ஒரு உறவினர் மகள் திருமணம். அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனால் உயர்ந்த பண்புகள் கொண்டவர். ஆகையால் அதற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன்.
அவர் அங்கு சென்றதும் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். என் மகள் திருமணம் இந்த மண்டபத்தில்தான். ஆனால், தாலி கட்டுவது மட்டும் அருகில் இருக்கும் ஒரு கோவில் சந்நிதியில் மூலவருக்கு எதிரே நிகழும். அங்கு நீங்கள் வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்றார்.
அவர் கூறியதை என்னால் மறுக்க இயலவில்லை. எனவே அங்கு சென்றேன். அது ஒரு புராதனமான கோவில்தான். அந்தக் கோவிலில் ஒரே மக்கள் திரள். வாகனம் செல்ல இயலவில்லை.
கடையில் தேநீரை வாங்கிக் கொண்டு வீதியில் நின்று குடித்துக் கொண்டிருந்தனர். குறுகிய சாலை. வாகனப் போக்குவரத்து எந்த ஒழுங்கும் இன்றி நடந்தது. எங்கும் ஒரு ஒழுங்கற்ற நிலை.
கோவிலுக்குள் சென்றேன். அங்கு 22 திருமணத் தம்பதியர்கள் மூலவர் முன் நின்று மங்கள நாண் பூட்ட தயாராக இருந்தனர். அடுத்து திருமணப் பதிவு செய்ய அங்கேயே ஒரு அலுவலகம், அங்கும் கூட்டம். ஒரு பக்கத்தில் அடுத்து சிறார்களுக்கு காது குத்திக் கொண்டிருந்தனர்.
பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க ஒரு கூட்டம். அதையும் தாண்டி ஒரு சிறு கூட்டம், பெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க வந்து இருந்தனர். இந்தக் குழுக்களைத் தாண்டி கோவில் சுவாமி தரிசனத்திற்காக வந்தவர்கள்.
இவர்களையெல்லாம் எவரும் ஒழுங்கு படுத்தவில்லை. இவர்கள் அனைவரும் வந்த குறிக்கோளை சடங்காக நிமிடத்தில் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டேயிருந்தனர் அர்ச்சகர் கூட்டம்.
என்னைக் காரில் அழைத்துச் சென்றவர், கோவில் வாசலில் இறக்கி விட்டுவிட்டு காரை நிறுத்திவிட்டு வருகிறேன் என்று சென்றுவிட்டார்.
அன்று அந்தக் கோவிலில் ஒருவரையொருவர் உரசாமல் இடிக்காமல் செல்ல இயலாது. நான் பாதுகாப்பாக ஓரிடத்தில் நின்று எந்த மணமக்களுக்கு நான் ஆசி வழங்க வேண்டும் என்று மணமக்களைத் தேடினேன். ஒருவழியாகக் கண்டுபிடித்து விட்டேன்.
ஆனால் அங்கு என்னால் செல்ல இயலவில்லை. வெயில் தாளவில்லை. வியர்வை கொட்டுகிறது. புதுமணத் தம்பதிகள் வியர்வையில் நனைந்து உடையுடன் குளித்துவிட்டு வருவதுபோல் வெளியில் வருகின்றனர்.
தம்பதியராக இணைவதற்கு மங்கள நாணைப் பூட்டும் இடத்தில் அட்சதை என்று தட்டுத்தட்டாக மஞ்சள் கலந்த பச்சரிசியை தலையில் போட்டு ஆசீர்வதிப்பதாக நடந்த செயலால் விவசாயியின் கடின உழைப்பால் உருவான அரிசி, காலில் மிதிபடும்போது விவசாயியை போட்டு காலில் மிதிப்பது போன்று எனக்கு ஒரு கூச்ச உணர்வு.
