சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்ற முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லா, அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுடன் அங்கிருந்து உரையாடி இருக்கிறார்.
ஹாம் ரேடியோ மூலம் நடந்த இந்த உரையாடலில் தனது விண்வெளிப் பயணத்தைப் பற்றியும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தனது அனுபவங்களைப் பற்றியும் அவர்களுக்கு தெளிவாக விளக்கி இருக்கிறார் ஷ்பான்ஷு சுக்லா.
இந்த உரையாடலின்போது மாணவர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் புவியீர்ப்பு விசை இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் மாணவர்களின் முதல் கேள்வியாக இருந்துள்ளது.
அதற்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா, “இதுவரை பூமியில் புவியீர்ப்பு விசையுடன் வாழ்ந்து வந்த எனக்கு, இப்போது விண்வெளி ஆய்வு மையத்தில் புவியீர்ப்பு விசை இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
புவியீர்ப்பு விசையில்லாத சூழலில் ஒருவர் வாழ்வது அவரது உடல்நலத்தை பாதிக்கும். குறிப்பாக தசைநார்கள் மற்றும் எலும்புகளின் நலனை பாதிக்கும்.
அப்படி பாதிக்காமல் இருப்பதற்காக ட்ரெட்மில்லில் நடப்பது, சைக்கிளிங் செய்வது போன்ற உடற்பயிற்சிகளை தினமும் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார் சுக்லா.
விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற தனக்கு சிறிது நேரத்தில் தனக்கு ஸ்பேஸ் சிக்னஸ் ஏற்பட்டதாகவும் அதை சரிசெய்ய மருந்து எடுத்துக்கொண்டதாகவும் சுபான்ஷு சுக்லா மாணவர்களிடம் கூறியிருக்கிறார்.
மாணவர்களின் அடுத்த கேள்வி தூக்கத்தைப் பற்றியதாக இருந்துள்ளது.
விண்வெளியில் எந்த நேரத்தில் படுத்து தூங்குகிறீர்கள் என்று மாணவர்கள் சுக்லாவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த சுக்லா, “விண்வெளி ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, இங்கு இரவு பகல் என்று எதுவும் இல்லை. 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுவதால், ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தைப் பார்க்கிறோம்.
அதனால் இங்கு இரவும் பகலும் அடிக்கடி மாறிக்கொண்டு இருக்கின்றன. அதனால் நாங்கள் கிரீவ்விட்ச் மெரிடியன் நேரத்தின்படி இரவு நேரத்தைக் கணக்கிட்டு உறங்குகிறோம்” என்றார்.
”இந்தியாவில் இருந்து உங்களைப் போன்ற மாணவர்கள் பலரும் எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்களை வேற்கொள்ள வேண்டும். அதற்கு நானும் உங்களுக்கு உதவி செய்வேன். இது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவேன்” என்று மாணவர்களிடம் கூறிய சுக்லா,
“விண்வெளிக்கு சென்று ஆராய்ச்சிகளை செய்ய ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு படிப்புகள் மிகவும் உபயோகமாக இருக்கும். அதனால் அந்த பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது” என்று அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
சுபான்ஷு சுக்லா இப்போது ‘விண்வெளியில் விவசாயம்’ உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் விண்வெளிக்கு செல்லும்போது, அங்கு 2 வாரங்கள் தங்கி ஆராய்ச்ச்சிகளை மேற்கொள்வார் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால், இப்போது அவர் திரும்பி வருவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் 3 வாரங்கள் தங்கி ஆராய்ச்ச்சிகளை மேற்கொள்ளும் அவர், ஜூலை 14 வாக்கில் பூமிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூமிக்கு திரும்பிய பிறகு நாட்டின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர் இதேபோல் மாணவர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு வழிகாட்டுவார் என்று நம்புவோம்.
– பி.எம்.சுதிர்