மலை உள்பட சகலமும் அவனுக்குப் பிடித்திருக்கின்றன.

இதே இந்தவிதமான சூழலைத்தான் தற்போதுள்ள பல குடும்பங்கள் நேரிடையாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

தனது பிள்ளைகளுடன் பேசுவதைவிட செல்போனில் அதிகம் பேசுபவர்களாக மாறிப்போயிருக்கிறார்கள் பெற்றோர்கள்.

செல்போன் என்கின்ற தொழில்நுட்பச் சாதனம் பல குடும்பங்களில் இயல்பாய் நிகழ வேண்டிய உரையாடலை நிகழவிடாமல் தடுத்து விடுகிறது.

வேலைக்குப் போய் சம்பாதிப்பது யாருக்காக என்பது பெற்றோர்கள் பலருக்கு மறந்தே போய்விடுகிறது.

ஒரு கட்டத்தில் தன்னுடன் இருக்கும் உறவுகள் விலகி எங்கேயோ போயிருப்பதை மிகவும் தாமதமாக உணர்ந்து வருத்தப்படுகிறார்கள்.

இந்தவிதமாக உளவியல் சாந்த பல சிக்கல்களையும் சொந்த உறவுகள் வரம்பு மீறி போகின்ற விதத்தையும் ஒருசேர எளிய காட்சிகளின் மூலமும் எளிய வசனங்களின் மூலமாகவும் உணர்த்தியிருக்கிற இயக்குநர் ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

பார்வையாளர்களின் அரங்கு நிறைந்த கூட்டமும் இதை உறுதிசெய்திருக்கிறது.

– மணா

Comments (0)
Add Comment