அவர்களைப் பார்ப்பதற்குச் செல்ல ஒருவர் அழைத்துச் சென்றார். எல்லா சிரமங்களையும் தாண்டிச் சென்று அட்சதையைப் போட்டு ஆசீர்வதித்தேன். முடித்ததும் பின் பழைய இடத்திற்கு வந்து விட்டேன். என்னைப்போல் பயந்தவர்கள் சிலர் எனக்குப் பக்கத்தில் வந்து இதில் எப்படி சுவாமி தரிசனம் செய்வது என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.
அங்கு நின்ற சிலரிடம் கேட்டேன். இவ்வளவு கல்யாணம், காதுகுத்து, காப்பு என்று நடக்கிறதே எதற்காக என்றேன். அனைவரின் ஒட்டுமொத்தப் பதிலும் “வேண்டுதல்” என்பதுதான்.
குழந்தை வேண்டும், அடுத்து சாகதப் பொருத்தம் சரியில்லை, திருமணம், முருகன் முன் தாலி கட்டியாகிவிட்டால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, குழந்தை பேச வேண்டும், நன்கு படிக்க வேண்டும் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அங்கு வந்து நிற்கின்றனர்.
அங்கு நடைபெறும் நிகழ்வில் பிரார்த்தனை உணர்விலோ, பக்தி மயக்கத்திலோ, குறைந்தபட்ச சமூக நியதிகளின் அடிப்படையிலோ எந்த நிகழ்வும் நடைபெற்றதாக என்னால் உணர முடியவில்லை.
எல்லாம் ஒரு இயந்திரத்தனம், ஒரு வணிகக் குறிக்கோள் மேலோங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது. எந்த ஒழுங்கையும் எவரும் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள்மேல் நாம் குறைகூறக் கூடாது. அவர்கள் அப்படி வளர்த்தெடுக்கப் பட்டிருக்கின்றார்கள்.
பொது இடத்தில் பொது ஒழுங்கு எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எவருக்கும் கற்றுக் கொடுக்கப்படாததன் விளைவு, எங்கும் அலங்கோலம், குழப்பம். ஆனால், எதோ நடந்து கொண்டிருக்கிறது. எது எப்படி முறைமையாக நடைபெற வேண்டுமோ அப்படி நடைபெற்றதா என்றால் இல்லை.
அனைவரும் மற்றவர்களைக் குறைகூறிக் கொண்டே வெளியேறினர். அவர்களின் இறை நம்பிக்கையை நாம் குறைத்து மதிப்பிடவில்லை.
ஆனால் இறை உணர்வாளர்களாக நாம் அங்கு எப்படி பொறுப்புடன் நடந்துகொள்ள முடிந்ததா என்பதுதான் கேள்வி.
எந்த நம்பிக்கையில் அங்கு சென்றார்களோ அந்த மனோபாவத்தில் பிராத்தனை செய்ய முடிந்ததா?, செய்ய முடியுமா? என்றால் முடியாது.
அந்த அளவுக்கு குழப்பம், நெறிப்படுத்தாத கூட்டம், எந்த ஒழுங்குமுறையும் இல்லாத ஒரு கோவில் நிர்வாகக் கட்டமைப்பு என்ற அனைத்தையும் பார்க்கும்போது, ஒரு அமெரிக்கப் பொருளாதார நிபுணர் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “குழப்பத்தில் செயல்படும் ஒரு நாடு” என்று கூறியது எவ்வளவு உண்மை என்று புரிந்தது.
அங்கு எந்த இடத்திலும் வரிசை ஒழுங்கு கிடையாது. வலுத்தவன் மற்றவரை தள்ளிவிட்டு முன் சென்று விடலாம்.
மனிதரில் ஒளிந்திருக்கும் தெய்வத் தன்மையைக் கொண்டுவரவும், அவரிடம் இருக்கும் அசுரத்தன்மையைப் போக்கி மனிதத் தன்மையை மெருகேற்ற பிரார்த்தனை என்பது ஒரு பயத்தில், ஒரு மூடநம்பிக்கைக்குள் கொண்டு சென்று வணிகமாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
கோவிலுக்குச் செல்வோர் கோவிலை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டுமோ அந்தளவுக்கு அவர்கள் பழக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் நாம் ஆண்டவனுக்குச் செய்யும் சேவையாக இருக்க முடியும்.
வாகனங்கள் முறையற்று நிறுத்தியதன் விளைவு வாகனங்கள் எடுக்க முடியாமல் திணறினர்.
செருப்புக்கள் வீதிகளில் குவிக்கப்பட்டு அவரவர் செருப்பைத் தேடி எடுக்க அவர்கள் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாது.
அந்த மூலவர் அலங்காரத்தைப் பார்த்து தரிசிக்க அதுவும் தீபம் காட்டும்போது ஒருவர்மேல் ஒருவர் சாய்வது அடுத்த ஒரு வித்தியாசமான நிகழ்வு.
ஒரு புனிதமான இடத்தை எப்படிப் புனிதம் காப்பது என்பதற்கு எந்தப் புரிதலும் அற்று அவரவர் தேவையைப் பூர்த்தி செய்ய எந்த ஒழுங்குமற்ற செயல்பாடுகளிலிருந்து நம்மால் உணர முடிந்தது.
இந்திய நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது. அவரவர் நம்பிக்கையில் செயல்பட. ஆனால், அதில் ஒரு அறிவியல் இருக்கிறதே.
அங்கு ஒரு சுத்தம் சுகாதாரம் பேண வேண்டுமே, அங்கு வரிசையில் நின்று, அவரவர் செய்ய வேண்டிய நேர்த்திக்கடன்களைச் செய்து அவரவர் நேரத்தில் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இன்றி செய்யும் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டுமே.
அட்சதை என்பது விவசாயியின் உழைப்பில் வந்த புனிதப்பொருளை காலில் போட்டு மிதிப்பது எவ்வளவு தாழ்வான செயல். முதலில் வந்தவர் முதலில் செல்வதுதானே நியாயம். முண்டியடித்துக் கொண்டு மற்றவரை இடித்து பின் தள்ளிச் செல்வது என்னவித முறைமை.
அங்கு ஒரு நிர்வாகம் இருக்கத்தானே செய்கிறது. அதற்கு இதை ஒழுங்குபடுத்த எந்தப் பொறுப்பும் இல்லையா? வாகனங்கள் நிறுத்த முறையான இடம் தந்து கட்டணம் வசூலித்து வாகனங்களைப் பாதுகாத்து அவைகளை எடுக்க ஏதுவாக வரிசையாக இடைவெளியிட்டு நிறுத்த ஏற்பாடு செய்ய முடியாதா?
அவ்வளவு கூட்டத்தையும் ஏன் வரிசைப்படுத்தி கோவிலுக்குள் சென்று வெளியேற முறைமை செய்ய இயலவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.
எங்கு சென்றாலும் வரிசையில்தான செல்ல வேண்டும் என்ற நடத்தை நமக்கு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை.
அடுத்து எங்கு சென்றாலும் அடுத்தவர் மேல் உரசக்கூடாது என்ற எந்தச் சிந்தனையும் இல்லை.
அங்கு உமிழ்நீரைத் துப்புவதும், இருமுவதும், வழியும் வியர்வையைத் துண்டை வைத்து துடைப்பதற்குப் பதில் அதை வழித்து வீசுவதும், நம் பழக்கமாய் வந்துவிட்டது.
இந்த நடத்தையியல் எவ்வளவு சுகாதாரமற்றது என்பதை இன்றும் நம் மக்களுக்கு ஏன் புரிய வைக்க முடியவில்லை.
அங்கு வந்தவர்களில் பெரும்பாலோர் ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டவர்கள், சிலர் பயத்தால் ஆண்டவன் சன்னதியில் தப்பித்துக் கொள்ளலாம் என்று சோசியக்காரர்களால் துரத்தப்பட்டவர்கள், பலர் வேடிக்கை பார்ப்பதற்காக, சிலர் அழைப்பின் பெயரில் வந்தவர்கள்.
அந்த நம்பிக்கையை நாம் கொச்சைப்படுத்தவில்லை. எதுவானாலும் பொது ஒழுக்கம், ஒரு சில அறிவியல் நடைமுறைகளை நம் சமூகத்திற்குக் கற்றுக் கொடுக்கவில்லை.
அப்படி ஒரு கல்வியே நம் பாடத்திட்டத்தில் இல்லை. ஒரு வாழ்வியல் கல்வி இல்லாத கல்வி, சான்றிதழ் கல்வியாக இருந்து பயன் என்ன?
‘க்யூ’ வரிசை என்பது ஒரு அறிவியல். அது அறிவியல் மட்டுமல்ல அது ஒரு நியதி. அது ஒரு நீதி. முன் வந்தவர் முன் செல்வது, பின் வந்தவர் பின் செல்வது.
எந்த இடத்திலும் ஒருவருக்கு எவ்வளவு ஒதுக்கப்படுகிறதோ அந்த நேரத்தில் மட்டுமே அங்கு நிற்க முடியும். மீறுவது என்பது அடிப்படையை தார்மீகத்தை மீறுவதாகும்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், ஒருவருக்குக் கிடைப்பதுபோல் மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு பொதுக் கட்டுப்பாடுகளை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒன்று அது சுயக்கட்டுப்பாட்டில் வரும். மற்றொன்று நம்மை யாராவது மேய்க்க வேண்டும்.
இன்று நாம் நம்மை மேய்ப்பதற்கு மேய்ப்பன் தேடும் சமுதாயமாக வாழ்கிறோம். நம்மை நாம் ஒழுங்குபடுத்திக் கொண்டு வாழ்வதில்தான் சுயமரியாதை, தன்மானம் காக்கப்படுகிறது என்று புரிதலற்று, யாராவது கம்பு எடுத்துக் கொண்டு வந்து தட்டி, நெறிப்படுத்துவதில் வாழ்க்கையை கட்டமைத்திருக்கிறோம்.
அந்த கோயில் வீதி வழியாக பேருந்து செல்ல வேண்டும். அந்த வீதியில் வைத்திருக்கும் இரு சக்கர வாகனங்கள் பாதி சாலையை ஆக்கிரமித்து இருக்கிறது. மீதி சாலையில் கடையில் தேநீரை வாங்கி வீதியில் நின்று குடிக்கின்றனர்.
இவற்றை பஸ் கண்டக்டர் வந்து ஒழுங்கு செய்து அவருடைய பேருந்தை எடுத்துச் செல்வதைப் பார்க்கும்போது நாம் எவ்வளவு வாழ்க்கையை அலங்கோலமாகவும் குழப்பமாகவும் வைத்திருக்கிறோம் என்பது நமக்குப் புரியும்.
அது மட்டுமல்ல, எங்கு சென்றாலும் இந்தக் கூட்டத்தில் நான் பெற வேண்டியதை பெற்றுவிட வேண்டும். ‘எப்படியாவது’ என்பதற்குமேல் எந்த பொதுச்சிந்தனையும் அற்று நாம் அனைவரும் செயல்படுகிறோம்.
அண்மையில், நகரத்தார்கள் நடத்திய ஒரு கோவில் குருபூஜைக்குச் சென்றிருந்தேன். அதை நடத்தியவர் ஒரு பேராசிரியர். அங்கு அன்னதானம் வழங்கினார்கள். கட்டுக்கடங்காத கூட்டம். ஆனால் தன்னார்வர்களை வைத்து வரிசைப்படுத்தி, வரிசையில் அனுப்பி அனைவருக்கும் உணவு பரிமாறினர்.
அது மட்டுமல்ல, அனைவருக்கும் உணவு இருக்கிறது என்பதைக் கூறிக்கொண்டேயிருந்தார்கள். எவருக்கும் உணவில்லை என்று விடமாட்டோம் என்ற உறுதிமொழியையும் கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள்.
மத நம்பிக்கை, வழிபாடு, பிராத்தனை, ஆன்மீகம் அனைத்தும் தனிமனிதர்கள் சார்ந்தது. ஆனால், இவை அனைத்தும் எதற்காக என்றால் பக்குவமாக மனித வாழ்க்கையை அனைவருடனும் இணக்கமாக, அமைதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தானே.
அறமற்று, ஒழுக்கமற்று, நியாயமற்று, நியதியற்ற, நீதியற்று சுயநலம் பேண எந்த மதமும் கூறவில்லையே.
எந்த இடத்தையும் அசுத்தமாக்கக் கூறவில்லையே, தண்ணீரை வீணடிக்கவோ அசுத்தப்படுத்தவோ கூறவில்லையே.
ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நற்செயலா என்ற கேள்வியுடன்தான் செயல்படுவார்கள்.
உண்மையிலேயே ஆன்மீகவாதிகள், இறை நம்பிக்கை உள்ளவர்கள் எவருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள். எதையும் பாழ்படுத்த மாட்டார்கள், எதையும் அசுத்தப்படுத்த மாட்டார்கள். அனைத்திலும் இறைவனைப் பார்ப்பார்கள்.
கோவில்களில் மட்டுமல்ல அனைத்திலும் இதனை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் வினோ கூறிய ஒரு கருத்தை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
“ஓர் இடம் அசுத்தமாக இருந்தது.
அந்த அசுத்தங்களை அப்புறப்படுத்தினேன்.
அந்த இடத்தில் அசுத்தம் போய்விட்டது.
அந்த இடத்தில் அசுத்தம் போய்விட்டது.
அடுத்து அந்த இடத்தை மீண்டும் சுத்தம் செய்தேன்.
அந்த இடம் தூய்மையானது.
அடுத்து அந்த இடத்தை மீண்டும் சுத்தம் செய்தேன்
அந்த இடம் அழகானது
அடுத்து அந்த இடத்தைச் சுத்தம் செய்தேன்
அந்த இடம் புனிதமானது.
மீண்டும் அந்த இடத்தைத் துடைத்தேன்
அது ஒரு உணர்வானது
மீண்டும் அந்த இடத்தைக் கூட்டினேன்
அது ஒரு ஆன்மீகமானது.”
தூய்மைக்கு எவ்வளவு உயர்வு உள்ளது என்பதை நம் மக்களுக்கு இன்று எடுத்துக் கூறுவது யார் என்பதுதான் கேள்வி. இதற்கான கல்வி எங்கே இருக்கிறது.
வாழ்க்கையில் ஆன்மீகமாக இருப்பது, பக்தியுடன் இருப்பது, தவறல்ல. ஆனால் வாழ்வில் சாதாரணமாக கடைப்பிடிக்க வேண்டிய அறிவியலைக் கடைப்பிடிக்க நம் மக்களுக்கு நாம் கற்றுத் தரவில்லை.
ஒரே ஒரு பணி. அதாவது, தான் உருவாக்கும் குப்பைக்கு தான்தான் பொறுப்பு. அதை மக்க வைக்க வேண்டிய அனைத்தும் நானே செய்வேன்.
மக்க இயலாதவைகளை தரம் பிரித்து உள்ளாட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க மக்களின் மனநிலையில் ஒரு மாற்றம் வந்துவிட்டால் இந்தியாவில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம்.
எதற்கும் அரசாங்கதை கைகாட்டிவிட்டு அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் குறை கூறிவிட்டு, சமூகமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் காலத்தைக் கழித்து விட்டோம்.
இனிமேலும் நாம் அப்படி இருக்க முடியாது. எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது.
பொறுப்பு மிக்கவராக சமுதாயத்தில் புரிதலுடன் செயல்படத் தேவையான அறிவியலைக் கற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் குடிமக்களாக. அதேபோல் மற்றவர்களையும் செயல்பட வைப்பதுதான் இன்றைய மிக முக்கியத் தேவை.